என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை: குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிந்தது
    X

    ஈரோடு மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை: குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிந்தது

    ஈரோடு மாவட்டத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. வனப்பகுதியில் பெய்த மழையால் இன்று காலை குண்டேரிபள்ளம் அணை முழு கொள்ளவை எட்டி 42 அடியை நிரம்பி வழிகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை இலாகா அறிவித்திருந்தது. அதன்படி சென்னை புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்கயில் இன்று மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் முன்கூட்டியே அதாவது நேற்று முன்தினமே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. மாவட்டத்தின் வனப் பகுதியான சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மற்றும் குன்றி பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மலை அடி வாரத்தில் உள்ள குண்டேரிபள்ளம் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

    42 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணை 30 அடியாக இருந்தது. இந்த பலத்த மழையால் ஒரே நாளில் 10அடி உயர்ந்து 40 அடியானது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் இன்று காலை அணை முழு கொள்ளவை எட்டி 42 அடியை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் வினாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நிரம்பி வழியும் குண்டேரிபள்ளம் அணையை பார்க்க சுற்றுலா பயணிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு பகுதியில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் 5 மி.மீ. மழையும், கவுந்தப்பாடியில் 9 மி.மீ. மழையும் பெய்தது. ஈரோட்டில் சாரல் மழை பெய்தது.

    மேலும் ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பனிமூட்டமும் காணப்பட்டது.
    Next Story
    ×