என் மலர்tooltip icon

    ஈரோடு

    நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக வேதிப்பொருள்கள் கலந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், உத்தரவின்படி கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடோன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுச் சர்க்கரையினை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாட்டுச்சர்க்கரையில் சட்டத்திற்கு புறம்பாக வேதிப்பொருள் மற்றும் அஸ்கா கலந்து தயாரிக்கப்பட்டதாக சந்தேகித்த 9 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நாட்டுச்சர்க்கரை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம், நாட்டுச்சர்க்கரையில் ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மற்றும் அஸ்கா கலந்து தயாரிக்கக்கூடாது என நியமன அலுவலர் தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்ற ஆய்வுகள் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆய்வின்போது அஸ்கா மற்றும் வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி சட்டரீதியான மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருள் தரம் குறைவு குறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென ஏறி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் பெரிய வெங்காயத்தின் விலை கூடி உள்ளது. முன்பு சின்ன வெங்காயத்தின் விலையை விட பெரிய வெங்காயத்தின் விலை மிகவும் குறைவாக இருக்கும். சின்ன வெங்காயத்தை அதிக விலைக்கு வாங்க முடியாத மக்கள் பெரிய வெங்காயத்தை வாங்கி வந்தார்கள்.

    இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பெரிய வெங்காயத்தை வாங்காமல் சின்ன வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள்.

    ஈரோட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. ரூ.55 ஆகி 60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    அதே சமயம் சின்ன வெங்காயம் கொஞ்சம் கூடி 35 ரூபாய் மற்றும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    கோபி:

    கோபியில் தனியார் திருமண மண்டபங்களில் வளைகாப்பு திருவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு 280 பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளையும், 298 பேருக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து 228 மதிப்புள்ள தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

    இதில் மாவட்ட பால் வளத்தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, தாலிக்குத் தங்கம், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பெட்டகம், கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற தொட்டில் குழந்தை திட்டம் உள்பட பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    தற்போது தங்கத்தின் விலை 1 பவுன் ரூ.28 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் இது வரை 18 ஆயிரத்து 783 பேருக்கு ரூ.146 கோடி மதிப்புள்ள தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் 45 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017-18 மாணவர்களுக்கு விரைவில் மடிகணினி வழங்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை மிஞ்சம் வகையில் தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    காலத்தைப் பற்றி கவலையில்லை. மாணவ, மாணவிகளை சிறந்த கல்வியாளராக மாற்ற வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 1,000 ஆங்கில வார்த்தைகள் கொண்ட சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் முதலமைச்சர் வெளியிட உள்ளார். தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் இண்டர்நெட், கம்ப்யூட்டர் வசதியடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் மாருதிநகரை சேர்ந்தவர் குமார் (வயது 25). மேல் நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் அருகில் உள்ள மெடிக்கல் கடையில் மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. இந்நிலையில் குமாரின் உடல்நிலை மோசமானது.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதி அடைந்து வருகிறார்கள்.

    மொடக்குறிச்சியில் நள்ளிரவில் 2 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று இரவு தங்கவேலும் அவரது மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் மர்ம ஆசாமி நுழைந்தான்.

    திடீரென கதவை உடைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தங்கவேலு லைட்டைப் போட்டார். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம ஆசாமி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி விட்டான்.

    இதேபோன்று அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்த ஒரு வீட்டிலும் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் திருட முயற்சி செய்துள்ளான். அங்கும் அவனது முயற்சி எடுப்படாததால் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    டி.என்.பாளையம்:

    நஞ்சை புளியம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது44). இவர் பல ஊர்களுக்கு சென்று பட்டி போட்டு அப்பகுதிலேயே ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் சுமார் 2 மணியளவில் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை சஞ்சீவராயன் கோவில் வனத்தை ஒட்டிய பகுதியில் பழனிச்சாமி ஆடுகளை மேய்ந்து கொண்டிருந்தார்.

    ஆடுகளை மேய்த்து விட்டு அருகில் இருக்கும் சஞ்சீவிராயன் குளத்தில் குளிக்க சென்ற பழனிச்சாமி குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

    இவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். அந்த வழியாக வந்தவர்கள் சம்பவத்தை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபி தீயணைப்புதுறையினர் பழனிசாமி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி மேட்டுவளவு சுப்பணன் வீதியை சேர்ந்தவர் பச்சியப்பன்(48). தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (44). பாப்பாத்தி அவரது கணவருடன் குடும்ப பிரச்சனை தொடர்பாக கோபித்து கொண்டு கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள அவரது அண்ணன் முத்துச்சாமி வீட்டிற்கு சென்றார். பின்னர் சமாதானம் அடைந்து, அவரது வீட்டிற்கு சென்றார். 

