search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டர் கதிரவன்
    X
    ஈரோடு கலெக்டர் கதிரவன்

    நாட்டுச்சர்க்கரை- வெல்லம் தயாரிக்கும்போது வேதி பொருட்கள் கலந்தால் நடவடிக்கை: கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை

    நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக வேதிப்பொருள்கள் கலந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், உத்தரவின்படி கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடோன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுச் சர்க்கரையினை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாட்டுச்சர்க்கரையில் சட்டத்திற்கு புறம்பாக வேதிப்பொருள் மற்றும் அஸ்கா கலந்து தயாரிக்கப்பட்டதாக சந்தேகித்த 9 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நாட்டுச்சர்க்கரை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம், நாட்டுச்சர்க்கரையில் ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மற்றும் அஸ்கா கலந்து தயாரிக்கக்கூடாது என நியமன அலுவலர் தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்ற ஆய்வுகள் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆய்வின்போது அஸ்கா மற்றும் வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி சட்டரீதியான மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருள் தரம் குறைவு குறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×