என் மலர்
ஈரோடு
- ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர்.
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உட்பட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னங்கள் கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர்கள் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் சென்னையில் அச்சடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 28 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 1688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மேற்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி இத்தொகுதியில் உள்ள 1,688 வாக்குச்சாவடியில் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 20 சதவீத கூடுதல் எந்திரங்கள் என 4,050 எந்திரங்களும், 2,025 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2, 194 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு சென்னையில் இரவு, பகலாக அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் தவிர வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால் 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 ஆயிரம் பேலட் பேப்பர்களில் 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதால் சென்னையில் இருந்து பேலட் பேப்பர்கள் கொண்டு வருவதற்காக தனி குழுவினர் சென்னை சென்றுள்ளனர். ஈரோடு கொண்டு வரப்பட உள்ள பேலட் பேப்பர்கள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
ஈரோட்டில் ரெயில் நின்ற போது முகமது ஜசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரெயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரெயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடை மேடையாக சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஈரோடு ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியை சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரெயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன.
- யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதேப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.
- 76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை.
ஈரோடு:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாரளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.
2014-ம் ஆண்டு 283, 2019-ம் ஆண்டு 303 எம்.பி.க்கள் வந்த நிலையில் இந்த முறை 300 எம்.பி.க்கள் தாண்டி வர வேண்டும் என்று பாஜக உழைக்கிறது. நமது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இந்த தொகுதியின் அடையாளமான ஜமுக்காலத்தை போர்த்திக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார்.
உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்டு கட்சிகாரர்கள் தான்.

தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பா.ம.க., அ.ம.மு.க. ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று மோடி 3-வது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும்.
வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தகவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.
இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும். 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 35 பேரில் 2 பெண்கள். 2 பேர் பட்டியலின பெண்கள். அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது. ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.
48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.
பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.
பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.
2019-ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பா.ஜ.க. கொடுத்தது. இதில் 295 அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியோடு தி.மு.க. கம்யூனிஸ்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.
தி.மு.க.வை பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. துபாய், ஸ்பெயின் போன்ற வெளிநாட்டுக்கு முதல்- அமைச்சர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது
விடியல் தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.
வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை. குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடக்கவில்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.
76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால் தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு. குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் உதயநிதி கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால் அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.
முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம் என்றார். ஆனால் மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள்.
அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.
மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கவுரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்.
பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள்.
நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
- வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
- இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
- இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.
அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நீர்வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
- பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் 58 விதி மீறல் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு 39 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 19 புகார் என மொத்தம் ஒரே நாளில் 58 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 58 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வரை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797 கைப்பற்றி உள்ளனர்.
இதேபோல் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ. 58 லட்சத்து 11 ஆயிரத்து 390-ம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670-ம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280-ம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 800-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850-ம், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 385 ஆகும்.
இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ.1 கோடியை 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 உரிமையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.89 லட்சத்து 7 ஆயிரத்து 790-ஐ மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- சின்னியம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு என தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. இது பரப்புரை கூட்டமா அல்லது மாநில மாநாடா என கேள்வி எழும் அளவுக்கு திரண்டு வந்திருக்கிறீர்கள்.
நாடு காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இங்கு வரமுடியாவிட்டாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கிவருகிறோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கான அரசாக தி.மு.க. ஆட்சி நடந்துவருகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, பெண்களுக்கு பணமும் கொடுக்கிறீர்கள் என தாய்மார்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசை குறைகூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயன் பெறும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தாங்கள் நிறைவேற்றியதை கூறாமல், அவதூறு குதிரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. பயணம் செய்கின்றனர். நல்ல விமர்சனம் வைத்தால் மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை எதிர்க்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்யும் கட்சி தி.மு.க. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. என குறிப்பிட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.
- கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி.ஆக இருந்த கணேசமூர்த்தி (77) கடந்த 24-ந்தேதி ஈரோடு பெரியார் நகர் வீட்டில் வைத்து சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ந்தேதி கணேசமூர்த்தி எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த முதலமைச்சர் பின்னர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.
- உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
- திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவர் சந்தைக்கு சென்றார்.
அப்போது, உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
தொடர்ந்து, முதலமைச்சருடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.






