search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்க வைத்து இன்று காலை பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்
    X
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்க வைத்து இன்று காலை பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் பலத்த மழை - தரைப்பாலத்தை மூழ்க வைத்த காட்டாற்று வெள்ளம்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகளான காளி திம்பம், தலமலை வழியாக தாளவாடி செல்லும் மலைப்பாதையில் நள்ளிரவு 11 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கொட்டியது.

    தலமலை, பெஜலட்டி, நெய்தாளபுரம், கோடிபுரம், அரேப்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொண்டு ஓடியது.

    இதே போல் காட்டாற்றில் வெள்ளம் செந்நிறத்தில் பேரிறைச்சலுடன் பாய்ந்து ஓடியது.

    தாளவாடி செல்லும் ரோட்டில் சிக்கள்ளி என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கியது.

    இதனால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் எதுவும் போக முடியாமல் திரும்பி சென்றன.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசார் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரும் சென்று பார்வையிட்டனர்.

    தரைப்பாலத்தை மூழ்க வைத்தப்படி செல்லும் ரோட்டை யாரும் கடக்காத வண்ணம் பார்த்து கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள வன கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பஸ் மற்றும் தனியார் பள்ளி வேன் மூலம் தாளவாடியில் உள்ள பள்ளிகளுக்கு செல்வார்கள். இதனால் பள்ளிக்கு போக முடியாமல் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் ஓரளவு குறைந்தது. இன்று காலை 9 மணிக்கு மேல் வெள்ளம் குறைந்ததும் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    இந்த காட்டாற்று வெள்ளம் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையில் உள்ள சிக்கல்லோ அணையில் போய் சேருகிறது.

    இதை தடுத்து தாளவாடி பகுதியில் ஒரு அணையை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன் மூலம் அந்த பகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×