என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்துள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் பலர் பலியாகி உள்ளனர்.
தற்போது மேலும் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.
சிவகிரி லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 8). இவள் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 1 வாரமாக சுமதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.
அங்கு பரிசோதனை செய்தபோது மாணவிக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சுபஸ்ரீயை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்க்க உருக்கமாக இருந்தது.
இதேபோல கோபி அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரு வாலிபர் இறந்தார். கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். ஒட்டல் தொழிலாளி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 19). பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
கடந்த சில நாட்களாக பாலகிருஷ்ணன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சுபஸ்ரீ, பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 23). இவர் கடந்த மாதம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
இவர் சனிக்கிழமை காலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி அருகே குன்னாங்காட்டு வலசில் உள்ள தனது அக்கா கவிதாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது அய்யகவுண்டன் பாளையம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என புகார் கூறப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘விபத்து நடந்து நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவே இல்லை. பொதுமக்களுடைய நண்பன் என்று கூறும் போலீசார் பொதுமக்களை மரியாதைக்குறைவாக நடத்துகிறார்கள்.
இதேபோல் பலமுறை செய்துள்ளனர். இனியும் தொடர்ந்தால் ஈரோடு எஸ்.பி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. அந்த மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நேற்று தனியார் கல்லூரி வாகனம் அந்த வழியாக சென்றது. அப்போது அந்த வாகனத்தின் மேல் பகுதி அந்த மின் கம்பியில் உரசியது.
இதனால் திடீர் தீப்பொறி எழுந்தது. வாகனத்தில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பெரிய விபத்து ஏற்படவில்லை.
சரக்கு லாரி ஒன்று அந்த வழியாக செல்ல வந்தது. அந்த பகுதியினர் ஏற்கனவே அச்சத்தில் இருந்ததால் சரக்கு லாரி செல்ல இருப்பதை மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் சரக்கு லாரி அந்த வழியாக சென்றது. மின் கம்பியால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து மினி பஸ்கள் சில மாற்று பாதையில் செல்கின்றன.
தாழ்வாக செல்லும் மின் கம்பி காரணமாக அந்த வழியாக செல்பவர்களும் மரண பயத்துடன் செல்கின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருந்துறை அடுத்த பிச்சாண்டாம் பாளையம், வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 55). பி.எஸ்.என். எல். அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெகதீஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2-ந் தேதி ஜெகதீஸ்வரி தனது கணவர் கண்ணுசாமிடம் கோவில்பட்டியில் உள்ள தாய்மாமன் மகன் வீட்டில் நடக்கும் விஷேசத்துக்கு சென்று வருகிறேன் என்று கூறி ரூ.600 வாங்கி கொண்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெகதீஸ்வரி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த கண்ணுசாமி மனைவியை உறவினர் வீட்டுக்கு சென்று தேடினார். ஆனால் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு ஜெகதீஸ்வரி வரவில்லை என்று கூறி விட்டனர்.
மேலும் ஜெகதீஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜெகதீஸ்வரி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் எனது உடல்நலம் சரியில்லை. அதனால் நான் யார் கண்ணும் படாத இடத்துக்கு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது.
இதையடுத்து கண்ணுசாமி பெருந்துறை போலீசில் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். அதன் பேரில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்டு வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெகதீஸ்வரியை தேடிவருகிறார்.
கொடுமுடி வட்டம் பாசூர் கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி பாசூர் தடுப்பணை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை. நீல நிற சர்ட், வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி, புதுக்காலணி, காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). வேன் டிரைவர். இவரது மனைவி சசிகலா (30). இவர்களுக்கு விஷால் (11), சுதீஸ் (7) என் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சசிகலா வீட்டு செலவுக்காக கார்த்திக்கிடம் பணம் கேட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார்த்திக் வீட்டை விட்டு கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கார்த்திக் வாந்தி எடுத்தார். இதுகுறித்து கேட்ட போது விஷம் குடித்துவிட்டேன் என்று கார்த்திக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா தனது உறவினருடன் கார்த்திக்கை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக்கை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு, பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் ஆஸ்பத்திரி கோவையிலும் இயங்கி வருகிறது.
