என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்நிலையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அதே சமயம், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

    • தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
    • பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வேளாண்மை மாணவர்கள் பள்ளி நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்பப்பாடமாக படித்த மாணவர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.

    விழாவிற்கான மரக்கன்றுகளை பெருந்துறை ரோட்டரி கிளப் வழங்கியது. இவ்வாறு மரங்களை நடுவது மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது.

    பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார். 

    • சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.


    இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.

    நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சுற்று வட்டாரப்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவில் புகழ்பெற்ற குண்டம் விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில பக்தர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. குண்டம் விழாவில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் புறப்பாடு சத்தியமங்கலம், புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று கோவிலை வந்தடைந்தது.

    இதையொட்டி தினமும அம்மனுக்கு சிறப்பு அஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவை யொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வழிகிறார்கள்.

    இதை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் குண்டம் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) இரவு எரி கரும்புகளால் (விறகு) குண்டம் வார்க்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதனால் குண்டம் வளர்க்கப்படும் இடத்தின் அருகே விறகுகள் குவிந்து வருகிறது. மேலும் வேண்டுதல்கள் நிறை வேற்றும் வகையிலும் ஏராளமானோர் விறகுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்குவதற்காக கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தினமும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில் அருகே பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் அதிகாலை குண்டம் விழா நடப்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பலர் குண்டம் இறங்க செல்லும் தடுப்புகளில் துண்டு, சேலை மற்றும் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் பண்ணாரியம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் வந்த பலர் அங்கேயே தொட்டில் கட்டி அவர்களும் அங்கேயே தூங்குகிறார்கள். அவர்கள் இரவு, பகலாக அங்கே தங்கி உள்ளனர்.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

    பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்கு ப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்ப திவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.

    இந்தப் பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜ கோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் டோல்ப்ரீ எண் மூலம் 21 புகாரும், சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களின் பணியை செய்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேலே ரொக்கம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். நாடாளு மன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவல ர்களுக்கான முதல் பயிற்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

    10 ஆயிரத்து 970 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சியில் அவர்களுக்கு அஞ்சல் வாக்குப்படிவம் வழங்கப்படும். அதற்குப் பின்னர் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூர், குத்தியாலத்தூர், தாளவாடி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் உள்ள வாக்குச்சாவடி களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணிய மர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு நாடா ளுமன்ற தொகுதிகளில் பதற்றமான தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இன்று தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோபி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 656 பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி (59) என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூர் மணியக்காரன் புதூர் என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.64,000 பணம் இருந்தது.

    சிவகிரியில் இருந்து வந்த விவசாயி துரைசாமி என்பவர் கவுந்தப்பாடியில் டிராக்டர் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலை குழுவினர் கோவில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள கோவை பிரிவில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரூ.98 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தவிட்டுபரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பதும் தெரிய வந்தது.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • தொகை அதிகம் என்பதால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரேபாளையம் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    அரசு பஸ்சில் இருந்த ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது பின்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பேக் அணிந்திருந்தார். அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.35 லட்சம் இருந்தது.

    இது குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் தாவணி கரையைச் சேர்ந்த ஹரிஷ் (வயது 32) என்பதும், கோவையில் தான் நிலம் வாங்கி உள்ளதாகவும் இடம் விற்பனை செய்த நபருக்கு இந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார்.

    எனினும் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    தொகை அதிகம் என்பதால் இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதிவேகம் காரணமாக சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களை தாண்டி, கோவை நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கேரளா மாநிலம் கோத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு மனியப்பன் (26) மற்றும் ஹனிசேவியர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    தூக்க கலக்கத்தில் எதிர்திசையில் உள்ள சாலையின் நடுவே சென்றதால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் முழுவிபரங்கள் குறித்தும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×