என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்த குழியை இன்ஸ்பெக்டர் மூடியதால் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகன சிரமத்தை போக்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் மம்பட்டியை எடுத்து களமிறங்கி குழியை மூடினார்.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பைப் லைன் பதிக்கும் பணி, பாதாள மின் கேபிள் பதிக்க ரோடுகள் தோண்டப்பட்டுள்ளதால் குண்டும் குழியுமாக சாட்சி தருகிறது.

    குண்டும் குழியுமான ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது, பறக்கும் புழுதிகளால் கடைகளில் அமர்ந்திருப்போர் பெரும் அவதிப்படுகின்றனர்.

    இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே மேட்டூர் ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டாமல் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது.

    நேற்று மதியம் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், அங்கு பணியில் இருந்தார். நசியனூர் பகுதியில் இருந்து வாகனங்கள் குழி இருந்த பகுதியில் வர முடியாமல் சிரமப்பட்டன. திடீரென பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தனசேகரன் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தாமாகவே முன் வந்து மம்பட்டியை எடுத்து குழியை மூடினார்.

    அந்த வழியாக சென்றவர் இந்த காட்சியை பார்த்து ஆச்சரியமாக பார்த்தனர். குழியை சீரமைக்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நேரடியாக களமிறங்கி குழியை மூடியதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலை தலங்களில் பரப்பிபினர்.

    தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    கோபி அருகே மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட லாரி டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி வாயில் வி‌ஷத்தை ஊற்றி கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). ரிக்வண்டி லாரி டிரைவர் அதே ஊரை சேர்ந்தவர் மணிமோகன். விவசாயி.

    சம்பவத்தன்று இரவு மணிமோகனும் அவரது மனைவி செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து விஜயகுமார் மணிமோகனின் மனைவியை தட்டி எழுப்பி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி சத்தம் போட்டார். உடனே சுதாரித்த விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமோகனும் அவரது நண்பர்களும் விஜயகுமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அவ்வையார் பாளையம் பக்கம் வந்தார். இதை கண்ட மணிமோகன் மற்றும் 3 பேரும் சேர்ந்து விஜயகுமாரை பிடிக்க விரட்டினர். இதை கண்டு அவரும் ஓட்டம் பிடித்தார்.

    சின்னகுளம்பிரிவு மாரியம்மன் கோவில் அருகே விஜயகுமாரை மணிமோகன் உள்பட 4 பேரும் சேர்ந்து பிடித்து சரமாரியாக தாக்கினர். இரும்பு கம்பி மற்றும் பிளாஸ்டிக் தடியால் அடித்தனர்.

    இதில் நிலை குலைந்து கீழே விழுந்த விஜயகுமார் வாயில் அவர்கள் வி‌ஷத்தை ஊற்றினர். அத்துடன் விடாமல் மேலும் விஜயகுமார் வந்த மோட்டார் சைக்கிளால் அவரது கழுத்தில் ஏற்றினர். இதில் சிறிது நேரத்தில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிறகு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் விஜயகுமார் இறந்து கிடந்த இடத்தை கண்டு கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த விஜயகுமார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொடூர கொலையில் தலைமறைவாக உள்ள மணிமோகன் மற்றும் சதிஸ்குமார் பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது எனவும் இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்தார். இன்று காலை ஈரோடு பெரியார் நகர் வீதிகளில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்திற்கு அவர் சென்று பெரியார் -அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தி எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் தி.மு.க எதிர்ப்பு கிடையாது. இந்தி மொழி திணிப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்.

    பேனர் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினோம். மூன்று ஆண்டுகளாகவே பேனர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இளைஞர் அணியில் உள்ள எந்த நிகழ்ச்சியிலும் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்று சொல்லி உள்ளோம். நிர்வாகிகள் அதை கடைபிடித்து வருகிறார்கள்.