கடந்த 6-ந் தேதி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், அவரது தாயாரும், கோவைக்கு சொந்த வேலை விசயமாக சென்று இருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரி கேஷியர் கார்த்திக்குக்கு சிறிது நேரத்தில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசியவர் நிர்வாக இயக்குனரின் குரலில் பேசியுள்ளார்.
தனக்கு அவசரமாக ரூ. 8 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், நான் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதை கேஷியர் கார்த்திக் நம்பினார்.
சில நிமிடங்களில் ஒரு கொகுசு காரில் ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் அனுப்பி வைத்ததாக கூறினார். ரூ.8 லட்சம் பணத்தை கார்த்திக் அவரிடம் கொடுத்து அனுப்பினார். அந்த நபரும் பணத்தை வாங்கி கொண்டு வேகமாக சென்று விட்டார்.
இந்த நிலையில் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு இரவில் நிர்வாக இயக்குனரும் அவரது தாயும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கணக்குகளை சரிபார்த்த போது ரூ.8 லட்சம் குறைந்தது குறித்து கார்த்திக்கிடம் கேட்டார்.
அப்போது அவர் நடந்த விவரங்களை கூறினார். இதை அதிர்ச்சி அடைந்த நிர்வாக இயக்குனரும், அவரது தாயும் நாங்கள் பணம் கேட்கவே இல்லை என்றனர். அப்போதுதான் யாரோ டாக்டர் குரலில் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து கேஷியர் கார்த்திக் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். கேஷியர் கார்த்திக்கிடம் பேசிய போன் எண்ணையும் வைத்து விசாரணை நடந்தது.
விசாரணையின்போது இந்த வழக்கில் ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்த அருண்சங்கர் (வயது 32), மற்றும் அவரது தம்பி சதீஷ் சம்பத் (29) ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஈரோடு டவுன் ஸ்டேட் பேங்க் ரோட்டில் பதுங்கி இருந்த அவர்களை வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் அருண்சங்கர் என்பவர் மோசடி நடந்த தனியார் ஆஸ்பத்திரியில் 2½ வருடமாக கேஷியராக பணியாற்றினார். சொந்த தொழில் தொடங்கியதால் கேஷியர் வேலையை விட்டு நின்றார்.
எனவேதான் அவருக்கு நிர்வாக இயக்குனரின் நடவடிக்கைகளும், அவர் எங்கு செல்வார்? எப்படி பேசுவார்? என்பதும் நன்கு தெரியும்.
இதையெல்லாம் அறிந்து தான் தனது தம்பி சதீஷ் சம்பத்துடன் சேர்ந்து இந்த நூதன பண மோசடியை அரங்கேற்றியுள்ளார். டாக்டர் குரலில் பேசினால் சந்தேகம் சந்தேகம் வராது என்ற எண்ணத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக கைதான அண்ணனும், தம்பியும் கூறினர்.
அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பணத்தையும், 2 செல்போன்களையும், பணம் வாங்குவதற்காக ஆஸ்பத்திரிக்கு அவர்கள் வந்த காரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
கேரள மாநிலம் கள்ளிகோட்டை மாந்தாவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி சஜிதா (வயது36).
சஜிதா நேற்று முன்தினம் இரவு மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் தனது மகளுடன் பயணம் செய்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது யாரோ மர்ம ஆசாமி ஒருவர் சஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினான்.
சஜிதா திடுக்கிட்டு விழித்து திருடன்..திருடன்..என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் அந்த மர்ம ஆசாமியை பிடித்தனர்.
அதற்குள் அந்த எக்ஸ் பிரஸ் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் அந்த கொள்ளையனை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தேவதானத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவனிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அருண் பாண்டியன் மீது சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்டதாக ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளது.
இதையடுத்து அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.
ஈரோடு மாவட்டம் திண்டல் தெற்கு பள்ளத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஏற்றி வர ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 40) என்பவர் காண்டிராக்ட் முறையில் வேன் ஓட்டி வந்தார்.
இன்று காலை அவர் மாணவ-மாணவிகளை ஏற்றி வருவதற்காக கருங்கல் பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதிக்கு சென்றார்.
அந்த வேனில் மாணவ- மாணவிகளை ஏற்றி இறக்குவதற்கு உதவியாக கருங்கல்பாளையம் ஜெயகோ பால் வீதியை சேர்ந்த வீரமணி (55) என்ற பெண் இருந்தார்.
