என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி சமையல் காண்டிராக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஜம்பை பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31). சமையல் காண்டிராக்டர்.

    நாகராஜ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாராம். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு நாகராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். இவருக்கு சோனா (வயது 26) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
    கவுந்தப்பாடியில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது லாரியில் நின்று கொண்டிருந்த 3 பேர் கீழே விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆப்பக்கூடல்:

    கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர்கள் மினிசாமி (வயது 53). பாட்டப்பன் (65). ராமசாமி (56). இவர்கள் 3 பேரும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள்.

    இவர்கள் ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் இவர்கள் 3 பேரும் பி.மேட்டுபாளையத்திலிருந்து ஆப்பக்கூடலுக்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

    லாரியின் பின்புறம் நின்று கொண்டு சென்றனர். பெருந்தலையூர் பாலம் அருகே சென்ற போது ஒரு வேகத்தடையில் அந்த லாரி வேகமாக ஏறி இறங்கியது.

    இதில் லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி ஓடும் லாரியிலிருந்து கீழே விழுந்தனர். 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மினிசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்த வேட்டி- துண்டுகள் எரிந்து சேதமானது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் அடுத்துள்ள கள்ளியம்புதூரில் பல தறி குடோன்கள் உள்ளன. இங்குள்ள வேட்டி- துண்டுகளை வாங்கி கேரளாவுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வார்கள். அதன்படி இன்று அதிகாலை சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் வேட்டி - துண்டு லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டது. லாரியை அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    அதிகாலை 3.30 மணியளவில் இந்த லாரி பெருந்துறை சிப்காட் அருகே வந்த போது லாரியில் எரிந்த ஒரு லைட்டிலிருந்து கசிவு ஏற்பட்டு ‘பொறி’ பறந்து வேட்டி-துண்டு மீது விழுந்து தீ பிடித்தது.

    இதை கண்ட டிரைவர் சுரேஷ் உடனே லாரியை ஓரமாக நிறுத்தி கீழே குதித்து உயிர் தப்பினார். பிறகு இது பற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் லாரியில் எடுத்து கொண்டு வரப்பட்ட வேட்டி- துண்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியின் பின்பகுதியும் எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓடும் லாரியில் தீ பிடித்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2574 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான குன்னூர், கோத்தகிரி பகுதியில் கன மழை கொட்டியது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 1661 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை அது உயர்ந்து வினாடிக்கு 2574 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 75.36 அடியாக உள்ளது. குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு 80 கனஅடி வீதம் தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து பரவலக மழை பெய்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகபட்சமாக மழை கொட்டியது. அந்த பகுதியில் 31 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது
    சென்னையில் கருணாநிதியை மோடி சந்தித்து நலம் விசாரித்ததுதான் உருப்படியான வி‌ஷயமாக சாதனையாக தெரிகிறது என இளங்கோவன் கூறியுள்ளார்.
    கோபி:

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று தி.மு.க- காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மாநில காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளை அளித்தார். சொன்னபடி எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை. மத்திய ஆட்சியில் சாதனை எதுவும் நடந்துள்ளதா? எதுவும் நடக்கவில்லை.

    மோடி செய்த சாதனை மற்ற பிரதமர்களை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்றதுதான் சாதனை.

    பணமதிப்பு இழப்புக்கு அவர் என்ன செய்தார்? எந்த கருப்பு பணத்தை ஒழித்தார்? பொது மக்களால் எந்த இடத்தையும் ஏன் அவர்களின் சொந்த இடத்தையே விற்க முடியாத நிலை வந்துள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. காசி முதல் கன்னியாகுமரி வரை மக்களிடம் பணம் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வேதனைப்பட்டு கொண்டு வருகிறார்கள்.


    காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது மற்றும் பல சாதனைகள் செய்யப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் ஒரேயொரு சாதனை நடந்து உள்ளது. சென்னையில் கலைஞரை மோடி சந்தித்து நலம் விசாரித்ததுதான் உருப்படியான வி‌ஷயமாக சாதனையாக தெரிகிறது. குஜராத்தில், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் மக்கள் எல்லோரும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக திரும்பி உள்ளனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்தை கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஒரு அமைச்சருக்கு பிரதமர் பெயரையே தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறி உள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்களுக்கு வாய்பூட்டு ஏன் போட்டார் என இப்போதுதான் தெரிகிறது.

    தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. தங்களை காப்பாற்றிக் கொள்ளவே மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    மக்கள் வரிப்பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது.


    நடிகர் கமல்ஹாசன் நல்ல நடிகர். திறமைசாலி. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதே சமயம் அவர் மக்களுக்கு புரியும்படி பேச வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன்.

    இன்று மழை வெள்ள சேதங்களை மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். ஆனால் முதலமைச்சரோ சேலத்தில் உட்கார்ந்து கொண்டு மழை வெள்ள சேதத்தை சரிபடுத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறி வருகிறார். இப்படி இருந்தால் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதியை எப்படி பெற முடியும்?

    தமிழ்நாட்டில் குளம், குட்டைகளை தூர்வார வில்லை. இதனால் தான் கடுமையான பாதிப்புக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். மணலை பதுக்கி கொள்ளை லாபத்துக்கு ஆளும் கட்சியினர் விற்று வருகிறார்கள். இதனை தடுத்து அனைவருக்கும் மணல் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
    பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபியில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு:

    கடந்த நவம்பர் மாதம் இதே நாளில் (8-ந் தேதி) ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி, தொழில் முடக்கம், வேலை இழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் தேசிய அளவிலான எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

    எனவே இன்று நவம்பர் 8-ந் தேதி தேசிய அளவில் கருப்பு தினமாக எதிர் கட்சிகள் அறிவித்தது.

