search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பஸ் மோதி கணவன்-மனைவி பலி: பொதுமக்கள் சாலை மறியல்

    மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (43).

    இவர்களின் பேத்தி காவிய தர்ஷினி (5). இவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த முத்துசாமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். காவிய தர்ஷினினுக்கும் காயம் ஏற்பட்டது.

    இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் முத்துசாமி மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    காவிய தர்ஷினிக்கு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் கணவன் - மனைவி இறந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென திருச்செங்கோடு-சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் அருகே இந்த ஆண்டு மட்டும் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இதில் சிலர் உயிர் இழந்துள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவம்பற்றி அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் உயர் அதிகாரிகள் வராமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர்கள் கூறினார்கள்.

    இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருச்செங்கோடு - சேலம் மெயின் ரோட்டில் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி. சண்முகம் தாசில்தார் கதில்வேல் ஆகியோர் நேரில் வந்து மறியல் செய்த பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    வேகமாக வரும் பஸ்களை கட்டுப்படுத்த உடனடியாக வேகத்தடை அமைக்கவேண்டும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    விபத்தில் இறந்த கணவன்- மனைவி உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டனர். இன்று காலை திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி ஆஸ்பத்திரிக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×