    அதைப்போல நடிகர் விஜய்யும் பேனர் பற்றி பேசியிருக்கிறார். ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார். இது பாராட்டத்தக்கது.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டிருந்தார். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

    இந்நிலையில் மீண்டும் ஒரு வெளிநாட்டு பயணம் செல்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடத்திய முதலீட்டாளர் மாநாடு குறித்து தெளிவான பதில் எதுவும் இல்லை. இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் போதாவது தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

    இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பெரியார் வாழ்ந்த வீட்டிற்கு வந்தது எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே காலனியில் நடந்த இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ் எல் டி சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், பொருளாளர் பி கே பழனிச்சாமி, முன்னாள் எம்பி கந்தசாமி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், கேபிள் செந்தில்குமார், தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால், முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    சாலை விபத்தில் நண்பர்கள் இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம், சின்னகாளியூர் சேர்ந்தவர் ரஞ்சித் (எ)தங்கராஜ் (வயது30). மெக்கானிக் கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). தங்கராஜ், ரமேஷ் இருவரும் நண்பர்கள்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் தங்கராஜிம், ராமேசும் மோட்டார் சைக்கிளில் கணக்கம் பாளையத்திலிருந்து கள்ளிப்பட்டி செல்வதற்காக பவானி-சக்தி ரோட்டில் வந்துகொண்டிருந்தனர்.

    கணக்கம்பட்டி அருகே பழைய பிரபு குமார் தியேட்டர் அருகே வந்தபோது மோட்டர் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் தங்கராஜிக்கும், ரமேசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டார். தங்கராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கவிதா (வயது45). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள செமடாபாளையம் ஊரை சேர்ந்தவர்.

    இவர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது சிவியார் பாளையம் என்ற இடத்தில் ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கவிதா அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றனர். பறிக்கும் போது தாலிக்கொடி இரண்டாக அறுந்ததால் தாலிக்கொடியுடன் கவிதா கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    கீழே விழுந்த கவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோனியா காந்தி மற்றும் ராகுல் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையிலான காங். நிர்வாகிகள் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி. சக்திகணேசனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவரும், 22 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருபவருமான, சோனியா காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் ராகுல் காந்தி பற்றியும் அவர்கள் குடி உரிமை பற்றியும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 18-ந் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

    அமைச்சரின் பேட்டியானது காங்கிரஸ் கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் கொதிப்படைய செய்துள்ளது.

    எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு பெரியசாமி, மண்டல தலைவர் திருச்செல்வம், எஸ்.டி பிரிவு சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் பாபு என்கிற வெங்கடாச்சலம் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனகராஜ் வின்சென்ட் கண்ணப்பன் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்சா உள்பட பல்வேறு நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஈரோட்டிற்கு வருகை புரிகிறார். இளைஞர் அணியின் உறுப்பினர் முகாமை அவர் தொடங்கி வைக்கிறார்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகா‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாளை (சனிக்கிழமை) காலை8.30 மணி அளவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவகத்தை பார்வையிடுகிறார்.

    பிறகு 9.30 மணி அளவில் காளைமாடு சிலை அருகில் உள்ள சிமினி ஹோட்டல் அருகில் இளைஞர் அணியின் உறுப்பினர் முகாமை தொடங்கி வைக்கிறார்.

    காலை 10.30 மணி அளவில் ஈரோடு கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் மூலமாக மொடக்குறிச்சி தொகுதி,கொடுமுடி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் குளம் தூர்வாரி முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். பிறகு 12.30 மணி அளவில் ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 2 மணி அளவில் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ . ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதுசமயம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட , மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, ஊராட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் சார்பு அணியினர் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    நம்பியூர்:

    அத்திக்கடவு- அவினாசி திட்ட 5-வது நீரேற்று நிலையம் வரப்பாளையத்தில் அமைய உள்ளது. அதற்கான பூமி பூஜை நம்பியூரில் இன்று மதியம் நடந்தது.

    இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு இந்த பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அரசு விவசாயிகள் பக்கம் எப்போதும் இருக்கும். இன்று இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

    அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை உல்லாசத்தில் ஈடுபட வைத்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). வாட்டர் பில்டர் சர்வீஸ் ஊழியர் ஆவார்.

    இவரிடம் ஈரோடு சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சரோஜா (72) என்ற பெண் ‘‘தனது வீட்டுக்கு வாட்டர் பில்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் வாருங்கள்’’ என அழைத்தார்.

    அதன் படி சசிகுமாரும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் இருந்தனர்.

