search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கொள்ளை"

    • கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர்.
    • வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (61). இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்.

    இவரது மனைவி சபிதா. இவர்களது மகள் தீபிகா. கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். தீபிகாவிற்கு வரன் பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

    மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சில பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்காக சென்று விட்டார். அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். வீட்டின் முன் பக்க கதவை திறந்து அர்ச்சுனன் மற்றும் அவரது மனைவி வீட்டுக்குள்ளே சென்றனர்.

    அப்போது வீட்டில் சமையல் அறையில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் இருந்த பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மேல் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 பீரோக்களிலும் இருந்த 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அர்ச்சுனன் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போலீசார் வீட்டின் பின்பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் பின்பக்க காம்பவுண்ட் சுவர் அருகே ஒரு பேக் இருப்பது தெரியவந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 30 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிக்கும் போது கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பேக் தவறி வீட்டுக்குள் விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    அறச்சலூர்:

    அறச்சலூரை அடுத்த வடபழனி குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறப்பகவுண்டர்(75) விவசாயி. இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது ஒரே மகன் ராஜசேகர். சாப்ட்வேர் பொறியாளரான ராஜசேகருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது சென்னையில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

    குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ஆறப்பகவுண்டரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டு மெயின்கேட்டை திறக்காமல் உள்ளே சென்று வீட்டின் உள் கதவை உடைத்து அந்த வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் 1½ பவுன் நகையுடன் அங்கிருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பிய ஆறப்பகவுண்டர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிந்து தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வடபழனி குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
    • வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.

    பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இருந்தாலும் இதனையும் மீறி ஒரு சில இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்களிடம் 7 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன். திருடன்.. என கத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.
    • இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையம் பிரிவில் முத்தாயம்மாள் (52) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் இவர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது முத்தாயம்மாள் மளிகை கடைக்கு ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார். அவர் கேட்ட பொருட்களை முத்தாயம்மாள் அவரிடம் கொடுத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். சிறிது தூரத்தில் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்தாயம்மாள் திருடன்..திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி கொள்ளையர்களை விரட்டினர். அப்போது அந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×