என் மலர்
ஈரோடு
- ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இருந்தாலும் இதனையும் மீறி ஒரு சில இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்களிடம் 7 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன். திருடன்.. என கத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பலர் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
- இதனால் ஈங்கூர் பகுதியில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் ஏராளமனோர் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பலர் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இதனால் ஈங்கூர் பகுதியில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈங்கூர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற லோகநாதன். இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர். இவர் இன்று காலை அந்த குடிநீர் குழாயில் குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் சில பெண்கள் குடிநீர் பிடிப்பதற்காக அங்கு வந்தனர்.
அப்போது அங்கு தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த லோகநாதன் குடத்தை எடுத்து விட்டு வடமாநில பெண்கள் தண்ணீர் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகநாதனுக்கும் வட மாநில பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பெண்கள் அவர்களது உறவினர்களுக்கு தகவல கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வட மாநில ஆண்கள், பெண்கள் என பலர் வந்தனர். இதை தெடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து லோகநாதன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈங்கூர்- சென்னிமலை ரோட்டில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம்கோயல் மற்றும் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் வட மாநிலத்தவர்கள் இந்த பகுதியில் கடைகள் வைத்து நடத்த அனுமதி வழங்க கூடாது அவர்கள் உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என மக்கள் கூறினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிட்டப்பட்டது. இதனால் சென்னிமலை பழனி ரோட்டில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் குல்சாரா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு ஓடினார்.
- ஈரோட்டில் ஒரே இரவில் 2 பெண்களிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு சங்கு நகரை சேர்ந்தவர் அயுஸ்பாட்சா. இவரது மனைவி குல்சாரா (45). இவர்களது மகன் சதாம்உசேன். இவர்களுக்கு சொந்தமான டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் உள்ளது. கடந்த 3 வருடங்களாக இவர்கள் அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை 3 பேரும் மாற்றி மாற்றி பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி, மகன் 3 பேரும் கடையில் இருந்தனர். அப்போது கடையை மூடும் நேரம் வந்தபோது டிப்டாப்பாக கடைக்கு வந்த ஒரு வாலிபர் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளார்.
சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் காத்துக் கொண்டிருந்தார். அந்த வாலிபர் கேட்ட பொருளை கொடுத்து விட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவரது மகன் சதாம் உசேன் ஆகியோர் கடையில் இருந்த பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர்.
குல்சாரா கடையின் வெளியில் இருந்த குப்பையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் குல்சாரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குல்சாரா திருடன்... திருடன்... என கத்தினார். சத்தத்தைக் கேட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவரது மகன் சதாம் உசேன் ஆகியோர் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினர்.
அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு வாலிபருடன் ஏறி தப்பி சென்றனர். பாதுகாப்பு கருதி கடையில் ஆயுஸ்பாட்சா சி.சி.டி.வி கேமராவை பொருத்தி இருந்தார். அந்த கேமரா காட்சியில் கடைக்கு வந்த வாலிபர் உருவம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மனைவி அம்சா (37) நேற்று இரவு கடைக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அம்சா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என்று கத்தினார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் ஒரே இரவில் 2 பெண்களிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.
சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.
இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உடன் அலுவலரை அழைத்து கொண்டு சம்பவ இடம் சென்று பார்த்த போது புளு, பச்சை, கலரில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுடன் ஆண் பிணம் இருந்தது.
மேலும் பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு:
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டை ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமலும், பழுதாகி நிற்பதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
- இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த வழியாக செல்வதற்கு தடை செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தீர்ப்பானது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை. இரு மாநில எல்லையை கடக்கும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள், 3 சோதனைச் சாவடிகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டை ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமலும், பழுதாகி நிற்பதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த வழியாக செல்வதற்கு தடை செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தீர்ப்பானது.
