என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
    • காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.

    பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் ஒரு வீட்டில் அரசின் மதுபானங்களை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தானம் (48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிகின்றது.

    இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

    ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

    • உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினரால் பெரும்பாலும் கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 13 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 18 கன அடியாக நீர் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே நீர் வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • ஆற்றல் அசோக் குமார் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.

    தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது.

    இதற்கிடையே வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 39 தொகுதியில் 326 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவர் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுவரை 412 ஆண் வேட்பாளர்கள், 67 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×