என் மலர்
ஈரோடு
- ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
- தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்வி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 2021-22-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். இதனால் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.
இதோபோல் கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் பொதுத்தேர்வை 221 மாணவிகள் எழுதினர். இதில் 219 மாணவிகள் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளியில் 600-க்கு 584 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். 500-க்கும் மேல் 44 மாணவிகள் பெற்று ள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 பேரும், கணினி தொழில் நுட்பத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 பேரும், கணக்குபதிவியல் 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 200 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 192 பேர் தேர்ச்சி பெற்று 96 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதினர். இதில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ஈரோட்டில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை நிறுத்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
போலீஸ் விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் (27) என்பதும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு முனிசிபல் காலனியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடியது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது தான் முருகன் போலீசார் வாகன சோதனையில் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- மிதுன் நித்தின் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார்.
- வீட்டிற்கு வந்த தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் தங்க மாதேஸ்வரன். இவரது மூத்த மகன் மிதுன் நித்தின் (வயது 17). இவர் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார். இதனை அவரது தந்தையும், தாயும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மிதுன் நித்தின் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் மாட்டும் கொக்கியில் வேஷ்டியால் தூக்குபோட்டு கொண்டார்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- குமாரும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்றுள்ளனர்.
- குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். அருகில் உள்ள கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார் (32). இவருக்கும் மதுரை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 19-ந் தேதி சென்னிமலை முத்தையன்கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலையில் குமாரும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்றுள்ளனர். மதியம் 2.30 மணியளவில் குமார் மட்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் விசாரித்ததில் கவிதா வரவில்லை என்பதும், குமார் விஷம் குடித்து விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக குமாரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் குமார் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
- 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 வாகனங்கள் வந்தன. அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நம்பியூரை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் 2 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 3.25 டன் (3,250 கிலோ) ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பிரசாந்த்திடம் குடிமைப் பொருள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
- தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனை செய்ததில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோ தமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை , சிவகிரி , சென்னி மலை காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 108 மது பாட்டி ல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
- உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
- இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சை புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறை அருகே தங்கை கணவருடன் வாழாமல் வீட்டுக்கு வந்ததால் சோகத்தில் அண்ணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் அகிலன் (25). இவரது சகோதரி உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நீலகிரியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழாமல் கடந்த 14-ந் தேதி காஞ்சிக்கோவிலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகிலன் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொ லைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அகிலனின் தாய் ரீட்டா அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் திறப்பதாலும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,667 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது .






