என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே மதுபாட்டில் விற்ற 15 பேரை கைது செய்த போலீசார் 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, பெருந்துறை, கோபி உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் ரோந்து சென்றனர்.

    இதில், சென்னிமலை, பெருந்துறை, பவானிசாகர், வெள்ளித்திருப்பூர், பர்கூர், பவானி போன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், பவானிசாகர் ஏரங்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதேபகுதியை சேர்ந்த அரைக்காதன் என்ற பழனிச்சாமி(வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    டி.என்.பாளையம் அருகே வேட்டையாட பயன்படுத்தப்படும் கள்ள துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிஎன்.பாளையம்:

    டிஎன்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் வேட்டை சாமி கோவில் தோட்டம் என்ற இடத்தில் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை ஒருவர் வைத்திருப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாபுதூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(வயது 60) என்பவரை பிடித்து விசாரித்ததில், அரசு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டு பன்றியை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, வேட்டையன் என்பவர் மீது பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    பெருந்துறை அருகே நள்ளிரவில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பெருந்துறை:

    கோவையிலிருந்து ஓசூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சின்னுராஜ் (வயது 50) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவரது அருகே ஓமலூரை சேர்ந்த கண்டக்டர் உதயகுமார் (வயது 26) அமர்ந்திருந்தார். பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர்.

    நள்ளிரவு 12.15 மணியளவில் பஸ் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவில் வந்தபோது எதிரே ஒரு போர்வெல் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குன்னத்தூருக்கு செல்வதாக டிரைவர் லாரியை மெதுவாக ஓட்டி அருகே உள்ள மண்பாதையில் திருப்ப எண்ணினார்.

    இதற்காக டிரைவர் லாரியை மெதுவாக ஓட்டிய போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் டிரைவரின் இடபுறம் அமர்ந்திருந்த கண்டக்டர் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெங்களூரை சேர்ந்த மகேஸ்வரி. இவரது மகள் பிரேமா (வயது 16) மற்றும் டிரைவர் சின்ராஜ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பிரேமா பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தால் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னிமலை டவுன் பகுதியில் இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் பகுதியில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க போர்கால நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை 10:00 மணிக்கு தி.மு.க., வினர் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது. மேலும் 26 நாட்கள் ஆகியும் சென்னிமலை டவுன் பகுதிகளில் பல இடங்களுக்கு குடிநீர் சப்பளை செய்யப்படவில்லை.

    தண்ணீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் இருந்தும் சென்னிமலை பகுதிக்கு பற்றாக்குறை நிலவுவது மெத்த போக்கினை காட்டுகிறது. இதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு சென்னிமலை தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் தமிழ்செல்வன், நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர் இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர் சிவக்குமார் உட்பட தோழமை கட்சிகளின் நிர்வாகிகளும் மற்றும் சமூக நல அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து காங்கயம் ரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் குவிக்கப்பட்டனர், இதனால் பரபரப்பு நிலவியது.
    பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளதாக ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப்படையில் எஜூகேசினல் இன்ஸ்டெரக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வரும் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

    பி.எட் பட்டப்படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஆண்களாக இருக்க வேண்டும். 19-1-1995 முதல் 1-7-2000 தேதிக்குள் பிறந்திருப்பவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    பி.எட் பட்டப்படிப்புடன் முதுகலை பட்டிப்படிப்பு படித்தவர்கள் 19-7-1992 முதல் 1-7-2000-ந் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம், உளவியல் அல்லது கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ.ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.
    பவானி அருகே கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஓம்சக்தி நகர் தாளப்பையனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயா (39).

    இவரது கணவர் ஆறுமுகம் இருவரும் அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    விஜயாவுக்கு இடுப்பு வலி மற்றும் தலைவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்தார். மேலும் கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் வெளியே சென்று படுத்து கொண்டார். ஆறுமுகம் இரவு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் சென்றார்.

    அப்போது வீட்டுக்குள் விஜயா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி உடலை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து ஆறுமுகம் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோட்டில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதி மற்றும் ரோட்டோரம் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. அங்கு 85.6 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதி மற்றும் ரோட்டோரம் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் அப்பகுதியில் வயல் மற்றும் தோட்டங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அடுத்தப்படியாக ஈரோடு நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு, சூரம்பட்டி, சம்பத்நகர், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல், வீரப்பம்பாளையம், ஆனைக்கல் பாளையம், சோலார், லக்காபுரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், சாஸ்திரி நகர் உள்பட மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.

    இதையொட்டி மழை வெள்ளம் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதோடு மூலப்பாளையம், கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் மழை தண்ணீர்சிறிய குளம்போல் தேங்கி நிற்கிறது.

    இந்த கனமழையால் ஈரோடு ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்துக்கு செல்லும் வழியில் ரிங் ரோட்டில் உள்ள வாய்க்கால்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து வயல்களில் ஓடியது. ஈரோடு பகுதியில் 62 மி.மீ. மழை பதிவானது.

