என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் கடை வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ஹேமலதா (40).
கணவன்- மனைவி 2 பேரும் நேற்று காலை காரில் கோவை சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் சத்தியமங்கலம் வந்தனர். சீனிவாசன் காரை ஓட்டி வந்தார். அவர்கள் நேற்று மாலை கோவை- சத்தியமங்கலம் மெயின் ரோடு சத்தி பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்தனர்.
அப்போது அந்த வழியாக எதிரே ஒரு லாரி வந்தது. அந்த லாரி மீது மோதாமல் இருக்க காரை சீனிவாசன் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய கார் ரோட்டோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் சீனிவாசன்- ஹேமலதாவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு கொண்டு சென்றனர்.
அங்கு ஹேமலதா சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சத்திய மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள கராண்டிபாளையம் காட்டு வலசு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 77). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (68).
இவர்களுடன் முத்துசாமியின் மகள் ராதாமணி (42), மருமகன் சண்முகம் (45) ஆகியோரும் வசித்து வந்தனர். சண்முகம் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை முத்துசாமி மாடுகளை மேய்க்க அவிழ்த்து சென்றார். அப்போது அந்த பகுதியில் கூட்டில் இருந்து கலைந்த மலைத் தேனீக்கள் வட்டமிட்டது.
திடீரென அந்த தேனீக்கள் முத்துசாமியை கொட்டியது. இதில் அவர் காயம் அடைந்து சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மனைவி வள்ளியம்மாள், மகள் ராதாமணி, மருமகன் சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.
அப்போது அந்த தேனீக்கள் வள்ளியம்மாள், ராதாமணி, சண்முகம் ஆகியோரையும் கொட்டியது. இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் அந்தியூர், பவானி, சென்னிமலை, கோபி பகுதிகளில் பலர் பலியாகி உள்ளனர். முக்கியமாக சிறுவர், சிறுமிகளை அதிகமாக டெங்கு பலி வாங்கி உள்ளது.
கடந்த 25-ந்தேதி அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த ஜான்சனின் மகனும் பி.பி.எம். பட்டதாரியுமான ரஞ்சித்குமார் (வயது 28) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ரஞ்சித்குமார் பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆனது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் பவானி அருகே சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். பவானி அருகேயுள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு.
இவரது மகன் மகந்த் (6). இவர் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவரை அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் நேற்று மாலை மகந்த் உயிரிழந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல முத்து(வயது56). இவரது மனைவி ராஜாமணி. இவர்களது மகன் நவீன் (28). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
செல்லமுத்து உளவுப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பவளத்தாம் பாளையத்தில் இருந்து மூலப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
பவளத்தாம் பாளையத்தை அடுத்து வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்லமுத்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செல்லமுத்துவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்ல முத்து பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடுக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கிருஷ்ணம் பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரகுமான். சொந்தமாக பேன்சி கடை வைத்துள்ளார். கடை பக்கத்திலேயே இவரது வீடு உள்ளது. ரகுமானின் மாமியார் வீடு தாராபுரத்தில் உள்ளது. அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் ரகுமான் குடும்பத்துடன் தாராபுரம் சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டு கதவின் பூட்டை கடப்பாறையால் நெம்பி திறந்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் 8 பீரோ இருந்தது. அந்த 8 பீரோவையும் மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே இருந்த துணி மணி மற்றும் பொருட்களை வாரி இரைத்தனர்.
இதில் ஒரு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரகுமானுக்கு தகவல் கொடுக்கவே அவர் விரைந்து வந்தார். வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அவர் கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணரும் வந்து கை ரேகையை பதிவு செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
ஈரோடு திருநகர் காலனி பாலசுப்பிரமணி வீதியை சேர்ந்தவர் ரபீக். லெதர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்தனர். ஆனால் பீரோவில் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கொள்ளை கும்பல் தான் கை வரிசை காட்டி இருக்க கூடும் என கருதி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் கிராமம், கொங்காடை, கெட்டிபோடு பகுதியை சேர்ந்தவர் தொட்டமாதி (வயது 55).
