search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private bus driver"

    • டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார்.
    • போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டது.

    சிறிது நேரத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி உள்ளோம். அதில் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து எதுவும் விசாரிக்காமல் டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட தற்கான மெசேஜ் வந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பஸ் டிரைவர் இழந்த ரூ.75 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் வங்கி மூலம் மீட்டுக் கொடுத்தனர். மேலும் புதிதாக வரும் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    சாலையில் முந்திச் செல்ல முயன்ற தகராறில் தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காடையாம்பட்டி:

    சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி பகுதியை சேர்ந்த மாதையன் மகன் பாக்கியராஜ் என்பவர் ஓட்டினார். காலை 9 மணிக்கு தீவட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றது. அதே நேரத்தில் தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மாதேஷ் (வயது 23) என்பவர் மினிவேனை ஓட்டிச் சென்றார்.  

    தளவாய்பட்டி  ஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்லும்போது மினிவேன், தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. 
    இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த டிரைவர் பாக்கியராஜ், மாதேஸ்சை தாக்கியதாக தெரிகிறது.

    பின்னர், தனியார் பஸ் தர்மபுரிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்ப சேலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை அடித்த சம்பவம் குறித்து மாதேஷ் தனது உறவினர்களிடம் கூறினார். இதனால் பதிலுக்கு பதில் அவரை தாக்குவதற்காக மாதேஷ் மற்றும் அவரது தந்தை சேட்டு மற்றும் உறவினர்கள் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
    தனியார் பஸ் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வந்தபோது பஸ்சை தடுத்து நிறுத்தி, பஸ்சுக்குள் ஏறி பாக்கியராஜ் மற்றும் கண்டக்டர் கோபி ஆகியோரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

    இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே தனியார் பஸ் டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    செங்கல்பட்டு:

    மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, இன்று அதிகாலை 5 மணி அளவில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.

    இந்த பஸ்சை செஞ்சியை சேர்ந்த பிரபு ஆனந்த் (35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சை நிறுத்திய சுங்கச் சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி கூறினார்கள். அப்போது, பஸ் டிரைவர் ‘‘இந்த சுங்கச் சாவடிக்கு லைசென்சு முடிந்துவிட்டது. எனவே கட்டணம் செலுத்த முடியாது’’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால், பஸ்டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னால் வந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்டதூரத்துக்கு நின்று கொண்டிருந்தன.

    இந்த நிலையல் டிரைவர் பஸ்சை அங்கிருந்து சிறிது தூரம் நகர்த்தினர். அப்போது 10-க்கும் அதிகமான சுங்கச் சாவடி ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு பஸ் மீது தாக்குதல் நடத்தி, நிறுத்த முயன்றனர்.

    இதனால் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் அதை கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு நின்றதால் தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பஸ் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு 6 மணி அளவில் பஸ்களும் வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டன. இந்த பிரச்சினை காரணமாக செங்கல்பட்டு-சென்னை இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×