என் மலர்
ஈரோடு
பெருந்துறை, கோவை மெயின் ரோடு, காமாட்சி காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரஜினி என்கிற மனோகரன் (வயது 47). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கும், ஆக்டிங் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர் பெருந்துறையில் இருந்தபோது இவருக்கு பழக்கமான சபாபதி, செந்தில் மற்றும் ரகு ஆகியோர் மனோகரனிடம் வந்தனர்.
அவர்கள் மனோகரனிடம் பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் சூரியம்பாளையம் பகுதியில் மண்ணுளி பாம்பு குறைந்த விலையில் கிடைப்பதாகவும், அதை வாங்கி நாம் வேறு இடத்தில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய மனோகரன் தனது காரில் சபாபதி, செந்தில், ரகு ஆகியோருடன் சென்றார். ஆனால் அவர்கள் சொன்ன சூரியம்பாளையம் பகுதிக்கு செல்லாமல் காரை மெயின் ரோட்டிலேயே ஓட்டிச்செல்லுமாறு கூறினர்.
மனோகரனும் அவர்கள் கூறிய வழியில் காரை ஓட்டி சென்றார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சித்தோடு பகுதியில் உள்ள பெருமாள் செட்டியார் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஏற்கனவே இருந்த 3 பேர் மனோகரனை அருகில் இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து அவரது காரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஏமாற்றி காரை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மனோகரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சேலத்தில் இருந்த கோவைக்கு இன்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி (ஜவுளி சந்தை) அருகே வந்த போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மத்தியில் உள்ள செடிகளுக்கு ஊழியர் ஒருவர் லாரி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்த கொண்டிருந்தார்.
அப்போது வந்த பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த ஒடிசா மாநில தொழிலாளி ரகு (வயது 40) என்பவரும் சிக்கினார்.
இதில் அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோதிய வேகத்தில் பஸ்சின் முன் பகுதியும், லாரியின் பின் பகுதியும் நொருங்கியது.
மேலும் பஸ் டிரைவர் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சேலம், கோவையை சேர்ந்தவர்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு சித்தோடு, பவானி போலீசார் விரைந்து வந்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளை போலீசாரும் அந்த பகுதி மக்களும் மீட்டனர். ஈரோடு, பவானி ஆகிய பகுதிகளில் இருந்து 5 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு அதில் காயம் அடைந்த பயணிகளை பவானி மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் நிலவியது.
ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் டெக்ஸ்வேலியில் இன்று சர்வதேச சதுரங்க போட்டி தொடங்கியது.
இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு போட்டியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்களை இந்திய கடற்படையே துப்பாக்கியால் சுடும் சம்பவம் நடக்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு எங்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அவர்களின் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கவர்னருக்கு என சில அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து விசாரிக்கலாம். ஆலோசிக்கலாம். அதை விட்டு நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல.
மேலும் கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு செய்வேன் என்று கூறி உள்ளார். அவ்வாறு அவர் செய்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 18 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். கவர்னர் முதலில் இந்த மனுவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்.
அதைவிட்டு அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு பதவி மட்டும்தான் முக்கியம். அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். இதன்மூலம் இந்த அரசு ஒவ்வொரு உரிமைகளையும் இழந்து வருகிறது.

சசிகலா ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியது தாமதமான நடவடிக்கை.
இந்த சமயத்தில் இன்னொன்றையும் கேட்டுக்கொள்கிறேன். சசிகலாவுக்கு பல்வேறு வகைகளில் பணம் பெற்றுக்கொடுத்த ஓ.பி.எஸ். (துணை முதல்வர்), இ.பி.எஸ். (முதல்வர்) வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும்.
பாரதிய ஜனதா அரசு பல்வேறு வாக்குறுதிகளை கூறி இருந்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்களுக்கு முன், 6 மாத ஆண் குழந்தையுடன் வந்த பெண் அங்கு இருந்து அவல்பூந்துறை சேர்ந்த மூதாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி குழந்தையை அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை கூறி சென்றார்.
குழந்தையை விட்டு சென்ற பெண்ணின் பையில் இருந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கிராமம், வெள்ளைசாமி மகன் முருகேசன் என்ற முகவரி இருந்தது. மேலும் கடிதத்தில் கலைச்செல்வி என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து ஈரோடு போலீசாரின் பரிந்துரைப்படி புதுகை போலீசார் குடுமியான்மலை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடித்தில் இருந்த முகவரியில் முருகேசன் தந்தை வெள்ளைசாமி வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளைசாமி அவரது மனைவி செல்லமாள், மற்றும் முருகேசனின் மனைவி கண்ணம்மா ஆகியோர் நேற்று மாலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்காக வந்தனர்.
அப்போது முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், முருகேசன் இரண்டு ஆண்டுகளாக தங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. கலைச்செல்வியும் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைசாமி தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கும் 6 மாத ஆண் குழந்தைக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக வெள்ளைசாமி எழுதி கொடுத்து சென்று விட்டார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
முருகேசனை கண்டு பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையில் இந்த குழந்தை யாருடையது? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். அதுவரை குழந்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை நல வார்டில் வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள பள்ளபாளையம் ஏசுநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 60). இவர் தன் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்தார்.
அப்போது மணிக்கூண்டு அருகில் உள்ள மஜித் தெரு அடுத்த கந்தசாமி வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவரது பின்னால் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதபமாக இறந்தார்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். இது குறித்து ஈரோடு கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த முதியவரின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ரோட்டில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், சென்னை, நாமக்கல், திருச்சி, திருச்செங்கோடு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த வழியாக செல்கிறது. இந்த விபத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் எல்லை மாரியம்மன் கோவில் மற்றும் சத்தி ரோடு வழியாக வாகனங்கள் வரிசையாக நின்றன.