சம்பவத்தன்று தொட்டமாதி தனது உறவுக்கார பெண், தனது பேரன் சித்தேசுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வண்டியை சித்தேஸ் ஓட்ட தொட்டமாதி, உறவுக்கார பெண்ணும் பின்னால் உட்கார்ந்து வந்தனர்.
வண்டி எலந்தமர வளைவு பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வளைவில் எதிரே திரும்பிய லாரியின் வலது பக்கம் மோட்டார் சைக்கிள் மீது உரசியது.
இதில் தொட்டமாதியும், உறவுக்கார பெண்ணும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தொட்டமாதி மீது லாரியின் வலதுபுற பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தொட்டமாதி இறந்து விட்டார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையாக திகழ்வது மேட்டூர் அணை. சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் உள்ள இந்த அணையால் தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வு உள்ளது.
மேலும் காவிரி ஆற்றின் அழகுக்கும் மேட்டூர் அணை தண்ணீர் தான் அழகு கூட்டுகிறது.
மேட்டூர் அணையை ஆங்கிலேயர்கள் கட்டினாலும் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நமது தமிழர்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேட்டூர் அணை கட்டி முடிக்க பெரும் பங்காற்றியவர் ஆங்கில பொறியாளர் எல்லீஸ். இவருக்கு மேட்டூர் அணை கட்ட பலர் உதவியாளர்களாக இருந்தாலும் பொறியாளர் எல்லீசுக்கு பெரும் உதவியாக விளங்கியவர் பி.ஆர்.கண்ணப்பன். ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு இப்போது வயது 105.
மேட்டூர் அணைக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அணை கட்டி முடிக்கும் வரை தொடர்ந்து தன்னையே முழுமையாக ஆர்ப்பணித்து கொண்டவர். அணை கட்டி முடித்து 1943-ம் ஆண்டு திறப்பு விழாவின் போது சிறப்பாக அணை கட்ட பணி ஆற்றிய கண்ணப்பனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் புனல் மின் நிலையத்தில் பணி புரிய பணி நியமன ஆணையையும் ஆங்கில பொறியாளர் எல்லீஸ் வழங்கினார்.
இந்த நிலையில் கடந்த 21.11.2012-ம் ஆண்டு கண்ணப்பன் தனது 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். தனது 105-வது வயதை வரும் (நவம்பர் மாதம்) 11-ந் தேதி குடும்பத்தினருடன் கொண்டாட உள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ஒரே காரணத்துக்காக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய எந்த ஒரு பணி பலன்களும் இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லையாம்.
பணியில் இருந்த போது அதாவது 1947-ல் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தான் வசிப்பதற்காக வாங்கிய வீட்டை இப்போது விற்று பெரியார் நகரிலேயே ஒரு வாடகை வீட்டில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வசித்து வருகிறார்.
கண்ணப்பனின் முதல் மனைவி சரஸ்வதி பாய். இவர்களுக்கு தனலட்சுமி, வேதவள்ளி, குமரவேல் என 3 பிள்ளைகள். 1971-ல் ரத்தக் கொதிப்பு நோயால் சரஸ்வதி பாய் இறந்து விட்டார். மூத்த மகள் தனலட்சுமிக்கு இப்போது 75 வயதும், இளைய மகள் வேத வள்ளிக்கு 71 வயதும் ஆகிறது. மகன் குமரவேலுக்கு 65 வயதாகிறது.
மகள்கள் 2 பேரும் பெங்களூரிலும், மகன் சென்னையிலும் வசித்து வருகிறார்கள். இவர்கள் மூலம் 8 பேரன்- பேத்திகள், 7 கொள்ளு பேரன்-பேத்திகளும் உள்ளனர்.

முதல் மனைவிக்கு பிறகு கண்ணப்பன் தனம் என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார்.
