search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு சூரம்பட்டி பாரதி நகரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு

    ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அடிக்கடி புகும் பாம்புகளை அசம்பாவிதம் நடக்கும் முன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சூரம்பட்டி:

    ஈரோடு சூரம்பட்டி பாரதி நகரில் ஒரு காம்பவுண்ட் உள்ளது. இங்கு 6 வீடுகள் உள்ளன.

    இதில் ஒரு வீட்டினுள் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது. இந்த பாம்பு வேகமாக ஊர்ந்து சென்று அந்த வீட்டின் ஓட்டு விட்டத்தின் மீது ஏறியது. அப்போது இந்த வீட்டில் இருந்த தங்கவேல் என்பவர் இதை பார்த்து பாம்பு... பாம்பு.. என்று சத்தம் போட்டு அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெளியே ஓடி வந்தனர் .

    அவர்கள் பாம்பை பார்த்ததும் அதை அடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு கீழே இருந்து மேலே செல்வதும் மேலே இருந்து கீழே வருவதுமாக இருந்தது. இதனால் பயந்துபோன பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் வீட்டின் விட்டத்தின் மேல் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அப்போது அந்த பாம்பு மீட்பு படையை சேர்ந்த ஒரு வீரரின் கையில் சுற்றிக் கொண்டது. மீட்பு படையை சேர்ந்த மற்ற வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக எடுத்து தயாராக வைத்திருந்த சாக்கு பையில் போட்டு கட்டினர்.

    இதையடுத்து அந்த சாரைப்பாம்பு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.

    இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறும் போது, இந்தப் பகுதியில் ஏராளமான செடி கொடிகள் மரங்கள் உள்ளன. இங்குள்ள புதருக்குள் ஏராளமான பாம்புகள் உள்ளது. இதனால் அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுகிறது.கடந்த வாரம் கூட ஒரு குட்டி பாம்பு இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

    எனவே இந்த பகுதியில் அடிக்கடி வீடுகளில் புகும் பாம்புகளை அசம்பாவிதம் நடக்கும் முன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×