search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck driver killed"

    நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது.

    இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் ஒருவர் பலியானார். அதன் விவரம் வருமாறு:-

    நெய்வேலி வடக்குமேலூரை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் சந்தோஷ்குமார் (வயது 47). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார், அவரது மனைவி வளர்மதி, மகள் ஈஸ்வரி, பச்சமுத்து, அவரது மனைவி கல்யாணி ஆகிய 5 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே மழையால் நனைந்து இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சந்தோஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர்.

    இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிசிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது பற்றி அறிந்ததும் வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பா.ம.க. முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டார். பின்னர், லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்ட கோ.ஜெகன், பசுமை வீடு கட்டித்தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ×