என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன் சேர்ந்து வைக்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு, வைராபாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). மாற்றுத்திறனாளி பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன்(33) என்பவரை ஒரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    குணசேகரன் அங்குள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். மூன்று மாதம் கணவன்-மனைவியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் திடீரென ஒரு நாள் குணசேகரனை அவர்களது பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    அதன் பின்னர் குணசேகரன் பிரியாவை சந்திப்பதை தவிர்த்து வந்தாராம். இது குறித்து கடந்த 6 மாதத்திற்கு முன் பிரியா தனது கணவர் குணசேகரனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

    மேலும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரியா புகார் அளித்தார். ஆனால் மகளிர் போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் இன்று வா நாளை வா என்று தன்னை அலைக்கழிப்பதாக பிரியா வேதனையுடன் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் எங்கு கிடைக்கும்? என அந்த மாற்றுத்திறனாளி பெண் தவித்து கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணான பிரியா ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    ஒரு வருடத்துக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். 3 மாதம் என்னுடன் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தினார். மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம்.

    ஒரு நாள் என் கணவரது அம்மா-அப்பா வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டனர். என் கணவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது பெற்றோர்தான் போனில் பேசினர்.

    “உன்னுடன் அவன் வாழ மாட்டான். அவனுடன் சேர்ந்து நீ எப்படி வாழ்கிறாய்.. என்பதை பார்ப்போம்?” என்று கூறி எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இவ்வாறு பிரியா கூறினார்.
    ஹேர்-டை அலர்ஜியால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணாமலை நகர், வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜா (வயது 65). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகனும், ஹரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    நடராஜா ஈரோட்டில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வந்தார். நடராஜா தனது தலைக்கு ஹேர்-டை அடிப்பது வழக்கம். அதே போன்று சமீபத்தில் ஹேர்-டை அடித்துள்ளார்.

    இதனால் நடராஜனுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் அவர் சிகிச்சை பெற்றார். எனினும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடராஜா மனவேதனையில் இருந்து வந்தார். அவரது மனைவி பரமேஸ்வரி ஆறுதல் கூறி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடராஜா தூக்குபோட்டு கொண்டார். வெளியே சென்ற பரமேஸ்வரி திரும்பி வீட்டுக்கு வந்த போது கணவர் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நடராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் நடராஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கும் மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்வது நின்று விட்டாலும் அவ்வப்போது மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு நகரின் புறநகர் பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய பகுதிகளில் 15 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் ஓடியது.

    லக்காபுரம், 46 புதூர் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் நடவுக்காக நிலத்தை தயார் நிலையில் சமப்படுத்தி வைத்திருந்தனர். அந்த வயல்களில் மழை தண்ணீர் தேங்கி நிலத்தை மேலும் பதப்படுத்தியது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    மேலும் நேற்று சென்னிமலை பகுதியில் 8 மி.மீ மழையும், கொடுமுடியில் 2 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 993 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 71.79 அடியாக உள்ளது.

    ஊட்டி மலை பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழையால் பவானிசாகர் அணைக்கும் மிதமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

    சுழற்சி அடிப்படையில் தண்ணீர் திறப்பால் 3 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்து விடுவது தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் தொடர்ந்து மீண்டும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கேள்வி கேட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் செயலுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 2017-2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்க விழாவும், எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்க விழாவும் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற விவசாயிகள் கடந்த ஆண்டு வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததில் முறைகேடு இருப்பதாகவும் தங்களது நியாயமான பிரச்சனைகளை அமைச்சர்களிடம் எடுத்து சொல்ல முறையிட்டவர்களை போலீசாரை கொண்டு வெளியேற்றியது மட்டுமல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் உச்சக் கட்டம்.

    அமைச்சர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நினைக்காமல் அவர்கள் சார்ந்த கட்சியினுடைய நிர்வாகிகளாக அரசு விழாவில் விவசாயிகள் மத்தியில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. விவசாயிகள் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களில் யாராவது ஒருவர் பதில் கூற முன் வந்திருக்க வேண்டும்.

    ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு உரிமையில்லையா? அப்படி கேள்வி கேட்பவர்களை போலீசாரின் உதவியுடன் கைது படலத்தை அரங்கேற்றுவது நியாயமா? தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நேரமிருக்கும் அமைச்சர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா?

    கைது நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளை ஒடுக்கி விடலாம் என்று ஆளும் அதிமுக அரசு நினைத்தால் தமிழகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காக மாபெரும் புரட்சி வெடிக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவர் ஒருவர் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு ரூ.6ž லட்சம் கட்ட சொல்லுவதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சாமிலி ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர்.

    தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மூலம் லோடுவேன் ஒன்று வாங்கினேன். மாதந்தோறும் கடன் கட்டி வருகிறேன். இந்த வண்டியின் ஒரிஜினல் பதிவு புத்தகம், இன்ஸ்சுரன்ஸ் உள்பட அனைத்து ரசீதுகளும் அவர்களிடம்தான் உள்ளது.