    இருப்பினும் மனவேதனையில் இருந்த பாப்பாத்தி, சம்பவத்தன்று இரவு வீட்டின் அறையை உட்புறமாக தாழிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாத்தியின் அண்ணன் முத்துச்சாமி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே கடன் தொல்லையில் வாலிபர் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டம்பரப்பு பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 38) இவரது மனைவி ஷோபனா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

    அருண் சோலார் பகுதி மாணிக்கவாசகர் காலனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெயரில் கடையை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அருண் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர் இதனால் அருண் நெருக்கடியில் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அருண் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வெங்காயம் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பதினோராவது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    த.மா.கா. இளைஞரணியின் 11-வது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து சுணக்கமான இடங்களில் கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    என்னை பொறுத்தவரை தாய்மொழிக்கு தான் முதலிடம். எதிர்கட்சிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல் பட வேண்டும். தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுபயணம் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தேவையற்றது இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒத்த கருத்து கொண்டிருப்பது நம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அத்திகடவு -அவிநாசி திட்டத்தை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும். கேரளாவில் கடலில் கலக்கும் ஆறுகளை தமிழகத்திற்கு திருப்ப ஆய்வு செய்ய வேண்டும்.

    கடும் வறட்சியால் கோவை திருப்பூர் பொள்ளாச்சி ஈரோடு போன்ற மேற்கு மண்டலத்தில் 10 லட்சம் தென்னை மரங்கள் கருகிவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை மரங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். ஆறுகளில் சாயகழிவு கலப்பதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் சாயகழிவு கலப்பதை தடுக்க வேண்டும். 

    ஈரோடு பகுதியில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

    வெங்காயம் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் மத்திய அருங்காட்சியகம் அமைக்க முன்வர வேண்டும். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விதுறையில் ஜாதி,மதம் போன்றவற்றை கட்டாயபடுத்த கூடாது. புதிய கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவை. உலக அளவில் பொருளாதார சுணக்கம் உள்ளது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாங்குநேரி, விக்ரவாண்டி இடை தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவளித்துள்ளோம். அவர்கள் வெற்றிக்காக தாமாக பணியாற்றும் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது

    பிளக்ஸ் பேனரைபோல நோட்டீஸ் ஒட்டுவதற்கும் கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்பது எனது நிலைப்பாடு இதேபோன்று சுவரில் ஒட்டும் நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் சூரம்பட்டி மண்டல தலைவர் சாம்ராட் அசோக் உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு செக்மோசடி வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 68 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சக்தி கணேசன் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதைப் போன்று பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு செக்மோசடி வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 68 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    இதேபோன்று தொடங்கு செக்மோசடியில் ஈடுபட்ட தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.

    மாவட்டத்தில் சந்தேகப்படும்படி யாரும் நடமாடினால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக மாநில எல்லையில் சாலையை சீரமைக்க கோரி வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இருமாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சிக்கொலா அணை வரை உள்ள 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சரிவர பராமரிக்காமல் உள்ளதால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

    வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மழை பெய்துவருவதால் சாலை எது குழி எது என்று தெரியாமல் தினம் தினம் அவதி பட்டுவருவதாகவும் இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் பல முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சாம்ராஜ்நகர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் மலைப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் 100-க்கும் மேற்பட்டோர் தமிழக கர்நாடக மாநில சோதனைச்சாவடியான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சாம்ராஜ்நகர் மாவட்ட ஆய்வாளர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    சாலையை சீராமைக்கவில்லை என்றால் வரும் திங்கள் அன்று 1000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுடன் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் செய்யப்படும் என்றனர்.

    மறியல் போராட்டம் காரணமாக தமிழக கர்நாடக இடையே ஒரு மணி நேரம் பேக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கோபி அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கூகலூரைச் சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 50). இவரது மகன் ஆண்டவன்.

    ஆண்டவன் கடந்த 9 மாதத்துக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மாதம்மாளுக்கு மகனின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சரியாக சாப்பிடாமல் வேதனையில் காணப்பட்ட மாதம்மாள் வீட்டில் இருந்த போது திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். இதனால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாதம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×