மேலும் அந்த பகுதியில் மொத்த வியாபார கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வியாபாரிகளும் அங்கு திரண்டதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது.
மணிக்கூண்டு மற்றும் கடை வீதிக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக அதிக அளவில் சென்று வருகிறது. அந்த வழியாக வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் பரப்பரப்பான நிலை நிலவியது.
கோபி அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் கவுசல்யா (வயது 20). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆல்வின் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
காதலிப்பதாக கூறி கவுசல்யாவிடம் ஆல்வின் நெருங்கி பழகினார். ஆசை வார்த்தை கூறி கவுசல்யாவிடம் ஆல்வின் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் கவுசல்யா கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆல்வினிடம் கவுசல்யா கூறினார். இதை அறிந்த ஆல்வின் பெற்றோரிடம் இது பற்றி கூற வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இதனால் தான் கர்ப்பமடைந்ததை கவுசல்யா வெளியில் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் நிறை மாத கர்ப்பிணி ஆனார்.
கடந்த 29-8-2017 அன்று அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடல் நிலை சரியில்லாமல் இருந்த அந்த குழந்தை மறு நாள் இறந்துபோனதாக கூறப்படுகிறது.
குழந்தை பிறந்து இறந்த பின்னரும் கவுசல்யாவை திருமணம் செய்யாமல் ஆல்வின் இழுத்தடித்தாராம். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் மறுத்து விட்டார்.
இது தொடர்பாக கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். புகாரில், ‘‘ஆல்வின் தன்னை ஏமாற்றி தாயாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’’ என்று கூறி இருந் தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கவுந்தபாடி அருகே உள்ள பொம்மன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). டிரைவர். இவருக்கும் பரிமளா (23) என்பவருக்கும் கடந்த 13-3-2009 அன்று திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பரிமளாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த பரிமளா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக 26-7-2017 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிமளா புகார் செய்தார்.
அதில், ‘‘எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டார். இதற்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்’’ என்று கூறி இருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தற்போது கோபி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்தார்.
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த முருகேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவி முத்து ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பெயர் பூங்கொடி. இவர்களது மகள் வைஷ்ணவி (வயது 15). இவர் பவானி அருகே உள்ள மைலம்பாடி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை 7.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவி வைஷ்ணவி திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
அவர் உடலில் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. வலி பொறுக்காமல் அலறினார்.
மகளின் சத்தம் கேட்டு அவரது தாயார் கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று பார்த்தார். அங்கு தன் மகள் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மாணவி வைஷ்ணவி உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி வைஷ்ணவி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் வேன் மற்றும் ஜீப்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் வார விடுமுறை நாட்களான சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் வனப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று வரலாம். சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் தற்காலிகமாக சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகங்களில் முன்பதிவு செய்து வனப் பகுதிக்குள் சென்று வரலாம்.
இந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட வண்ணபூரணி சுற்றுலா திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகள் அழைத்துச் செல் லப்பட்டனர்.
தலமலை வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் யானை, மான், கழுகு, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை கண்டு திகிலுடன் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
பிறகு சுற்றுலா பயணிகள் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்கு மரஹாடா வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அரிய வகை மான் இனமான பிளாக்பக் என்றழைக்கப்படும் வெளிநாட்டு மான்களை பார்த்ததாக தெரிவித்தனர்.
இதேபோல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட வனச்சரகங்களிலும் சென்று வனப்பகுதியை கண்டு ரசிக்க பொதுமக்கள் முன்பதிவு செய்தனர். அவர்களை அந்த பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தலமலை மற்றும் பவானிசாகர் வனச்சரகங்களில் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதால் முன்பதிவு தொடங்கியவுடன் உடனடியாக பதிவாகிவிடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊரில் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் என எதுவும் வருவதில்லையாம்.
அந்த ஊரில் உள்ள “போர்” பழுதாகிவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்களாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் நல்லூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்தனர். அங்கு சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் நடந்தரோடு முக்கியசாலை என்பதால் அப்பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரோட்டின் இரு புறமும் பஸ், கார், லாரிகள் என வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனும் வந்தார். அவர்கள் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
பெங்ளூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு, தினமும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.
அவர்கள் பொது பெட்டியில் சோதனை செய்த போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் தர்மபுரி மாவட்டத்தை மொரப்பூர், அண்ணாநகரை சேர்ந்த வேடியப்பன் மனைவி சத்தியவாணி (வயது 45) என்பதும், 12 பைகளில் 250 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டு சத்தியவாணியை ரெயில் பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரச்சலூர் அருகே உள்ள பள்ளியூத்து பூலக்காட்டை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சேதுபதி (வயது18). இதேபோல் பள்ளியூத்து மேட்டூர் மந்தையை சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் அஜித் (20).
வாலிபர்கள் சேதுபதியும், அஜித்தும் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாடி கட்டும் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
இவர்கள் அடிக்கடி பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். அதேபோல் இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை 9.30 மணி அளவில் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அரச்சலூர் அருகே கார வாய்க்கால் பக்கம் வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் சேதுபதிக்கும், அஜித்துக்கும் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மிட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பள்ளியூத்து பகுதியில சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் நிலவியது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோரும் உறவினர்களும் சென்று கதறியபடி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