    வண்டியை புதுப்பிப்பதற்கு வண்டியின் ஆவணங்களை அந்த நிறுவனத்தில் கேட்டேன். ஆனால் அவர்கள் ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கட்டி உள்ளேன். ஆனால் அவர்கள் இன்னும் ரூ.4 லட்சம் தர வேண்டும் என கூறுகிறார்கள். எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஈரோடு மாநகர பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து ஹெல்மெட் கொள்ளையன் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறான்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் சண்முகவள்ளி நகரை சேர்ந்த விசாலாட்சி என்பவர் கடந்த 17-ந் தேதி காலை ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    செங்குந்தர் பள்ளி அருகே சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் விசாலாட்சி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினான்.

    இதே போல் ஈரோடு கைத்தறித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கீதா என்பவர் பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 3½ பவுன் செயினை பறித்து சென்றான்.

    நேற்று முன்தினம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அமிர்தகவுரி என்பவர் தனது மருமகளுடன் சம்பத் நகரில் வாக்கிங் சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமிர்தகவரி அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயினை பறித்து சென்றான்.

    இவ்வாறு தனியாக செல்லும் பெண்களை குறித்து வைத்து நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெண்கள் பீதியில் உள்ளனர். இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுப்பட்டவன் ஒரே நபராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.நகை பறிப்பு சம்பவங்கள் எதிரொலியாக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் உடன் செல்கின்றனர்.

    ஈரோடு சம்பத் நகர், பெருந்துறை ரோடு, வ.உ.சி.பூங்கா, பெரியார் நகர் பகுதி போன்ற பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே விவசாயியை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவிற்குட்பட்ட செம்மம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு துரைசாமி (10) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    பழனிச்சாமி தனது தோட்டத்திலேயே வீடு கட்டி மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு பழனிச்சாமி தனது மகன் துரைசாமியுடன் வீட்டின் வெளியே திண்ணையில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் பழனிச்சாமியின் கழுத்தை அறுத்து, தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பழனிச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அருகில் படுத்திருந்த சிறுவன் துரைசாமி இதை உணர்ந்து எழுந்தான். தந்தை மர்ம நபரால் தாக்கப்படுவதை அறிந்து சத்தம் போட்டு அழுதான்.

    இதை பார்த்த அந்த நபர் சிறுவன் துரைசாமியையும் கொலை செய்ய அவனது தலையில் பயங்கரமாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வெட்டுப்பட்டதில் நிலை குலைந்துபோன சிறுவன் துரைசாமி கட்டிலின் கீழ் பதுங்கி அதிக சத்தம் எழுப்பினான்.

    அவனது அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ருக்மணி வெளியில் வந்து பார்த்தார். அங்கு தனது கணவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், மகன் துரைசாமி தலையில் வெட்டுக்காயங்களுடன் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் எழுப்பினார்.

    அவரது சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தில் குடியிருக்கும் பாலமுரளி என்ற விவசாயி ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இது பற்றி வரப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த சிறுவன் துரைசாமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், வரப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிர்வேல் ஆகியோர் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து ஒடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகள் சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தப்பி யோடிய கொலையாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசு (வயது 55) என்பவர் அதே பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரிடம் உறவினரின் மகனுக்கு வேலை வாங்க ரூ. 11 லட்சம் பணம் கொடுத்தார்.

    வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் கல்யாணி மோசடி செய்தார். இதனால் விரக்தி அடைந்த தங்கராசு தீக்குளித்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரில் இருந்து உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் தி.மு.க.வினரும் அங்கு வந்தனர்.

    அவர்கள் அனைவரும் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். உறவினர்களும், தி.மு.க.வினரும் திரண்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தங்கராசு சாவுக்கு காரணமான கல்யாணியை கைது செய்ய வேண்டும். அவரிடம் இருந்து ரூ. 11 லட்சத்தை மீட்க வேண்டும். இல்லாவிட்டால் பிரேத பரிசோதனை முடித்து தங்கராசு பிணத்தை நாங்கள் வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் கூறினர்.



    இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளையம் போலீஸ் பாலமுருகன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவரிடமும் உறவினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம், ‘‘கல்யாணியை கைது செய்துவிட்டோம். ரூ.11 லட்சத்தை அவரிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். கைதான கல்யாணி மீது பள்ளிபாளையம் போலீசார் மோசடி, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பள்ளிபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தி அ.தி.மு. பெண் நிர்வாகி வீட்டு முன்பு தீக்குளித்த தி.மு.க. முன்னாள் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55). பஞ்சர் கடை நடத்தி வந்தார். தி.மு.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார்.

    இவரது தம்பி மகன் சித்தார்த் (22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் தனக்கு வேலை தேடி வந்தார்.

    அப்போது தங்கராசுவின் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்யாணி (40) என்ற பெண் சித்தார்த்துக்கு வேலை கிடைக்க உதவுவதாக கூறினார்.

    கல்யாணி நாமக்கல்லில் உள்ள அரசு நூலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார்.

