என் மலர்
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து டி.எஸ்.பி எட்டியப்பன் மேற்பார்வையில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்ததாக 2050 பேர் மீதும், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகள், அதிவேகமாக வந்ததாக 30 பேரும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 60 வழக்குகளும், சிக்னலை மதிக்காமல் சென்றதாக 150 வழக்குகளும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 25 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 46 வழக்குகளும் என உள்பட மொத்தம் 3,602 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு அடுத்த சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் காட்டன் துணி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த மே மாதம் டெல்லியை சேர்ந்த சாய் கிரேசன் நிறுவன உரிமையாளர் என அறிமுகமாகிய ஹன்சூ சவுத்ரி (வயது 40) என்ற பெண் தனக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மீட்டர் காடாத்துணி (துணியின் மதிப்பு ரூ. ஒரு கோடியே 60 லட்சம்) தேவைப்படுவதாகக் கூறி அதற்குண்டான பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக தெரிவித்து காடாத்துணியை பெற்று சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தொழிலதிபர் மோகன்ராஜ் தரப்பில் டெல்லிக்குச் சென்று பலமுறை பணம் கேட்டுள்ளனர்.
அப்போது ஹன்சூ சவித்ரி மற்றும் அவரின் இரண்டு சகோதரர்கள் பணம் தர மறுத்தும் பணம் தர முடியாது என கூறி மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, மோகன்ராஜ் சித்தோடு போலீசாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஏமாற்றுப் பேர்வழியான அந்தப்பெண் ஈரோடு பார்க் பகுதியில் இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மீட்டர் காடாத்துணி பெற்றுக்கொண்டு பணம் கொடுக்க மறுத்தது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, டெல்லியை சேர்ந்த ஹன்சூசவுத்ரி என்ற பெண்ணை கைது செய்து ஈரோடு ஜே.எம். 3 கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றது. 30 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.
இந்த பஸ் நள்ளிரவு 12 மணியளவில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் மூலம் கிணறு பகுதியில் வந்த போது எதிரே சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ் டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் மற்ற வாகனங்களில் வந்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர்.
படுகாயம் அடைந்த 9 பேரையும் போலீசார் மீட்டு கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தால் அப்பகுதியில் நள்ளிரவில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் மழை பெய்ததையொட்டி நேற்று நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4070 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்காலில் 650 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கனஅடியும், கீழ்பவானி பிரதான கால்வாயில் 2300 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.90 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு அடுத்த முள்ளாம் பரப்பில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக கோபி, ஆத்தூர், பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும்?. நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் பிரச்சனை தீரும்.
கேரளா சென்ற தமிழக முதல்வர் பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் குறித்து பேசி உள்ளார். மகிழ்ச்சியான செய்தி தான். இதற்கு குழு அமைத்ததோடு நின்று விடக்கூடாது. திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். இந்த திட்டம் மூலம் நீலகிரியில் பெய்யும் மழை முழுமையாக நமது தமிழகத்துக்கு கிடைக்கும்.
உயர் மின் கோபுர திட்டத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கோள்விக்குறியாக உள்ளது. அரசு இது தொடர்பாக விவசாயிகளுடன் பேசி பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை இனியும் தள்ளி போடாமல் நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டும். கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை கொ.ம.தே.க. வலுவாக இருப்பதால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாம் அதிக இடங்களை கேட்டு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
ஈரோடு சூரம்பட்டி பாரதி நகரில் ஒரு காம்பவுண்ட் உள்ளது. இங்கு 6 வீடுகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டினுள் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது. இந்த பாம்பு வேகமாக ஊர்ந்து சென்று அந்த வீட்டின் ஓட்டு விட்டத்தின் மீது ஏறியது. அப்போது இந்த வீட்டில் இருந்த தங்கவேல் என்பவர் இதை பார்த்து பாம்பு... பாம்பு.. என்று சத்தம் போட்டு அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெளியே ஓடி வந்தனர் .
அவர்கள் பாம்பை பார்த்ததும் அதை அடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு கீழே இருந்து மேலே செல்வதும் மேலே இருந்து கீழே வருவதுமாக இருந்தது. இதனால் பயந்துபோன பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் வீட்டின் விட்டத்தின் மேல் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
அப்போது அந்த பாம்பு மீட்பு படையை சேர்ந்த ஒரு வீரரின் கையில் சுற்றிக் கொண்டது. மீட்பு படையை சேர்ந்த மற்ற வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக எடுத்து தயாராக வைத்திருந்த சாக்கு பையில் போட்டு கட்டினர்.
இதையடுத்து அந்த சாரைப்பாம்பு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறும் போது, இந்தப் பகுதியில் ஏராளமான செடி கொடிகள் மரங்கள் உள்ளன. இங்குள்ள புதருக்குள் ஏராளமான பாம்புகள் உள்ளது. இதனால் அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுகிறது.கடந்த வாரம் கூட ஒரு குட்டி பாம்பு இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
எனவே இந்த பகுதியில் அடிக்கடி வீடுகளில் புகும் பாம்புகளை அசம்பாவிதம் நடக்கும் முன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ளது இரும்பு பள்ளம். இன்று காலை இந்த பகுதியில் லேசான காற்றுடன் மிதமான மழை பெய்தது.
அப்போது எதிர்பாராத வகையில் திடீரென ரோட்டோரம் உள்ள ஒரு மின் கம்பம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அங்கு நடந்து செல்ல வில்லை. வாகனங்களும் ரோட்டில் செல்லவில்லை.
மின் கம்பம் முறிந்து நடு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்களள் போக முடியாமல் அணி வகுத்து நின்றன.
மேலும் இந்த பகுதிகளுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகரில் இருந்து மின்சாரம் செல்கிறது. மின் கம்பம் மறிந்து விழுந்ததையொட்டி ஆசனூர், அரேப்பாளையம், கேர்மாளம், மாவல்லம் உள்பட 40 கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் வனப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த மின் கம்பத்தை ஊழியர்கள் தூக்கி ஓரமாக போட்டனர்.
அதன் பிறகு 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மாத தவணையாக ரொக்க பணம் பெற்று அந்த பணத்துக்கு நிலத்தை முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் பொதுமக்களிடம் திரும்ப பணமாகவோ, நிலமாகவோ அதிக லாபத்துடன் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பலர் பணத்தை முதலீடு செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடி வசூலானது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.7 கோடி வசூலானது. ஆனால் காலம் முடிந்ததும் அதற்குரிய பணமோ... நிலமோ கொடுக்கவில்லை எனவும் அந்த நிறுவனம் வசூல் செய்த பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சின்ன புலியூரை சேர்ந்த 50 பேர் இதில் ஏமாந்துள்ளனர். அவர்கள் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறை கேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் குருமாத்தூர் ரோடு காளியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி அம்புரோஜ் பேகம் (வயது 50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சைய்யது முஸ்தபா (27) பி.ஈ. ஏரோ நாட்டிக்கல் படித்துள்ளார். அலாவுதீன் (22). தையல் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வந்தது. கலெக்டர் கதிரவன் மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த அம்புரோஜ் பேகம் தன் கையில் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் தலையில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாய்ந்து சென்று மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சூரம்பட்டி போலீசார் அம்புரோஜ் பேகத்தை பிடித்து விசாரணை செய்த போது தன் மகனுக்கு வரும் வேலைகளை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து விடுவதாக கூறினார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.