இதற்கிடையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து காரப்பளம் சோதனை சாவடி வரை சுமார் 25 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை 1½ மணி நேரத்தில் வாகனங்கள் கடக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து மைசூருக்கு அட்டை பாரம் ஏற்றி சென்ற லாரி சரியான நேரத்தில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி கடக்கவில்லை என வனத்துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
இது பற்றி வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:-
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி சோதனைசாவடியை கடக்க 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் நாங்கள் முதல் கியரில் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். மேலும் அதிக வேகத்தடைகளும் உள்ளன. 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வனப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.
இதில் எங்களது வாகனம் டயர் பஞ்சர் ஆனாலும், வேறு ஏதாவது பழுதானாலும் நாங்கள் எப்படி 1½ மணி நேரத்தில் காரப்பளம் சோதனை சாவடியை கடக்க முடியும். 10 நிமிடம் தாமதமாக வந்ததால் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். எங்களுக்கு ஒரு லோடு மூலம் ரூ.800 முதல் ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.
மேலும் நுழைவு கட்டணமாக பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.50 வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் வேகமாக வாருங்கள் என்கிறார்கள். ஆனால் பாரம் ஏற்றி எப்படி வேகமாக வருவது. இடையில் வன விலங்குகள் தடை ஏற்பட்டால் அதற்கு தகுந்தாற் போல் தான் வாகனத்தை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- எதிர்பாராத விதமாக டிராக்டரின் டயர் வெடித்தது இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் அருகே இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). விவசாயி. இவர் கடம்பூரில் இருந்து டிராக்டரில் கே.என். பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரியசாமி கோவில் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் அருகே இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பெருமாள் படுகாயம் அடைந்து வெளியே வரமுடியாதபடி டிராக்டரின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சு விரைந்து வந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் டிரைவர் மோகன் ஆகியோர் 30 அடி பள்ளத்தில் இறங்கி டிராக்டரில் சிக்கி தவித்த பெருமாளை மீட்பதற்கு முயன்றனர்.
ஆனால் பெருமாள் மீட்க முடியாதபடி மாட்டிக் கொண்டதால் அவரை வெளியே மீட்டு கொண்டு வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். இைதயடுத்து விவசாயி பெருமாளுக்கு அதே இடத்திலேயே செயற்கை சுவாசம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 108 ஆம்புலன்சில் உள்ள மீட்பு உபகரணங்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்த 108 ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
- இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் சரக்கு வேனில் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் வந்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரு பெற்றோர்களையும் இழந்த 13 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 450 குழந்தைகளும் கண்டறி யப்பட்டு இவர்களின் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி மதிப்பில் பொது நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு, ஜூன். 23-
கொரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து தமிழகத்திலும் எதிரொலித்தது. கொரோனா உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பலர் தங்களது சொந்தங்களை இழந்து உள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் தங்களது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையும் இழந்து உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வா–தாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதையடுத்து அவர்களின் வாழ்வா–தாரம் மேம்படுத்தும் வகையில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தை, இருவரையும் இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இரு பெற்றோர்களையும் இழந்த 13 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 450 குழந்தைகளும் கண்டறி யப்பட்டு இவர்களின் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ஒற்றை பெற்றோரை இழந்த 310 குழந்தைகளுக்கு ரூ.9 கோடியே 30 லட்சம் பொது நிவாரண நிதி, இரு பெற்றோரையும் இழந்த 12 குழந்தைகளுக்கு ரூ.60 லட்சம் பொது நிவாரண நிதி என மொத்தம் 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி மதிப்பில் பொது நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் மற்ற குழந்தை களுக்கும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
- பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,955 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.57 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் திறப்பதாலும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,955 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
- போலீசார் சூதாட்டம் நடத்திய கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்கு பின் புறம் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரோஜ்லஷ்கர் (35), ஜாகிர் நௌரேன்காஜி (22), அஜ்கர் முல்லா (22), சகஜீஸ் மொல்லா(21), கார்தின் மொல்யா(30), சத்தம்பியாதா(30), அஜிகல்சர்தார் (22), மஜ்னா ஆழிபாஸ்க் (31) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






