search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு கோபுரங்கள்
    X
    கண்காணிப்பு கோபுரங்கள்

    தீபாவளி திருட்டை தடுக்க ஈரோடு நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடைவீதி பகுதிகளில் திருட்டை தடுக்க ஈரோடு நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, ஆர்கேவி ரோடு, நேதாஜி ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் இப்போதே அதிகரித்துள்ளது.

    இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பிக்பாக்கெட் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் 24 மணி நேரமும் பணியிலிருந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறாது பைனாகுலர் மூலம் மக்கள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பார்கள். மேலும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள் இதர பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கடைவீதி பகுதிகள் வந்து கூடுவார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில நபர்கள் திருட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக ஏழு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர பஸ்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் பெண் போலீசார் மாறுவேடத்தில் தீவிரமான கண்காணிப்பார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் மாறுவேடத்தில் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள். இதுதவிர போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவார்கள்.

    இதேபோன்று கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி உட்பட மாவட்டம் முழுவதும் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தங்கள் உடமைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×