    வேலை வாங்குவதற்காக சித்தார்த்திடம் இருந்து தங்கராசு ரூ. 11 லட்சம் பணத்தை வாங்கி கல்யாணியிடம் 3 தவணையாக கொடுத்தார். ஆனால் கல்யாணி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இது பற்றி பலமுறை கேட்டும் கல்யாணியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் தங்கராசு மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி கல்யாணியின் வீட்டுக்கு தங்கராசு சென்றார். பணம் தொடர்பாக கல்யாணியிடம் கேட்டார். அப்போதும் கல்யாணி சரியான பதில் சொல்லவில்லை.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற தங்கராசு தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    அவரது உடல் தீப்பற்றி எரிந்தது. அவர் அலறி துடித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைத்து தங்கராசுவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராசு இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    தங்கராசுவுக்கு ராணி என்ற மனைவியும், ஆனந்த் (35) என்ற மகனும், கவிதா (38) என்ற மகளும் உள்ளனர். கவிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆஸ்பத்திரியில் தங்கராசு சிகிச்சை பெற்றபோது அவரிடம் ஈரோடு 2-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

    அவரிடம் தங்கராசு நடந்த சம்பவங்களை 1 மணி நேர வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அ.தி. மு.க. நிர்வாகி கல்யாணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    தூத்துக்குடி நியூ காலனி, ஜெயராஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சனோஜ் தேவராயர் (வயது 32). இன்டீரியர் டெக்கரே‌ஷன் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயராணி (30). இவர்களுக்கு ஜெசியல் ராயர் (2½) என்ற மகன் உள்ளார். சனோஜ் தேவராயர் கடந்த சில நாட் களுக்கு முன்பு தொழில் விசயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அவர் கடந்த 15-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்தார். அங்கு உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவர் 2 நாட்களுக்கு தங்க அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

    ஆனால் நேற்று காலை வரை அவர் அறையை காலி செய்யவில்லை. இதனால் லாட்ஜ் மானேஜர் சந்தேகம் அடைந்தார். எனவே நேற்று மதியம் சனோஜ் தேவராயர் தங்கி இருந்த அறை அருகே சென்றார்.

    அப்போது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மானேஜர் சந்தேகம் அடைந்தார். எனவே அவர் இது பற்றி பெருந்துறை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் வந்தார். அவர் முன்னிலையில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த லாட்ஜ் அறையின் கதவு திறக்கப்பட்டது.

    உள்ளே தூக்கில் சனோஜ் தேவராயர் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது சட்டை பாக்கெட்டில் ஆதார் கார்டு இருந்தது. அதில் இருந்த போன் நெம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேல் மற்றும் போலீசார் சனோஜ் தேவராயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சனோஜ் தேவராயரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இன்று சனோஜ் தேவராயரின் மனைவி மற்றும் உறவினர்கள் இங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சனோஜ் தேவராயர் நடத்திய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

    தொழில் நஷ்டம் காரணமாக மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். எனவே அவர் தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஓசூருக்கு வேலை விசயமாக செல்கிறேன் என்று கூறி விட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பெருந்துறைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    தாய் திட்டியதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, வில்லரசம்பட்டி பொன்னிநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது23). ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சிந்துஜா (19). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 2½ மாதங்கள் ஆகிறது.

    புதுமண தம்பதியினர் உறவினர்கள் வீடுகளுக்கு விருந்து சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு, ராசாபாளையம் தென்றல்நகரில் வசிக்கும் சிந்துஜாவின் தாய் லட்சுமி (50) என்பவர் வீட்டுக்கு கிருஷ்ணனும், சிந்துஜாவும் விருந்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கு சிந்துஜாவுக்கும், லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிந்துஜாவை லட்சுமி திட்டியதாக தெரிகிறது. பின்னர் விருந்து முடிந்து புதுமண தம்பதி பொன்னிநகர் சென்றனர்.

    இந்நிலையில் சிந்துஜா தாய் திட்டியதை நினைத்து கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை வீட்டில் ஆள்ளில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 2½ மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு சம்பத்நகரில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வக்கீல் மனைவியிடம் 7 பவுன் நகையை ஹெல்மெட் அணிந்த வாலிபர் பறித்து சென்றார்.
    ஈரோடு:

    ஈரோடு டீச்சர்ஸ் காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் வாசு. வக்கீலாக பணிபுரிகிறார். இவரது மனைவி அமிர்த கவுரி (வயது68). இவர்களது மருமகள் ரமணி. தினந்தோறும் காலையில் சம்பத்நகர் பகுதியில் அமிர்தகவுரி நடை பயிற்சி சென்று வருவாராம். வழக்கம் போல இன்று காலை 5 மணியளவில் அமிர்த கவுரியும், ரமணியும் சம்பத்நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அப்போது நடை பயிற்சி சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்களை நோட்டமிட்டபடி ஒரு வாலிபர் பின்தொடர்ந்துள்ளார்.

    அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வேகமாக வந்து அமிர்தகவுரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க தாலி செயினை பிடித்து இழுத்துள்ளான். செயினை மீட்க அமிர்தகவுரி போராடினார். திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    ஆனால் அதிகாலை நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அந்த வாலிபர் செயினை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு வக்கீல் வாசு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு இன்ஸ் பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அமிர்தகவுரியிடமும், ரமணியிடமும் விசாரணை நடத்தினர். ‘மெட்ரோ’ பட பாணியில் நகை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×