என் மலர்
ஈரோடு
கோபி:
கோபி அடுத்த கெட்டிச் செவியூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 48). இவரது மனைவி கவிதா (வயது 40).
தர்மலிங்கம் கோபியில் உள்ள நுகர்வோர் வாணிக கழக வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தர்மலிங்கத்துக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டார். எனினும் குணமாகவில்லை கூறப்படுகிறது. இதனால் தர்மலிங்கம் மனவேதனையில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்று வீட்டுக்கு வந்த தர்மலிங்கம் வாந்தி எடுத்தார். இது குறித்து கவிதா தர்மலிங்கத்திடம் கேட்ட போது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதா தனது உறவினர்களுடன் தர்மலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகன் கேசவன் (வயது 19). இவர் சமையல் வேலைக்காக ஈரோட்டுக்கு வந்தார்.
கடந்த 3-ந் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். மினி பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்து அவரை திடீரென காணவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
மாயமான கேசவன் 5 அடி உயரம் உடையவர். வட்ட முகமும், ஒல்லியான உடல் அமைப்பும் உள்ளவர். வலத முட்டியில் ஒரு காயத் தழும்பு உண்டு.
மாயமான அன்று அவர் வெள்ளை, ரோஸ் நிற கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், நீல நிற பேன்ட்டும் அணிந்திருந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி தாலுகாவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (40). இவர் கடந்த 12-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தார்.
சத்தி ரோட்டில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தம் செய்ய சென்றார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.
அவர் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாயமான அப்துல் சலாம் சுமார் 5½ அடி உயரம் கொண்டவர். நீள் வட்ட முகம் உடைய அவரது வலது மணிக்கட்டுக்கு மேல் ஒரு காயத்தழும்பு உண்டு.
மாயமான அன்று அப்துல் சலாம் நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், நீல நிறலுங்கியும் அணிந்திருந்தார்.
கேசவன், அப்துல் சலாம் ஆகிய 2 பேரும் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் மாருசாமி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு வொர்க்ஷாப்பில் ‘வெல்டர்’ ஆக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு வாசுதேவன் (வயது 13), மவவுலி கிருஷ்ணன் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் வாசுதேவன் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்தது. அதில் கலந்து கொண்டு மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு வந்தான். அங்கு புத்தகப் பையை வைத்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சரண், சஞ்சய், மாரிச்சாமி ஆகியோருடன் தடப்பள்ளி வாய்க்காலில் குளிக்கச் சென்றான்.
பாசனத்துக்காக தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு பாய்ந்து சென்று கொண்டிருந்தது. வாய்க்காலில் குளித்தபோது திடீரென வாசுதேவனை தண்ணீர் இழுத்து சென்றது. இதை கண்ட அவனது நண்பர்கள் கூக்குரலிட்டனர். ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி பலியானான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஓடி வந்தனர். கடத்தூர் போலீசாரும் வந்தனர். அவர்கள் வாய்க்காலில் மூழ்கி பலியான மாணவன் உடலை தேடினர். இரவில் மாணவனின் உடலை கண்டு மீட்டனர். பிறகு அவனது உடலை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). சமையல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விமலா தேவி.
கார்த்திக் கடந்த சில நாட்களாகவே சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் விமலா தேவி வேலைக்கு செல்லுங்கள் என்று கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமலா தேவி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கார்த்திக் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது திடீரென கார்த்திக் தூக்குப்போட்டு கொண்டார்.
அதே சமயம் தாய் வீட்டில் இருந்து திரும்பி வந்த விமலாதேவி கணவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி கார்த்திகை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு கிடைத்திருப்பது எதிர்பார்த்ததுதான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பார்கள்.
அதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான மதுசூதனனை நிறுத்தினால் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பார்.
ஆகவே இந்த இரு அணியினருக்கும் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மக்கள் இவர்களை நிச்சயமாக ஆதரிக்கமாட்டார்கள். சின்னத்தை வைத்து மக்கள் ஓட்டு போடும் காலம் மாறி விட்டது. மக்கள் இப்போது தெளிவாக உள்ளனர்.
ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை. மக்கள் அவர்களை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். ஆகவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
ஆர்.கே. நகர் தேர்தலை தள்ளி வைத்து 8 மாதமாகியும் அவர்கள் தேர்தல் நடத்த ஏதாவது முயற்சி செய்தார்களா? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? எதுவும் கிடையாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவு தி.மு.க. வேட்பாளருக்குதான். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெற பாடுபடுவோம்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் பருவாச்சி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டேங்கர் லாரி மற்றும் கோவை பதிவு எண் கொண்ட ஆம்னி வேன் அந்தியூர் மெயின் ரோடு வழியாக வராமல் அம்மன்பாளையம் பகுதியில் சென்றது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் டேங்கர் வந்த வழியாக சென்று அந்த லாரி மற்றும் ஆம்னி வேனை துரத்தி சென்றனர்.
சேர்வராயன் தோட்டம் என்ற இடத்தில் அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் தப்பி ஒடிவிட்டனர். லோடு மேன் சேர்வாரயன் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (30) சங்கர் (28) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் கழிவு நீரை எடுத்து செல்லும் டேங்கர் லாரியில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து எடுத்து சென்றனர். அதில் இருந்த 10 டன் அரிசியை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஈரோடு:
அ.தி.மு.க. அம்மா அணி பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சேலத்திலிருந்து கோவை செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வந்தார்.
