என் மலர்tooltip icon

    ஈரோடு

    • திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,

    பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.

    தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
    • குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47.28 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனம் ஆகிய வற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.40 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 44 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் குடியிருந்து வரும் இடம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தடை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறைனர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகம், இது குறித்து வருவாய் துறையிடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூதப்பாடி பூத காளியம்மன் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் வட்டாட்சியர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு சமீப காலமாக வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இரு க்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது.

    அதேப்பகுதியில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்துள்ளது. அப்போது யானைக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்தது.

    ஏற்கனவே உணவு குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை அகழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்றுவதற்காக அதன் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.
    • வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்துவருகின்றன.மேலும் இந்த வனப்பகுதியில் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் கார், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த வனப்பகுதி வழியாக சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதே போல் அந்தியூர் பர்கூர் வனப்பகுதி பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வறண்டு வருகிறது. மேலும் வெயிலினால் மரம், செடிகள் காய்ந்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியேறும் யானைகள் ரோட்டில் உலா வருகிறது. இந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    மேலும் பர்கூர் வனப்பகுதி வனவிலங்குகள் வனப்பகுதிகளுக்குள் உள்ள வனக்குட்டையில் தண்ணீரை குடித்தும், யானைகள் தண்ணீரை மேலே தெளித்தும் வெயிலின் வெப்பத்தை தனித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வனக்குட்டைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் நிலையும் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் ஆங்காங்கே உள்ள வனக் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தையும் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று தன்னல ஆர்வலர்களும், பொது மக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே போல் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், சிறுத்தை, புலி, மான், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தாளவாடி, தலமலை வனப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகின்றன. மேலும் யானைகள் அருகே உள்ள வன கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்புகள் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் ரோட்டில் சுற்றிதிரியும் யானைகளை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும் வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது.

    எனவே வனப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தெந்தரவு செய்ய கூடாது. மேலும் ரோட்டில் திரியும் வன விலங்குகளை செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 21 லட்சத்து 57 ஆயிரத்து 955 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 96 ஆயிரத்து 858 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
    • இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    • தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு பணி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் பழையபாளையம் கணபதி நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது குறித்த தகவலை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக அவரது அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் முழு தகவல் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    • அணை நீர்மட்டம் 48 அடியாக குறையும்போது டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.
    • கடைசியாக கடந்த 2018-ம் வருடம் நீர்மட்டம் 48 அடியாக சரிந்த போது கோவில்கள் வெளியே தெரிந்தன.

    ஈரோடு:

    தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசன பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை பெற்றது பவானிசாகர் அணை. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானி ஆறு, மாயாறு ஒன்று சேரும் இடத்தில் 1948-ல் பவானிசாகர் அணை கட்டுமான பணி தொடங்கியது. நீர்தேக்க பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில் அப்பகுதி மக்களின் வழிபாட்டுத்தலமாக திகழ்ந்தது.

    கட்டுமான பணி தொடங்கிய போது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள் பவானிசாகர், ராஜன்நகர், பண்ணாரி சுற்றுவட்டாரத்தில் குடியேறினர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் எடுத்து வரப்பட்டு பவானிசாகர், கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1955-ல் கட்டுமான பணி முடிந்த பின் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கி சிதிலமடைந்தன.

    அணை நீர்மட்டம் 48 அடியாக குறையும்போது டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.

    கடைசியாக கடந்த 2018-ம் வருடம் நீர்மட்டம் 48 அடியாக சரிந்த போது கோவில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகள் நீர்மட்டம் குறையாததால் வெளியே தெரியவில்லை.

    தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47.50 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் முழுவதும் காட்சியளிக்கிறது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 47 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. நீர்மட்டம் 35 அடியாக குறையும் பட்சத்தில் சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் மற்றும் பீரங்கி திட்டு பகுதிகள் வெளியே தெரியும் என்றனர்.

    • 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது?
    • அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களோடு மக்களாக இருந்து பிரச்சனைகளை உணர்ந்தவர் அருணாச்சலம். அதிமுகவை வீழ்த்த திமுக பல அவதாரங்களை எடுத்தது.

    அதிமுகவை அழிக்க திமுக போட்ட திட்டங்கள் தூள் தூளாக்கப்பட்டன. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்.

    அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன.

    3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது?

    தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை நன்கு அறிவேன். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.

    அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன.

    அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் இருந்தாலும், உணவு கொடுப்பவர் விவசாயிதான்.

    விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

    அதிமுகவின் அழுத்தத்தால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை கர்நாடகாவிடம் பேசி பெற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?

    10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள்.

    அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது
    • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.

    அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம் வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.
    • "இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. என்று ஆவேசமாக பேசினார்.

    கோபிசெட்டிபாளையம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.

    அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம், கண்காணிப்பு அலுவலரை பார்த்து, உங்க பெயர் என்னன்னு சொல்லுங்க... என்னவாக இருக்கீங்க என்று கேட்டார். அவர் ஒவ்வொரு கேள்வியாக கேட்க, தேர்தல் ஆணைய கண்காணிப்பு குழுவினரும், போலீசாரும் ஒவ்வொரு கேள்விகளுக்காக பதில் சொல்லியபடி இருந்தனர். தொடர்ந்து பேசிய ஏ.பி. முருகானந்தம், "இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. என்று ஆவேசமாக பேசினார்.

    கண்காணிப்பு நிலைக்குழுவினரும், 'செக் பண்ண சொல்லிருக்காங்க.. அதனால் செக் பண்றோம்.. நாங்கள் மிரட்டவே இல்லை.. டிராபிக் ஆகும் என்று கூறி தான் ஓரமாக வர சொன்னோம்.." என்று பதில் சொன்னார்கள்.

    அதற்கு, மரியாதையாக பேசி பழக வேண்டும்.. புரியுதா?.. இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என ஏ.பி.முருகானந்தம் கூறினார்.

    அப்போது, பதில் அளித்த போலீசார், "சார்.. நாங்கள் மரியாதையாக தானே பேசுகிறோம்.. அங்கே டிராபிக் ஆவதால் இங்கே ஓரமாக வரத்தான் சொன்னோம்.. யாரையுமே நாங்கள் மரியாதை குறைவாக பேசவில்லை" என்று கூறினர்.

    மீண்டும் பேசிய ஏ.பி.முருகானந்தம், போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ×