search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    வெங்காயம் பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    வெங்காயம் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பதினோராவது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    த.மா.கா. இளைஞரணியின் 11-வது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து சுணக்கமான இடங்களில் கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    என்னை பொறுத்தவரை தாய்மொழிக்கு தான் முதலிடம். எதிர்கட்சிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல் பட வேண்டும். தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுபயணம் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தேவையற்றது இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒத்த கருத்து கொண்டிருப்பது நம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அத்திகடவு -அவிநாசி திட்டத்தை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும். கேரளாவில் கடலில் கலக்கும் ஆறுகளை தமிழகத்திற்கு திருப்ப ஆய்வு செய்ய வேண்டும்.

    கடும் வறட்சியால் கோவை திருப்பூர் பொள்ளாச்சி ஈரோடு போன்ற மேற்கு மண்டலத்தில் 10 லட்சம் தென்னை மரங்கள் கருகிவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை மரங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். ஆறுகளில் சாயகழிவு கலப்பதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் சாயகழிவு கலப்பதை தடுக்க வேண்டும். 

    ஈரோடு பகுதியில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

    வெங்காயம் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் மத்திய அருங்காட்சியகம் அமைக்க முன்வர வேண்டும். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விதுறையில் ஜாதி,மதம் போன்றவற்றை கட்டாயபடுத்த கூடாது. புதிய கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவை. உலக அளவில் பொருளாதார சுணக்கம் உள்ளது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாங்குநேரி, விக்ரவாண்டி இடை தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவளித்துள்ளோம். அவர்கள் வெற்றிக்காக தாமாக பணியாற்றும் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது

    பிளக்ஸ் பேனரைபோல நோட்டீஸ் ஒட்டுவதற்கும் கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்பது எனது நிலைப்பாடு இதேபோன்று சுவரில் ஒட்டும் நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் சூரம்பட்டி மண்டல தலைவர் சாம்ராட் அசோக் உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×