search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட பெண்
    X
    கைது செய்யப்பட்ட பெண்

    ஈரோடு ஜவுளி அதிபரிடம் ரூ.1½ கோடிக்கு துணி வாங்கி மோசடி - டெல்லி பெண் கைது

    ஈரோடு ஜவுளி அதிபரிடம் ரூ.1½ கோடிக்கு துணி வாங்கி மோசடி செய்த டெல்லி பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் காட்டன் துணி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த மே மாதம் டெல்லியை சேர்ந்த சாய் கிரேசன் நிறுவன உரிமையாளர் என அறிமுகமாகிய ஹன்சூ சவுத்ரி (வயது 40) என்ற பெண் தனக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மீட்டர் காடாத்துணி (துணியின் மதிப்பு ரூ. ஒரு கோடியே 60 லட்சம்) தேவைப்படுவதாகக் கூறி அதற்குண்டான பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக தெரிவித்து காடாத்துணியை பெற்று சென்றுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து தொழிலதிபர் மோகன்ராஜ் தரப்பில் டெல்லிக்குச் சென்று பலமுறை பணம் கேட்டுள்ளனர்.

    அப்போது ஹன்சூ சவித்ரி மற்றும் அவரின் இரண்டு சகோதரர்கள் பணம் தர மறுத்தும் பணம் தர முடியாது என கூறி மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து, மோகன்ராஜ் சித்தோடு போலீசாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஏமாற்றுப் பேர்வழியான அந்தப்பெண் ஈரோடு பார்க் பகுதியில் இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மீட்டர் காடாத்துணி பெற்றுக்கொண்டு பணம் கொடுக்க மறுத்தது உறுதிசெய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, டெல்லியை சேர்ந்த ஹன்சூசவுத்ரி என்ற பெண்ணை கைது செய்து ஈரோடு ஜே.எம். 3 கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×