என் மலர்
நீங்கள் தேடியது "108 ambulance crews"
- எதிர்பாராத விதமாக டிராக்டரின் டயர் வெடித்தது இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் அருகே இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). விவசாயி. இவர் கடம்பூரில் இருந்து டிராக்டரில் கே.என். பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரியசாமி கோவில் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் அருகே இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பெருமாள் படுகாயம் அடைந்து வெளியே வரமுடியாதபடி டிராக்டரின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சு விரைந்து வந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் டிரைவர் மோகன் ஆகியோர் 30 அடி பள்ளத்தில் இறங்கி டிராக்டரில் சிக்கி தவித்த பெருமாளை மீட்பதற்கு முயன்றனர்.
ஆனால் பெருமாள் மீட்க முடியாதபடி மாட்டிக் கொண்டதால் அவரை வெளியே மீட்டு கொண்டு வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். இைதயடுத்து விவசாயி பெருமாளுக்கு அதே இடத்திலேயே செயற்கை சுவாசம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 108 ஆம்புலன்சில் உள்ள மீட்பு உபகரணங்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்த 108 ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