அங்கு தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் திறந்த காரில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இந்த ஆட்சி குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் உள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ், மதுசூதனன், செம்மலை ஆகியோரின் சூழ்ச்சிதான் காரணம்.
மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நியாயமாக பார்த்தால் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு தான் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கட்சியில் எந்த அதிகாரமும் கிடையாது, பொது செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு. இரட்டை இலைலை மீட்போம், மீட்க நீதிமன்றத்தை அணுகுவோம்.
வருமான வரி துறையினர் எந்த வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வேன். உண்மையான அம்மாவின் விசுவாச தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன். இந்த ஆட்சியின் அவலத்தை தமிழக மக்கள் வெகு நாளாக தாங்க மாட்டார்கள். விரைவில் பொங்கி எழுவார்கள் அப்போது இந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் போன்றவர்கள் எல்லாம் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போய் விடுவார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலை சந்திப்பது குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் வீட்டுக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம். இனிமேல்தான் ஓ.பி.எஸ் நிலைமை என்ன ஆகும்? என தெரிய வரும். அதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு தினகரன் பேசினார்.
முன்னதாக சித்தோடு நால்ரோட்டில் மாநகர மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணீதரன் தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், காசிபாளையம் பகுதி செயலாளர் மோகன்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் தினகரனை வரவேற்றார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டில் தற்போது தீர்ப்பு கூறி உள்ளது. எதிரணியினர் அதை ஏற்க மறுப்பதுடன் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி உள்ளனர்.
அதற்கு சட்டத்தில் இடம் இருந்தால் தொடரட்டும் அது அவர்களது விருப்பம். காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியை தலைவராக தேர்ந்து எடுப்பது அந்த கட்சியின் விருப்பம். அதில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
தமிழக கவர்னர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னருக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இது நன்றாக தெரியும். இனி மேலாவது கவர்னர் ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். இதுவரை தனித்து நின்றே கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பிறகுதான் முடிவு எடுக்கப்படும். மக்களின் மனநிலையை பொறுத்து கூட்டணி குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகம் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை தொடர்ந்து கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதைகண்டு கொள்வது இல்லை. தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.
பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1.1.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 15.11.2017 முதல் 30.11.2017 வரை நேரடியாக வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கள ஆய்வின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும்பொழுது பொது மக்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அயல்நாடு வாழ் வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படவேண்டிய விபரம் அளித்தல் வேண்டும்.
மேலும் இறந்த மற்றும் குடிபெயர்ந்த குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அளித்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கோரும் இதர விபரங்களை அளிக்கவும், மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும் பொழுது வீட்டின் கதவுகள் நிரந்தரமாக பூட்டப்பட்டிருப்பின் விபரங்களின் அடிப்படையில் அவ்வீட்டின் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை முழுமையாக அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், முகவரி திருத்தம் செய்வதற்கும், இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதற்கும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் அதில் கூறியுள்ளார்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்மவர் தேவராஜ். இவர் சத்தியமங்டகலம்- கோபி ரோட்டில் தனது தோட்டத்தில் சிறிய அளவிலான சாலை வீடு கட்டி அதில் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த வழியாக தேங்காய் மட்டைகள் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென நிலை தடுமாறி சாலை வீடு மீது மோதியது.
இதில் அந்த சாலை வீடு இடிந்து நொருங்கியது. உள்ளே கட்டப்பட்டிருந்த 10 ஆடுகளில் ஒரு ஆடு சம்பவ இடத்தில் இறந்துவிட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் இழப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் பிருந்தா(19). இவர் குள்ளம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கம்பெனிக்கு பஸ்ஸில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
பெற்றோர்கள் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த பேர்து வீட்டில் இருந்த மகளைக் காணவில்லை. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் விசாரித்து பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர் இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் நடந்த பா.ஜ.க.பிரமுகரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் 18 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலங்களில் எந்த ஒரு மத பிரச்சனையும் ஏற்படவில்லை.
நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது.
‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் அவரது நோக்கம் தெரிகிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் இந்து விரோத சக்தியை வலுப்படுத்தும்.
நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை குறித்து திரைத்துறையை திருத்த முடியவில்லை. நாட்டை எப்படி திருத்துவார் கமல்ஹாசன்?

‘பத்மாவதி’ திரைப்படத்தை ஆதரித்து பேசுபவர்கள் தேச பக்தனாகக்கூட இருக்க முடியாது. சித்தூர் ராணி பத்மினியின் கதை பத்மாவதி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி கொள்ளும் நாட்டின் அரண்மனையில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடுவார்கள். அப்போது பெண்கள் தங்களது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
சித்தூர் மன்னர் இறந்த உடன் ராணி பத்மினி வீரத்துடன் போரிட்டார். அந்த போரில் அவர் தோல்வி அடைந்த பிறகு தனது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உயிரை மாய்த்து கொண்டார். அந்த ராணி பத்மினிக்கு ராஜஸ்தானில் பல இடங்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.
அந்த ராணியை மன்னருடன் டூயட் பாடும் வகையில் படம் இயற்றி இருப்பது அசிங்கப்படுத்தும் செயல். எனவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.க மற்றும் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதன் மூலம் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற வேண்டி அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