அந்த வேன் கே.ஏ.எஸ். நகரை நெருங்கி வந்தபோது திடீரென செந்திலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து வேனை ஓட்ட முடிய வில்லை.
அந்த நேரத்திலும் அவர் தனது நெஞ்சில் கைவைத்தபடி பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் வேனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடுவதால் அவர் யாரும் எதிரில் வந்து வேனுக்குள் சிக்கிவிடாமல் இருக்க சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டே வந்தார்.
வேனுக்குள் இருந்த வீரமணியும் டிரைவரின் நிலையை உணர்ந்து சத்தமிட்டார். ஹார்ன் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறு மாறாக வருவதை அவர்கள் பார்த்தனர். விபரீதத்தை உணர்ந்த அவர்கள் ஓட்டம் பிடித்து தங்களை பாதுகாத்தனர்.
ஒரு சிலர் பலரை எச்சரித்து ஒதுங்கி போக செய்தனர். இதற்கிடையே தாறு மாறாக ஓடிய வேன் அந்த பகுதியில் உள்ள துரைராஜ் என்பவரின் டீக்கடை நோக்கி சென்றது.
இதை பார்த்த துரைராஜ் பதற்றமடைந்தார். பலர் அந்த கடையில் நின்று டீ குடித்துக்கொண்டு நின்றனர். அவர்களை நோக்கியும், டீக்கடையை நோக்கியும் வேன் வருவதையும், தாமதித்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதையும் உணர்ந்த துரைராஜ் அங்கு நின்றவர்களை சத்தமிட்டு உஷார்படுத்தினார்.
இதனால் அங்கு நின்றவர்கள் அங்கிருந்த தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர். டீக்கடைக்காரர் துரைராஜூம் தனது கடையில் இருந்து வெளியே ஓடி வந்துவிட்டார்.
சிறிது நேரத்தில் தாறுமாறாக ஓடி வந்த வேன் டீக்கடை மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. வந்த வேகத்தில் அந்த வேன் டீக்கடைக்குள் புகுந்து நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடி வந்தனர். வேனுக்குள் பள்ளி குழந்தைகள் இருக்குமோ என்ற பயத்தில் பலர் வேனுக்குள் சென்று பார்த்தனர்.
வேனுக்குள் பெண் வீரமணி மட்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதை பார்த்தனர். அவரை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வீரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டிரைவர் செந்தில் வேன் ஸ்டியரிங் மீது சாய்ந்து கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு செந்திலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியை சேர்ந்த 110 மாணவர்கள், சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளிளை சேர்ந்த 124 மாணவிகள், நகரவை ரெயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 113 பேர் என 347 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் இன்று நடந்தது.
கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால முரளி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள வசதியாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தொடங்க ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தினகரன் வீட்டில் வருமான வரிசோதனை நடந்து வருகிறதே என்று கேட்டதற்கு, செய்திதாளை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான், தாசில்தார் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி. பழனிசாமி, கேசவ மூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை என்பது காலதாமதமான நடவடிக்கை.
இந்த சோதனை அரசியலுக்காக நடக்கிறதோ... தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கிறதோ அல்லது தினகரனை மிரட்டுவதற்காக நடக்கிறதோ இப்படி எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டிய ஒன்று.
கைப்பற்றப்படும் சொத்துகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
சோதனைக்கு பிறகு சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டன? என்பதை வருமான வரித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இந்த சோதனை வருமானம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல ஊழலும் சம்பந்தப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நடக்கின்ற இந்த சோதனை மூலம் கண்டு பிடிக்கப்படுகிற உண்மைகளும் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
அரசியல் அழுத்தத்துக்காக இந்த வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும் கூட இது தேவை என்பது தான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது.
இவ்வாறு ஈஸ்வரன் அதில் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு, அக்ரஹாரம், அன்னைசத்யாநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 23). ராஜ்குமார் நேற்று வேலை விசயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஈரோடு பவானி ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் ராஜ்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜ்குமார் மீது பஸ்சின் பின் பக்க சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்து உயருக்காக போராடிய ராஜ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ராஜ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