கண்ணப்பன் கூறும் போது, ‘‘தற்போது 105 வயதாகும் எனக்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். மேட்டூர் அணை கட்ட பாடுபட்ட எனக்கு சொந்த வீடு கூட இல்லை. அரசிடமும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் என் கடைசி காலத்தை இப்படியே ஓட்டி விடுவேன்’’ என்றார்.
வியக்கத்தக்க மாபெரும் மேட்டூர் அணை உயர எழும்ப காரணமாக இருந்த கண்ணப்பன் என்ற தமிழனுக்கு உதவி கிடைக்குமா?.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்கனில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்து ஈரோட்டுக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல கர்நாடகம், மைசூரில் இருந்தும் ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 2 மாதம் முன்பு வரை விளைச்சல் அமோகமாக இருந்ததாலும், ஈரோட்டுக்கு வரத்து அதிகமாக இருந்ததாலும் ஈரோடு மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.75 முதல் 80 வரை விற்கப்பட்டது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது மழை அதிகமாகி உள்ளதால் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியிலும் விளைச்சல் குறைவு.
இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு 7 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும்.
ஆனால் தற்போது அது குறைந்து 4 டன் வெங்காயமே வருகிறது. இந்த வரத்து குறைவு காரணமாக ஈரோட்டில் சின்ன வெங்காயம் விலை மேலும் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ரூ. 100-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று ரூ. 140 வரை விற்பனையாகிறது. சின்ன மார்க்கெட்டில் 120 ரூபாய்க்கும், பெரிய மார்க்கெட்டில் 140 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் திருப்பதி டெக்ஸ் என்ற பெயரில் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையின் உரிமையாளர் ஈரோட்டை சேர்ந்த வெங்கடாச்சலம் ஆவார்.
இந்த பஞ்சாலை அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வட மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பகல் இரவு என 2 ‘ஷிப்டு’களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த ஆலையில் திருப்பூரில் உள்ள காட்டன் வேஸ்டுகளை வாங்கி வந்து அதை நூல் ஆக தயாரித்து மீண்டும் திருப்பூருக்கே அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த மில்லில் இன்று அதிகாலை 3 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக ஒரு எந்திரத்தில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மள..மளவென எரிந்து பரவ தொடங்கியது.
அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இது குறித்து உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களாலும் அணைக்க முடியவில்லை.

இதனால் ஈரோடு பெருந்துறை, அந்தியூர் ஆகிய ஊர்களில் இருந்தும் மேலும் 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு எரிய தொடங்கி தீ 6.10 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் மில்லில் உள்ள எந்திரம் பஞ்சுகள் கட்டிடம் என அனைத்தும் எரிந்து விட்டது. சேத மதிப்பு ரூ.1 கோடி இருக்கும்.
இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை 27-ந்தேதியே தொடங்கும். கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் முன்கூட்டியே அரசு தடுப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.
இப்போது பாருங்கள் ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் சென்னை நகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒருநாள் மழைக்கே இப்படி என்றால் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரம் என்ன பாடுபட போகிறதோ?