    அப்போது சசிகுமாரிடம் வந்த சரோஜா ‘‘என் வீட்டில் 2 பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உல்லாசமாக ஜாலியாக இருக்கலாம். அதற்கு ரூ.1,000 கொடுத்தால் போதும்’’ என்று கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகுமார் ‘‘என்னிடம் இப்போது பணம் இல்லை. வெளியே போய் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன்’’ என்று கூறினார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்த 2 பெண்களிடம் பேசினார். அப்போது அந்த பெண்கள் ‘‘நாங்கள் அப்படிப்பட்ட பெண்கள் இல்லை. இந்தம்மா (சரோஜா) எங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துகிறார். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்கள். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் எடுத்து வருவதாக கூறி உள்ளேன். வெளியே சென்று உங்களை மீட்கிறேன் என்று கூறியபடி வெளியே சென்ற சசிகுமார் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். பிறகு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய சரோஜாவை போலீசார் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட 2 பெண்களும் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் டைமிங் தகராறில் தனியார் மற்றும் அரசு டிரைவர்கள் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாததில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நாமக்கல் மாவட்டம் எஸ். பி.பி. காலனி வரை சென்று வரும் அரசு பஸ், தனியார் பஸ் டிரைவர்கள் இடையே டைமிங் தகராறு ஏற்பட்டது.

    காளைமாடு சிலை அருகே அரசு பஸ் முன்பாக சாலையை மறித்து தனியார் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதன்பின் இறங்கிவந்து அரசு பஸ் டிரைவருடன் வாக்குவாதம் செய்தார் .

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். சாலையில் இரண்டு பஸ்களும் அடுத்தடுத்து சாலையை மறித்து நின்றதால் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இதனால் காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ரெயில்வே நுழைவு பாலம் பகுதிகளிலிருந்து வந்த வாகனங்கள் காந்திஜி சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு வந்து இரண்டு பஸ் ஓட்டுனர்களையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிபுணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    ஈரோடு:

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிபுணர்வு பிரச்சாரம் பவானி நகரம் ஒன்றிய பகுதி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.

    பிரச்சார பயணத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குறிப்பாக 5, 8 -ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு வந்தால் ஏழை குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என பிரச்சாரத்தில், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அமுதன் துரையரசன், கோவை மாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.

    இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் பால்ராஜ் . பேரூர் செயலாளர் வேலு, அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் .சண்முகம், துணைச் செயலாளர் கே.கே.மூர்த்தி, வணிகர் அணி அமைப்பாளர் சக்தி வேந்தன், .மாநில துணைச்செயலாளர் குருநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஈரோட்டில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை அடுத்து மழை பெய்ய தொடங்கியது. நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் கொட்டியது.

    மேலும் மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, கவுந்தபாடி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கூடி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழையையொட்டி ஈரோடு கொல்லம் பாளையம், ஆணைக்கல் பாளையம், 46 புதூர், சோலார், லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழைவெள்ளம் ஆறாக சாலையில் ஓடியது. கடந்த ஒருவாரமாக கவுந்தப்பாடி சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

    இரவு நேரங்களில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. கீழ்பவானி பாசனத்திட்டத்தில் விவசாயிகள் நாற்றங்கள் அமைத்து விதை நெல் விட்டு வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் உழவு போடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வயலை பதப்படுத்தி வரப்பமைத்து நாற்று நடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழையால் இந்த பணிகளை செய்ய ஏற்றதாயுள்ளது.

    கவுந்தப்பாடியில் கொட்டிதீர்த்த மழையால் மழைவெள்ளம் ஆறாக சாலையின் இருபுறத்தையும் தொட்ட படி மழை வெள்ளம் சென்றது. வாகனங்கள் மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சென்றதால் மழை தண்ணீர் எஞ்ஜனில் புகுந்ததால் பழுதாகி நின்றது.

    இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்கள் மழைநீரில் வண்டியை தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் 2 மணிநேரம் மின்தடை ஏற்றபட்டது. மழைக்கு பின் குளிந்த காற்று வீசியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-36

    பவானி-16.2

    கொடுமுடி-15.8

    கவுந்தப்பாடி-75.2

    எலந்தகுட்டைமேடு-33.2

    கொடிவேரி-31.2

    வரட்டுபள்ளம்-4.2

    குண்டேரிபள்ளம்-3 

    ×