என் மலர்
நீங்கள் தேடியது "police complaint register"
பாகூர்:
புதுவை கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது. இந்த ஆட்டோ ஸ்டேண்டில் கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 33). மற்றும் கிருமாம்பாக்கம்- பிள்ளையார் குப்பம் சாலையை சேர்ந்த வேலுமணி (40) உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் நேர அட்டவணைப்படி ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கார்த்திக் செல்ல வேண்டிய சவாரியை வேலுமணி ஏற்றி சென்றார். இதனை வேலுமணியிடம் கார்த்திக் தட்டிக் கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுமணி பேனாவால் கார்த்திக் முகத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில், மூக்கு, காது, உதடு உள்ளிட்ட முகம் முழுவதும் படுகாயம் அடைந்த கார்த்திக் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து வேலுமணியை தேடி வருகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசங்கர்(வயது40). இவர் ராமநாதபுரம் பாரதிநகரில் பிஸ்கட் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனம் குறித்த தகவல்களை இண்டர் நெட் மூலமாக அறிந்து கொண்ட லண்டனில் வசிக்கும் பெர்னாண்டஸ், ஸ்டீபன் எட்மண்ட., ஜூலியானா ஆகியோர் தாங்கள் ஹெர்பால் ஆயில் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளதாகவும் அதற்கான வினியோகம் செய்யும் உரிமையை தங்களுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் இது தொடர்பான மற்ற விபரங்களை டெல்லியில் உள்ள தங்களது கம்பெனி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய பாலசங்கர் டெல்லியில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களின் பேச்சை நம்பிய பாலசங்கர் அவர்கள் தெரிவித்தபடி கடந்த மாதம் ஏப்ரல் 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 16முறை வெவ்வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு ரூ. 50 லட்சம் முன்பணமாக அனுப்பி உள்ளார்.
அவர்கள் தெரிவித்தபடி ஹெர்பல் ஆயில் அனுப்பி வைக்காமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ஜோதி அகர்வால் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மேலும் கூடுதலாக பணம் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து விசாரித்த போது கூட்டாக சதி செய்து ஏமாற்றி விட்டதாக தெரிய வந்தது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் பாலசங்கர் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ராம நாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி லண்டனில் வசிக்கும் 3 பேர் டெல்லியில் வசிக்கும் ஜோதி அகர்வால், ராஜாத் சிலாங்கி, மணீஸ் குமார் சிங் உட்பட 9 பேர் என மொத்தம் 12 பேர் மீது வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பரிமளா (வயது 26) ஆகியோருக்குமிடையே நிலம் பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் தனது ஆதரவாளர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டனர்.
ரமேஷ், மணிகண்டன், பரிமளா, மல்லிகா மற்றும் அன்னக்கிளி ஆகியோர் ஒரு பிரிவாகவும், சுரேஷ், கங்காதேவி, திருமலை, பன்னீர்செல்வம் மற்றும் அய்யனார் ஒரு பிரிவாகவும் சேர்ந்து சண்டைபோட்டுக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலபந்தல் போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும், பரிமாளா உள்ளிட்ட 5 பேர் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தம பாளையம் சின்னஓபுலாபுரம் வரதராஜபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லதா(வயது38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விசயம் முத்துச்சாமிக்கு தெரியவரவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என லதா நினைத்தார். எனவே தனது 13 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
கடந்த 20-ந்தேதி ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து முத்துச்சாமி ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜ்குமார், லதா, தமிழன், ஈஸ்வரி ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள பருத்தி கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுந்தரரேசன் (வயது 10). இவர் அதே பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் நின்ற சுந்தரேசன் அங்கு மாமரத்தில் மாங்காய் காய்த்து தொங்குவதை கண்டதும் அதை சாப்பிட ஆசை பட்டார்.
இதைத்தொடர்ந்து மரத்தின் கிளை ஏறி மாங்காய்பறித்த சுந்தரேசன் கால் தவறி கீழே விழுந்தார். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாங்காய் ஆசை மாணவர் உயிரை பறித்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் லாம்பேட் சரவணன் நகரை சேர்ந்தவர் ராமு (வயது25), பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ராமுவும், அவரது நண்பர்களான சக்திவேல், முருகன், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். வேலுவும், அவரது நண்பர்களான வினோத், ஸ்டீபன், செல்வா ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது வேலு ராமுவிடம் இங்கு ஏன் நிற்கிறாய் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலு அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமுவையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ராமுவும், சக்திவேலுவும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் ராமு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சக்திவேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராமு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து வேலு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.
தென்காசி:
குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 43). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






