என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் அடுத்த அவத்திபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). ஆட்டோ டிரைவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கும் போது குறைந்த அளவு வட்டி என்று சொல்லி விட்டு பின்னர் அதிகமாக வட்டி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரோதமும் இருந்து வந்துள்ளது. கார்த்திக் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டார்.
இந்நிலையில் கார்த்திக் அண்ணன் முனிராஜ். அதே நபரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக முனிராஜ், கார்த்திடம் பேச வேண்டும் என்று அந்த நபர் இருவரையும் சம்பவ இடத்துக்கு வர சொல்லி உள்ளார்.
கார்த்திக்கும், அவரது அண்ணன் முனிராஜீம் அந்த நபர் கூறிய இடத்துக்கு வந்தனர். அங்கு அந்த நபருடன் இன்னும் சிலர் இருந்தனர். அவர்களிடையே தகராறு ஏற்பட்டு கார்த்திக்கை அந்த நபரும் அவருடன் இருந்தவர்களும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி நால்ரோட்டை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார்.
மனோன்மணி துணிகளுக்கு இஸ்திரிபோட்டு சம்பாதித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 6 பேரிடம் ரூ. 1½ லட்சம் கடன் வாங்கினார்.
அந்த பணத்துக்கு வட்டி சேர்த்து இதுவரை ரூ. 3 லட்சத்தை அவர் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் கொடுத்தவர்களில் 3 பேர் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
இந்த கந்து வட்டி கொடுமையால் மனம் உடைந்த மனோன்மணி கடந்த தீபாவளி அன்று தற்கொலைக்கு முயன்றார். அவரது மகள் கோவையை சேர்ந்த தனது கல்லூரி நண்பருடன் சேர்ந்து தாயை காப்பாற்றினார்.
பின்னர் மனோன்மணியும், அவரது மகளும் கோவைக்கு சென்று நண்பர் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கடன் கொடுத்த அந்த 3 பேரும் கோவைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டினர்.
இதனால் இன்று மனோன்மணி கந்து வட்டி புகார் கொடுக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தனது கையில் மண் எண்ணை கேன் வைத்திருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்தனர். துரிதமாக செயல்பட்ட அவர்கள் மனோன்மணியிடம் இருந்து மண் எண்ணை கேனை பறித்தனர்.
அவர்களிடம் கந்துவட்டி கொடுமையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக மனோன்மணி கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் இன்று கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண் எண்ணை கேனுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பவானி:
த,மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மதியம் பவானி அடுத்த சமத்துவபுரம் பகுதியில் நடந்த கட்சி கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
மணல் விலை ஏற்றத்தால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. ஆகவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலை உயிர்ப்பிக்க செய்ய வேண்டும்.
டெங்கு நோயால் கடந்த மாதம் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என த.மா.கா. ஏற்கனவே கூறி உள்ளது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கமலஹாசன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் பார்த்து அவர்களை தேர்வு செய்வார்கள்.
டெங்கு நோயால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். டெங்கு நோய் இல்லாத மாநிலமாக்க செய்ய வேண்டும்.

ரேசனில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உயர்த்திய விலையை குறைக்க வேண்டும். விலை ஏற்றம் குறித்து அமைச்சர் பேசிய பேச்சு பொறுப்பற்ற பேச்சு, இதை நான் கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் இடத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 2 பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்னர்.
அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பாகனை கோவிலை சேர்ந்த சுப்பிரமணி (வயது 63) மற்றும் அவரது மகன் சக்திவேல் (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 11 செல்போன்கள் இருந்தது. அந்த செல் போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 7.8.17-ந் தேதி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 27 செல்போன்கள் ஒரு ரெயிலில் பார்சல் அனுப்பப்பட்டது. அந்த செல்போன் அனைத்தும் மாயமானது. அதை அவர்கள் கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். அதில் 11 செல்போன்களை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தந்தை-மகன் ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அந்தியூர் வனச்சரகம் மைக்கேல்பாளையம் வன எல்லை பகுதியில் நேற்று மாலை அந்தியூர் ரேஞ்சர் ராமராஜன் தலைமையில் வனவர் ரவிச்சந்திரன், வனக்காப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் மான்களை பிடிக்க மூங்கிலால் செய்யப்பட்ட கண்ணி வைக்கப்பட்டிருந்ததும், அந்த கண்ணியில் அரிய வகை விலங்கினமான கருமான் ஒன்று சிக்கி இறந்து கிடப்பதும் தெரியவந்தது.
அதன் அருகில் 2 பேர் நின்றனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர்.
அவர்கள் 2 பேரும் கடம்பூர் அருகே உள்ள பொங்காடை பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மாதன் (35), சடையன் மகன் மாதேஷ் (35) என்பது தெரியவந்தது.
அவர்கள் வேட்டையாடிய கருமான், வேட்டையாட பயன்படுத்திய மூங்கில் கண்ணிகள், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்கள் வேட்டையாடிய அரிய வகை விலங்கினமான கருமான் என்பதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் பவானி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கோபி மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.11 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்து கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன் பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறைக்காக ரூ.263 கோடி ஒதுக்கினார். அதன் அடிப்படையில் கல்வித்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக கல்வித்துறையில் சிறப்பிடம் பெற்று திகழ்கிறது.
உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருகிற நவம்பர் 15-ந் தேதி முதல் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

மாற்றம் என்பது மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது.
வருகிற 3 ஆண்டுகளுக்கு பிறகு வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் தரக்கூடிய கல்வித்துறையாக தமிழக கல்வித்துறை திகழும். பிளஸ்-2 படித்தவுடன் வேலை வாய்ப்புகள் கிடைக்க பல மாற்றங்களை கொண்டு வர உள்ளோம்.
மாணவர்களுக்கு படிப்படியான திட்டங்களை செயல்படுத்துகின்ற இந்த வேலையில் வரும் டிசம்பர் மாதத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டுகள் மூலம் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோபி நகராட்சி பகுதியில் ரூ.17 லட்சம் செலவில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வினியோகத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. (அம்மா) அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை சசிகலா பற்றியோ தினகரன் பற்றியோ தவறாக பேசியது இல்லை. பொதுவாக கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதையுடன் உள்ளனர். எனவே அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிய வருகிறது என்று கூறினார்.

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கோபியில் அவர் நிருபரிடம் கூறியதாவது:-
நான் அரசியலிலும் பொதுவாழ்விலும் பச்சோந்தியாக மாறுபவன் அல்ல. நேர்மையாக செயலாற்றி வருகிறேன்.
நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் சிறப்பாக அரசியல் செய்தவன். எனது அரசியல் வயதுகூட அவருக்கு (புகழேந்தி) இல்லை. அவர் என்னை பற்றி கூறிய கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் மாவட்டத்தில் கோபி, பவானி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-6
கோபி- 46
பவானி-25
பெருந்துறை-36.2
சத்தியமங்கலம்-5
மொடக்குறிச்சி-82
கவுந்தப்பாடி-35
சென்னிமலை-7
வரட்டுப்பள்ளம்-89
தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வருகிறது.
அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேறுகிறது.
இதனால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், மோதூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு இதேபோன்று கன மழை பெய்து குண்டேரிபள்ளம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது.
இதேபோல தற்போதும் அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஜெயலலிதா மரணம் பற்றி அந்த கமிஷன் விசாரித்தால் முதலில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தான் விசாரிக்க வேண்டும். அது நடக்கப்போவதில்லை. எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. தற்போது டெல்லியில் விற்கப்பட்டுவிட்டது. அதை மீட்கவே சசிகலாவும், தினகரனும் போராடுகிறார்கள்.
இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. எங்கள் அணி சார்பில் 7 லட்சம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி அணி சார்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் பொதுச் செயலாளர் சசிகலா என்றும், துணை பொதுச் செயலாளர் தினகரன் என்றும் குறிப்பிட்டு கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
தற்போது அதை அவர்கள் வாபஸ் பெற்று உள்ளனர். இப்படி அவர்கள் மாறி மாறி செய்வது என்ன நியாயம்? அமைச்சர் ஒருவர் பேசும்போது, மோடி இருக்கிறார். பார்த்துக் கொள்வார் என்று கூறி உள்ளார்.
இரட்டை இலை தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அமைச்சர் இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.
எங்கள் அணிதான் உண்மையான அ.தி.மு.க. அணி. நாங்கள் பொதுக் குழுவை கூட்டி எங்கள் பலத்தை நிரூபிப்போம். அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி சசிகலாவையும், தினகரனையும் நீக்கினர்.அது பொதுக்குழுவே அல்ல.
என்னை பார்ப்பவர்கள் அனைவரும் தமிழக அரசை எப்போது வீட்டுக்கு அனுப்புவீர்கள்? என்று கேட்கிறார்கள்.அந்த அளவுக்கு இந்த அரசு எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது.

