என் மலர்tooltip icon

    ஈரோடு

    சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்காலில் மூழ்கி திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி டெய்லர் பலியானார்.
    சித்தோடு:

    திருப்பூர், குமரானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ஷேக்மொய்தீன் (வயது 28) இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 7-ம் தேதி சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு நண்பர்கள் 6 பேருடன் காரில் புறப்பட்டு திருப்பூரில் இருந்து சங்ககிரி சென்று கொண்டு இருந்துள்ளனர்.

    அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் பெரிய வாய்க்காலில் குளிக்க நண்பர்களுடன் ஷேக்மொய்தீன் இறங்கியுள்ளார். இந்நிலையில் ஷேக்மொய்தீன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் பெரிய வாய்க்கால் ராசாங்காடு அருகில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடம் சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் 7-ம் தேதி நண்பர்களுடன் குளிக்க வந்த ஷேக் மொய்தீன் என்பது அவரின் தாய் மூலமாக அடையாளம் கண்டு உறுதி செய்யப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தாய் ஹனிபா கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் தடப்பள்ளி வாய்க்கால் அருகே கரிய காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் வளாகம் உள்ளே மாரியம்மன் கோவிலும் உள்ளது. இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.

    மீண்டும் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. கரிய காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து உண்டியலில் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தை திருடி சென்று விட்டனர்.

    அதன் பிறகு கரிய காளியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றபோது அந்த உண்டியலை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் மர்ம ஆசாமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். இதனால் அந்த உண்டியலில் உள்ள ஆயிரக்கணக்காண பணம் தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் திருடர்களை தேடி வருகிறார்கள்.

    ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவிரி ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் ஈரோடு கொல்லம்பாளையம், வண்டிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 30) என தெரிய வந்தது.

    முருகேசன் வேலை வி‌ஷயமாக வெளியூர் சென்று விட்டு ரெயிலில் மீண்டும் ஈரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயிலில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த முருகேசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடைவீதி பகுதிகளில் திருட்டை தடுக்க ஈரோடு நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, ஆர்கேவி ரோடு, நேதாஜி ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் இப்போதே அதிகரித்துள்ளது.

    இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பிக்பாக்கெட் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் 24 மணி நேரமும் பணியிலிருந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறாது பைனாகுலர் மூலம் மக்கள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பார்கள். மேலும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள் இதர பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கடைவீதி பகுதிகள் வந்து கூடுவார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில நபர்கள் திருட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக ஏழு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர பஸ்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் பெண் போலீசார் மாறுவேடத்தில் தீவிரமான கண்காணிப்பார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் மாறுவேடத்தில் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள். இதுதவிர போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவார்கள்.

    இதேபோன்று கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி உட்பட மாவட்டம் முழுவதும் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தங்கள் உடமைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலமலை பகுதியில் ஊருக்குள் உள்ள குட்டையில் முதலை ஒன்று இருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த தலமலை ,கோடிபுரம்,தொட்டாபுரம், என 3 கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் 4-க்கும் மேற்பட்ட குளங்களும் 5-க்கும்மேற்பட்ட குட்டைகளும் உள்ளன கடந்தசில நாட்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துவருகிறது.

    குளத்தில் மழை நீர் பாதியளவு நிரம்பி உள்ளது இந்நிலையில் தலமலை அருகே உள்ள குளத்தின் அருகே சிலர் மாடுகள் மேய்த்து உள்ளனர். அப்போதுமாடுகள் மிரண்டு ஓடியுள்ளது. இதனை கண்ட மக்கள் குளத்தின் அருகே சென்றுபார்த்த போது அங்கு பெரிய முதலை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    குளத்தில் முதலை இருக்கும் தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கும் தெரியவந்தது முதலையை பார்க்க கூட்டம் கூடியது.

    கரையில் படுத்து இருந்த முதலை தண்ணீர்க்குள் சென்று மறைந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது “முதலை தற்போது இக்குளத்தில் உள்ளது. இது இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் அச்சம் உள்ளது எனவே குளத்தில் உள்ள முதலையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்து உள்ளனர் . 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இளைஞர்கள் புதியதாக உருவாக்கிய நீர்த்தேக்க குட்டை கன மழையால் நிரம்பியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே செலம்பகவுண்டன் பாளையத்தில் இருந்த பொது மயானம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதால் பழைய மயான இடம் ஒரு ஏக்கர் அளவில் சும்மா கிடந்தது.

    இந்த இடத்தில் இளைஞர்கள் ஓருங்கிணைந்து ‘நம்மால் முடியும் நண்பா’ என்ற குழுவினை ஏற்படுத்தி ரூ.60 ஆயிரம் செலவின் மூலம் 1500 அடி நீர் வழி பாதை மற்றும் புதிய நீர் தேக்க குட்டையையும் அமைத்திருந்தனர்.

    இந்த நீர்த் தேக்க குட்டை ஒரு நாள் பெய்த கன மழையால் நிரம்பியது. இது இந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது.

    மழை

    இதுகுறித்து ‘நம்மால் முடியும் நண்பா’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுகரசு கூறும்போது , “இதுவரை எங்கள் பகுதியில் பெய்த மழை வீணாக நொய்யல் ஆற்றில் தான் கலந்து வந்தது. தற்போது நீர் தேக்க குட்டை மழை நீரால் நிரம்பி உள்ளது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இங்குள்ள கிணறு, போர்வெல்களில் அதிக தண்ணீர் கிடைக்கும்” என்றார்.
    கோபியில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி ஜே.எஸ். நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி பெயர் கிரிஜா (54). இவர் கோபி நாகர் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார்.

    இவர்களது மகன் வீடு ஈரோட்டில் உள்ளது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள மகன் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஈரோட்டில் இருந்து திரும்பிய முருகேசன் வீடு திறந்து கிடப்பதையும், நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து அவர் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, தாளவாடி, சத்தியமங்கலம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பேருக்கு டெங்கு நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நேரலை கட்டுப்படுத்த 76 குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் இந்த குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    தண்ணீரை தேக்கி வைக்க கூடாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பார்த்துக் கொள்ளுங்கள் வீட்டு முன் மழை தண்ணீர் தேங்கி இருந்தால் அதை வழிய விடுங்கள் மண்ணை கொட்டுங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதே போல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு நோய் பற்றியும் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பற்றியும் அதனை அழிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை கற்று கொண்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர் உறவினர்களிடம் இதனை எடுத்துக் கூறி டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வீரப்பனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம் என்று ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கூறினார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடந்தன.

    இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.

    போட்டிகளில் பங்கேற்றவர்களையும், வெற்றி பெற்றவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன். இந்த விளையாட்டு போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் வருங்காலத்தில் உங்களுக்கு போலீஸ் துறை, ரெயில்வே துறை, தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    தேவாரம்

    இந்த சத்தியமங்கலம் பகுதியில் முன்பு சந்தன கடத்தல் வீரப்பன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்தனர். கடைசியாக வெறும் 5 பேர் மட்டுமே இருந்தனர். இதற்கு காரணமாக திகழ்ந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்ததை 5 பேராக குறைத்தார். இறுதியில் அதிரடிப்படையால் வீரப்பன் வீழ்ந்தான்.

    இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

    மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (43).

    இவர்களின் பேத்தி காவிய தர்ஷினி (5). இவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த முத்துசாமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். காவிய தர்ஷினினுக்கும் காயம் ஏற்பட்டது.

    இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் முத்துசாமி மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    காவிய தர்ஷினிக்கு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் கணவன் - மனைவி இறந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென திருச்செங்கோடு-சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் அருகே இந்த ஆண்டு மட்டும் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இதில் சிலர் உயிர் இழந்துள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவம்பற்றி அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் உயர் அதிகாரிகள் வராமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர்கள் கூறினார்கள்.

    இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருச்செங்கோடு - சேலம் மெயின் ரோட்டில் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி. சண்முகம் தாசில்தார் கதில்வேல் ஆகியோர் நேரில் வந்து மறியல் செய்த பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    வேகமாக வரும் பஸ்களை கட்டுப்படுத்த உடனடியாக வேகத்தடை அமைக்கவேண்டும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    விபத்தில் இறந்த கணவன்- மனைவி உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டனர். இன்று காலை திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி ஆஸ்பத்திரிக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறைக்கு வந்த புகார் தொடர்பாக இதுவரை 45 குழந்தைகள் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக மலைப் பகுதியான அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட சமூக நலத்துறையும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள். நடப்பாண்டில் மாவட்ட சமூக நலத்துறைக்கு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக 45 புகார்கள் வந்துள்ளது.

    இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் 45 குழந்தை திருமணங்களை தடுத்தி நிறுத்தியுள்ளார்கள். இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களிடமும் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்று எடுத்துரைக்கப்பட்டு உரிய வயதிற்கு பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை கூறுகையில், குழந்தை திருமணங்கள் தொடர்பாக எங்களுக்கு வந்த புகார்களை உரிய நேரத்தில் சென்று தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுவரை நடப்பாண்டில் 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தின்போது இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களை அழைத்து திருமண வயது பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வருகிறோம். குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பழக்கம், உறவுகளுக்குள் திருமணம் போன்றவற்றால் ஏற்படுகிறது. குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறிதது அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம்.

    மேலும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதியோர்களை பராமரிப்பது தொடர்பாகவும் கவுன்சிலிங் அளித்து வருகிறோம். முதியவர்கள் துன்புறுத்தப்பட்டால் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அளித்து வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் முதியோர்கள் துன்புறுத்தல் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3981 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்துக்காக வாய்க்கால்களில் மொத்தமாக 2700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 95.83 அடியாக உள்ளது.

    நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பவானி (18 மி.மீ), தாளவாடி(9 மி.மீ), அம்மாபேட்டை (7 மி.மீ), கோபி (1 மி.மீ.) ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    ×