search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஈரோடு அருகே பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளை
    X

    ஈரோடு அருகே பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளை

    ஈரோடு அருகே அழகு நிலையம் நடத்தும் பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு சென்று விட்டார். ஜெசிமாபேகம் அழகு நிலையம் சென்று விட்டார்.

    இரவு 8.30 மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஜெசிமாபேகம் பின்னால் அவருக்கு தெரியாமல் 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    ஜெசிமாபேகம் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவரது பின்னாலேயே 8 பேர் கொண்ட கும்பலும் உள்ளே புகுந்தது. அந்த 8 ஆசாமிகளும் முகமூடி அணிந்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிமாபேகத்தை அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பிறகு கை, கால்களையும் கட்டினர்.

    பிறகு அவர் அணிந்திருந்த நகைகள் மேலும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 40 பவுன் நகைகளை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் மிரட்டி பறித்து கொண்டனர்.

    தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட கொள்ளையர்கள் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்றதும் ஜெசிமாபேகத்தின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்து ஜெசிமாபேகத்தின் கை-கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிறகு அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×