அரசின் அலட்சியப் போக்கால்தான் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால நடவடிக்கை மூலம் வெள்ளத் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ரேசன் சர்க்கரை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். தமிழக அமைச்சர்கள் கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி உள்ளது. ஏழை-நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுதான் வருகிறார்கள். வங்கிகளில் கடன் பெறுவதில் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்தான் இதற்கு காரணம். எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வங்கிகள் மூலம் உரிய கடன்களை வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. அறிவிக்கப்பட்ட வருகிற 8-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருப்பு தினமாக கடைபிடிக்கிறது. ஈரோட்டில் அன்று நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொள்கிறார். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
டெங்கு சுகாதார அதிகாரிகள் போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்த ஆசாமிகள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று மாலை ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் இது வரை 38 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் டெங்கு நோயை பரப்பும் வகையில் இருந்த தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் பள்ளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்க நோட்டீசும் கொடுத்தும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் டெங்கு சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தலைமையில் சுகாதார பணியாளர்கள் ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் களத்தில் இறங்கி டெங்கு நோய் பரவும் பகுதிகளை கண்டறிந்து அறிவுரை கூறியும் அபராதம் விதித்தும் வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஈரோடு நகரில் சிலர் நாங்கள் டெங்கு சுகாதார அதிகாரிகள் என கூறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணம் வசூல் செய்து வருவதாகவும் மாவட்ட கலெக்டர் பிரபாகர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கானுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அதிரடி உத்தரவுப்படி போலி டெங்கு சுகாதார அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் சிமெண்ட்டு கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. சுதாகர் என்பவர் இதை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு ‘‘2 டிப்-டாப்’’ வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் ‘‘நாங்கள் டெங்கு சுகாதார அதிகாரிகள் உங்கள் நிறுவனத்தில் ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்’’ என்று கூறினர். பிறகு மிகவும் சாமர்த்தியமாக நம்பும் படி நிறுவனத்தை சுற்றி சோதனை செய்தனர். அந்த டிப்-டாப் ஆசாமிகள் உங்கள் நிறுவனத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது. இதனால் ரூ.50 அயிரம் அபராதம் விதிக்கிறோம்’’ என்று கூறினர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதாகரிடம் மேலும் அவர்கள், ‘‘இது பற்றி மேலிடம் கூறி உங்களுக்கு அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு ரூ.200 கொடுங்கள்’’ என்று கூறினர்.
மேலும் அந்த ஆசாமிகள் எழுதி கொடுத்த தாளில் மாநகராட்சி சீலோ வேறு எந்த அலுவலக சம்பந்தமான அறிகுறியோ இல்லை. வெற்று பேப்பரில் எழுதி கொடுத்தனர்.
இது சுதாகாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்படவே சுதாகர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று திரும்பி கேட்ட போது உஷாரான அந்த ஆசாமிகள் அங்கிருந்து நழுவி சென்றனர். தப்பி ஓட முயன்ற அவர்களை அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து பிடித்தார். அவர்கள் போலி அதிகாரிகள் என்று தெரிந்ததும் சிலர் தர்ம அடி கொடுத்து சூரம்பட்டி போலீசிடம் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு அடுத்த வெள்ளோட்டை சேர்ந்த ஜவகர் ராஜா (வயது 24), கவுண்டிச்சி பாளையத்தை சேர்ந்த முருகன் (24) என்றும் தெரிய வந்தது.
அந்த ஆசாமிகள் இதே போல் மேலும் பலரிடமும் நாங்கள் டெங்கு சுகாதார மேற்பார்வையாளர்கள் என கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்திருப்பது தெரிய வந்தது.
பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று மாலை ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வந்து பணம் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவாது:-
தற்போது மாநகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிறுவனங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருந்தால் அந்தந்த பகுதி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களே அபராதம் விதிக்க முடியும்.
சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் தவிர வேறு யாராவது டெங்கு ஒழிப்பு பணிக்கு வந்துள்ளோம், ஆய்வு செய்ய வேண்டும் என்று வந்தால் யாரும் நம்ப வேண்டும். அந்த நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் இதே போன்ற நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெருமாள் சந்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 37).
பழனிவேல் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வந்தார்.
தினமும் தனது மோட்டார்சைக்கிளில் நாமக்கலில் இருந்து வேலைக்கு செல்லும் பழனிவேல் திருச்செங்கோடு, ஈரோடு திண்டல் வழியாக திருப்பூருக்கு செல்வது வழக்கம்.
பின்னர் மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடுவார். இதே போன்று நேற்றும் மாலை வேலையை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
திண்டல் அருகே வந்த போது ரோட்டோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் எதிர்பாராத வகையில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.