    இதை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

    இதே போல ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவான்பவான் முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் தி.மு.க. தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தெண்டர் பல பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மேலும் கோபி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் உள்பட தி.மு.க. காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோட்டில் புதிய கட்டிடங்களில் வட்டார வள மையங்கள் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் 306 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை செயல்படுகிறது.

    பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என ஏற்கெனவே மாணவ - மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதலாக 5 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த 5 புதிய கட்டிடங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது.

    இது மாணவ- மாணவிகளையும் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    மாணவர்கள் கூறும் போது, “பள்ளியில் எங்களுக்கே போதிய வகுப்பறைகள் கிடையாது 2 வகுப்புகளை ஒன்றாக சேர்த்து பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய கட்டிடத்தில் வட்டார வள மைய அலுவலகத்தை எப்படி செயல்படுத்தலாம்! என்று கூறினர். பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பள்ளிக்கூடம் முன் தரையில் மாணவ- மாணவிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வள மையத்தை அகற்றிவிட்டு பள்ளி வகுப்பறை கட்டிடமாக்க வேண்டும் என்று கோரி மாணவ- மாணவிகள் கோ‌ஷமிட்டனர்.

    மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.
    நம்பியூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர், நவ. 6-

    நம்பியூர் அருகே உள்ள கும்மகாளி பாளையம் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் குப்பன் (வயது 57). விவசாய கூலி தொழிலாளி.

    இவர் சைக்கிளில் நம்பியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஒரு வளைவில் வந்தபோது அந்த வழியாக வந்த ஜீப் அவர் பின்னால் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து இறந்த குப்பனின் மகன் மருதாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கடத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிர்வேல் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    சத்தியமங்கலம் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, எக்கரை உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் பெய்த மழையால் குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மாநகரம், புறநகரங்களில் கடந்த 6 நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது.

    ஆனால் ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ இன்னும் அதிகளவில் பெய்ய தொடங்கவில்லை. அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் 28 மி.மீட்டர் மழை பெய்தது. இதே போன்று வரட்டு பள்ளம், கொடிவேரி, குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை போன்ற பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அம்மாபேட்டை பகுதியில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. இரவில் மழை பெய்துள்ளது.

    சத்தியமங்கலம் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, எக்கரை உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று விநாடிக்கு 23 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று விநாடிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 339 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 75.77 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1582 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆறுக்கு 1200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
    பெருந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரை சேர்ந்தவர் மணல் முரளி என்கிற முனியன் (வயது 41). இவர் பெருந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி சகுந்தலா (36). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு நல்லாம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயபாலன் (42) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் வந்தனர்.

    முனியனிடம் விஜயபாலன் சிலவற்றை கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சகுந்தலா தடுத்தார். அப்போது சகுந்தலா தாக்கப்பட்டதாக தெரிகிறது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக முனியனும், ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அம்பேத்கரும் வந்தனர்.

    அப்போது விஜயபாலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு முனியனையும், அம்பேத்கரையும் தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்த வழக்கில் விஜயபாலன் மற்றும் மெல்வின் (27), சிலம்பரசன், மாத்ரு (27), நந்தகுமார் (23), சங்கிலி (27), அண்ணாமலை (26) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெல்லை அருகே இன்று அதிகாலை ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 38). சிவகிரி மேலரதவீதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (42). பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் வீடு, வீடாக பால்பாக்கெட்டும் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காளிராஜ் வழக்கம் போல பால்போடச் சென்றார். அவர் சிவகிரி-விஸ்வநாதபேரியில் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த காளிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் சுதாரித்துக்கொண்ட காளிராஜ் காளிமுத்து கையில் இருந்த அரிவாளை பிடிங்கி அவரை வெட்டினார். இதில் காளிமுத்து தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காளிமுத்து வெட்டியதில் காளிராஜிக்கு கை, கால்களில் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட காளிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து காளிமுத்து கொலை செய்யப்பட்டது ஏன் என விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    காளிமுத்துவும் காளிராஜின் மனைவி கற்பகமும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அப்போது இருந்தே காளிமுத்து கற்பகத்தை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் காளிமுத்து கற்பகத்தை பெண் கேட்டு சென்ற போது அவரது பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் சில மாதங்களில் கற்பகத்தை அவரது பெற்றோர் காளிராஜூக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் காதலி தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு காளிராஜ் வீட்டுக்குள் புகுந்த காளிமுத்து கற்பகத்தை அரிவாளால் வெட்டினார்.

    இச்சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து கடந்த வருடம் வெளிவந்த காளிமுத்து தனது காதலியின் கணவரான காளிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில் தான் இன்று காலை காளிராஜை கொலை செய்யும் நோக்கில் அரிவாளுடன் வந்த காளிமுத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்செங்கோடு சிவன் கோவிலில் ரூ.7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், நந்தி சிலையை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கடத்தி வந்த விலை மதிப்புமிக்க மரகத லிங்கத்தை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக, டி.ஜி.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் ஆகியோர் நேற்று காலை ஈரோட்டுக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாறு வேடத்தில் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அறை எண் 21-ல் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

    அப்போது அறையில் மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலை மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த அறையில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இந்த மூவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகளை திருடியதும், அந்த 2 சிலைகளையும் ரூ.7 கோடிக்கு பேரம் பேசி விற்க முயன்றதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் அந்த 2 சிலைகளையும் அவர்களிடம் இருந்து மீட்டதுடன் 3 பேரையும் கைது செய்தனர்.

    இதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:-

    மீட்கப்பட்ட மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இதில் மரகதலிங்கம் 3 அங்குல உயரமும், மரகத நந்தி சிலை 1 அங்குல உயரமும் கொண்டது.

    மீட்கப்பட்ட மரகத சிலைகளின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். இந்த 2 மரகத சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த திருட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. எனவே அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×