    மேலும் கவுந்தப்பாடி, கொடுமுடி, பெருந்துறை, கோபி, நம்பியூர், குண்டேரிபள்ளம், கொடிவேரி அணை பகுதிகளில் மழை பெய்தது.

    இந்த கனமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அம்மாபேட்டை- 85.6

    ஈரோடு - 62

    பவானி - 24.4

    கொடுமுடி - 13.6

    மேடு - 9.7

    கொடிவேரி - 6.2

    குண்டேரிபள்ளம்-2.6.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகளான காளி திம்பம், தலமலை வழியாக தாளவாடி செல்லும் மலைப்பாதையில் நள்ளிரவு 11 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கொட்டியது.

    தலமலை, பெஜலட்டி, நெய்தாளபுரம், கோடிபுரம், அரேப்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொண்டு ஓடியது.

    இதே போல் காட்டாற்றில் வெள்ளம் செந்நிறத்தில் பேரிறைச்சலுடன் பாய்ந்து ஓடியது.

    தாளவாடி செல்லும் ரோட்டில் சிக்கள்ளி என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கியது.

    இதனால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் எதுவும் போக முடியாமல் திரும்பி சென்றன.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசார் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரும் சென்று பார்வையிட்டனர்.

    தரைப்பாலத்தை மூழ்க வைத்தப்படி செல்லும் ரோட்டை யாரும் கடக்காத வண்ணம் பார்த்து கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள வன கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பஸ் மற்றும் தனியார் பள்ளி வேன் மூலம் தாளவாடியில் உள்ள பள்ளிகளுக்கு செல்வார்கள். இதனால் பள்ளிக்கு போக முடியாமல் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் ஓரளவு குறைந்தது. இன்று காலை 9 மணிக்கு மேல் வெள்ளம் குறைந்ததும் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    இந்த காட்டாற்று வெள்ளம் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையில் உள்ள சிக்கல்லோ அணையில் போய் சேருகிறது.

    இதை தடுத்து தாளவாடி பகுதியில் ஒரு அணையை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன் மூலம் அந்த பகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கவுந்தப்பாடி அருகே வீட்டு கதவை உடைத்து பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் மூலத் தோட்டத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 37).

    பெருந்துறை சிப் காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் ‘‘பிட்டராக’’ பணி புரிகிறார். மனைவி பெயர் ரங்கநாயகி. ஒரு பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஹாலில் படுத்திருந்த ராமேஸ்வரன் மனைவி ரங்கநாயகி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை (தாலி செயினை) பறித்தனர்.

    இதை கண்டு திடுக்கிட்ட அவர் சத்தம் போட்டார். அவரது கணவர் முழித்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் 3 பேரும் 5 பவுன் நகையுடன் இருளில் தப்பி ஓடி மறைந்து விட்டனர்.

    இதே போல் சலங்கபாளையம் டேங்க் ரோடு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் கோபி பச்சை மலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வரட்டுப்பள்ளம்-குண்டேரி பள்ளம் ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக அணைப் பகுதிகளில் இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டியது. பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அணைப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பவானி சாகர் பகுதியில் 45.4 மி.மீ மழை பதிவானது.

    இதேபோல் கோபி அருகே உள்ள குண்டேரி பள்ளம் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதி அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 46.2 மி.மீ மழையும் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 24 மி.மீ மழையும் கொட்டியது. இதேபோல் கொடிவேரி அணை பகுதியிலும் 15.2 ம.மீ மழை பெய்தது.

    மேலும் நம்பியூர், சத்தியமங்கலம், கோபி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை பகுதியிலும் நேற்று இரவு மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 35மி.மீ, கோபியில் 37மி.மீ, நம்பியூரில் 32மி.மீ, மொடக்குறிச்சியில் 10மி.மீ, அம்மாபேட்டையில் 8.2மி.மீ மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலத்தில் பெய்த மழையால் வரதம் பாளையத்தில் ஒரு வீட்டுக்குள் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது. மேலும் அப்பகுதி மக்களும் இதனால் கடும் அவதி அடைந்தனர். 

    ஈரோடு அருகே குடிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் கிட்டான் (வயது 44).

    இவர் சம்பவத்தன்று பவானி ரோடு நெரிக்கல் மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் கிட்டானை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து கிட்டான் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கருங்கல் பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த முருகேசன் (29), அஜித்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

    பெரும் போராட்டத்திற்கு பின் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைக்கு அருகில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. தன்னுடைய கடைசி மூச்சு வரை அவர் மக்களுக்காக குரல் கொடுத்தார். 

    கருணாநிதியின் அரசியல் பாசறை ஈரோடுதான். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி. 

    கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. இப்போது பெரும் போராட்டத்திற்கு பின் அதேபோல் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தது பெரிய மனநிறைவை தருகிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
    ×