இந்த அரசை ஆட்டவும் முடியாது. அசைக்கவும் முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஒரு முதல்-அமைச்சர் இவ்வாறு பேசுவது நாகரீகமற்றது. இதற்கு கூடிய சீக்கிரம் பதில் கிடைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இது பற்றி மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறி புலம்பியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ, பொதுத் தேர்தலோ எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததுதான். இந்த அரசில் இதெல்லாம் சகஜம் தான்.
அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு தடுப்பு நடவடிக்கை என்று கூறி ஒவ்வொரு இடத்துக்கும் சுற்றுலா சென்று வருகிறார். அவர் விளக்கம்தான் அளிக்கிறார். டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் நிறுவனம், ஆஸ்பத்திரிகளிடம் டெங்கு பெயரில் பணம் வசூலிக்கிறார்கள்.
திருமாவளவனை தமிழிசை அவதூறாக பேசி உள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதாவை யார் எதிர்த்து பேசினாலும் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்.
நாஞ்சில் சம்பத் மீது கூட 11 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கா போடப்படுகிறது?
இவ்வாறு புகழேந்தி கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை இலாகா அறிவித்திருந்தது. அதன்படி சென்னை புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்கயில் இன்று மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் முன்கூட்டியே அதாவது நேற்று முன்தினமே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. மாவட்டத்தின் வனப் பகுதியான சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மற்றும் குன்றி பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மலை அடி வாரத்தில் உள்ள குண்டேரிபள்ளம் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
42 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணை 30 அடியாக இருந்தது. இந்த பலத்த மழையால் ஒரே நாளில் 10அடி உயர்ந்து 40 அடியானது.
இந்த நிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் இன்று காலை அணை முழு கொள்ளவை எட்டி 42 அடியை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் வினாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிரம்பி வழியும் குண்டேரிபள்ளம் அணையை பார்க்க சுற்றுலா பயணிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு பகுதியில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் 5 மி.மீ. மழையும், கவுந்தப்பாடியில் 9 மி.மீ. மழையும் பெய்தது. ஈரோட்டில் சாரல் மழை பெய்தது.
மேலும் ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பனிமூட்டமும் காணப்பட்டது.
சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கடந்த 19-ந் தேதி திடீர் ஆய்வு நடத்தினார்.
ஓட்டப்பாறை ஊராட்சி மேலப்பாளையம் மற்றும் மாதேஸ்வரன் நகரில் ஆய்வு செய்தார். அங்கு இருந்த மேல்நிலைத்தொட்டியினை வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாக பொய்யாக ஊராட்சி செயலாளர் பழனிசாமி கணக்கு காட்டி வந்துள்ளார்.
இது குறித்து மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் சரியான சாக்கடை வசதிகள் செய்யவில்லை. கொசு ஓழிப்பு பணிகள் நடக்கவில்லை என்றும் கூறினர்.
டெங்கு தடுப்பு பணியில் மிக அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதனால் பணியில் அலட்சியம் காட்டியதற்காக ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஓட்டப்பாறை ஊராட்சியில் பணியாற்றி வரும் செயலாளர் பழனிசாமி சிறுக்கழஞ்சி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிறுக்கழஞ்சி ஊராட்சி செயலாளர் அய்யாவு ஓட்டப்பாறை ஊராட்சிக்கு நியமிக்கப்பட்டார். கலெக்டர் பிரபாகர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மொட்டளம் ஏகாளிமேட்டை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகள் தீபா.
கோபி அடுத்த சாக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீபா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல மாணவி தீபா பள்ளிக்கூடம் சென்றாள். ஆனால் மாலை வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் தீபா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இன்று காலையும் தீபாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். அப்போது ஏகாளிமேடு பகுதியில் உள்ள ரோட்டோர பள்ளத்தில் தீபா பள்ளி சீருடையுடன் பிணமாக கிடந்தார்.
இதை கண்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர். இது பற்றி வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீபாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது தீபா வாகன விபத்தில் இறந்திருப்பது தெரியவந்தது. தீபா நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். வீடு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
தனது வீட்டை நோக்கி அவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் மாணவி தீபா ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
காலையில் பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாக சென்ற மகளை மறுநாள் காலை ரோட்டோர பள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க உருக்கமாக இருந்தது.
இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மீது மோதிய வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






