என் மலர்
ஈரோடு
ஈரோடு:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வெள்ள சேதத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அந்த 3 மாவட்டங்களையும் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
இந்த புயல் வெள்ளத்தால் 1000 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மத்திய அரசின் கப்பல் மூலம் தேடி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது போதாது. மேலும் துணை ராணுவத்தை அனுப்பி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழக மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக கூறுகிறார்கள். வெள்ள சேதத்தால் எத்தனை பேர் உயிர் இழந்தனர்? எத்தனை பேர் காணாமல் போய் விட்டார்கள்? என்ற உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். இது போதாது. மேலும் அமைச்சர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கதக்கது. மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று வெள்ள சேத விவரங்களை பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவை தி.மு.க.வுக்கு அளித்துள்ளோம். வரும் 7-ந் தேதி முதல் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.
அவரது வெற்றிக்காக எங்கள் கட்சி தொண்டர்களும் பிரசாரம் செய்து தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்பார்கள்.
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நடிகர் விஷால் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பு தான் நடிகர் விஷாலால் ஓட்டுகளை பிரிக்க முடியுமே தவிர ஜெயிக்க முடியாது. தி.மு.க. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடலூரில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்த விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பொய்யான பிரசாரம் செய்து பழி போட்டு உள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்து உள்ளதாக கூறி உள்ளனர்.
தி.மு.க.வுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருப்பதை ராமதாசால் ஏற்று கொள்ள முடியவில்லை. எங்கே தி.மு.க. வெற்றி பெற்று வரும் காலத்தில் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆகிவிடு வாரோ... என்ற வயிற்றெரிச்சலில் ராமதாஸ் கூறி உள்ளார். மொத்தத்தில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதை டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை.
ஈரோட்டில் பாதாள சாக்கடை திட்டம் வெகு நாட்களாக நடந்து வருகிறது. அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஈரோடு:
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு இன்று 85-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஈரோட்டில் இன்று பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள வந்த கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சாதி வெறி, மத வெறி, மூட நம்பிக்கை, பெண் அடிமையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.
திராவிடர் கட்சிகள் பலம் இழந்து விட்டதாக எதிரிகள் கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று என்னை சந்தித்து வாழ்த்து கூறினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு இன்று 85-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஈரோட்டில் இன்று பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள வந்த கி.வீரமணி நிருபர்களி டம் கூறியதாவது:-
சாதி வெறி, மத வெறி, மூட நம்பிக்கை, பெண் அடிமையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.
திராவிடர் கட்சிகள் பலம் இழந்து விட்டதாக எதிரிகள் கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று என்னை சந்தித்து வாழ்த்து கூறினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.என்.பாளையம் அருகே உள்ள பள்ளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 29). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான பாலகுமார் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பெரிய கள்ளிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார்.
மாரனூர் பிரிவு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க பாலகுமார் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருப்பினார்.
இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் பாலகுமாரும், அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மனைவியின் கண் முன்பு பாலகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி காயத்துடன் உயிர் தப்பினார்.
அவர் 2 மாதத்துக்கு முன் திருமணமாகி தன்னுடன் சந்தோசமாக வாழ்ந்த கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அவர் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் பாலகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சென்னிமலை பகுதியில் செயல்படும் 5 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஏழை, எளியோருக்கு உதவும் நோக்கிலும் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இதற்கான வேட்டி, சேலைகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க உள்ள வேட்டி சேலைகளை தற்போது தமிழக அரசு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் சங்கங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது.
இதில், சென்னிமலை பகுதியில் இயங்கி வரும் ஜெ.ஜெ., விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், செந்தில்குமரன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அர்த்னாரி ஈஸ்வரர் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், தொட்டம்பட்டி மாகாளியம்மன் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், வெங்கிட்டியம் பாளையம் அண்ணா விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது.
சென்னிமலை பகுதிகளில் இந்தாண்டு 4 லட்சத்து 6 ஆயிரம் வேட்டி, சேலைகள் உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 60 சதவீதம் தயாரித்துள்ளனர்.
இவற்றை ஈரோட்டில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்காக வேட்டி, சேலைகளை மடித்து சங்கத்தின் பெயர், பதிவு எண், விலையில்லா வேட்டி சேலை முத்திரையிட்டு வேட்டிகளை பாலித்தீன் கவர்களிலும், சேலைகளை 100 எண்ணிக்கை கொண்ட பண்டலாகவும் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை சங்க தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள், பணியாளர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர். மீதம் உள்ள வேட்டி, சேலைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் நெய்து முடிப்பதற்காக பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் பூபதி (வயது 21). பெருந்துறை சிப் காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் தனது நண்பர் திருமணத்துக்கு சென்றார். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
சித்தோடு அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே பவானி காளிங்கராயன்பாளையம் சின்னசாமி செட்டி வீதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இவர் சித்தோடு பால் பண்ணையில் பணிபுரிந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து துடித்தனர்.
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். 2 வாலிபர்களின் உடல்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு அவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த விபத்து குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய-விடிய பல்வேறு இடங்களில் சாரல்மழை பெய்து வருகிறது. இன்று காலையும் ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாகவே வானம் இருட்டியபடியே உள்ளது. கனமழை கொட்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் சாரல் மழையே பெய்து வருகிறது.
அதே சமயம் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் வாட்டுகிறது. ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை பலத்த மழைபெய்வது போல் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. ஆனால் சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான தாளவாடி, திம்பம், கேர்மாளம், கடம்பூர், குண்டேரிபள்ளம் அணைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.மி.மீ மழையும் கொடுமுடியில் 4 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை மூடவும், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு அனுமதி வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. இந்த உத்தரவால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயம் புத்துயிர் பெறும் சூழல் உருவாகி இருக்கிறது.
மணல் குவாரிகள் மூடப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆற்றுப் படுகைகளிலிருந்து எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மணல் எடுத்து இயற்கை வளங்களை சுரண்டி விவசாயத்தை அழித்து வந்த நிலையில், இன்றைய தினம் புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கு தடை உத்தரவையும், ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டுமென்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருப்பது தமிழக மக்களிடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தமிழக அரசும், தமிழக முதல்வரும் மவுனமாக இருக்காமல் அனுமதியின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் குவாரிகளை திறக்க மேல்முறையீடு செய்து விடக்கூடாது. தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மணல் குவாரிகள் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசின் சார்பில் மலேசிய மணலை இறக்குமதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசிய மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முன் வருபவர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
கேரள மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளது. இவர்கள் அவ்வப்போது திடீர்.. திடீரென போலீசாரிடம் மோதி வருகிறார்கள்.
இதையொட்டி மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவிரவாதிகளின் நடமாட்டம் பாலக்காடு- கோவை வனப்பகுதியிலும் உள்ளது. இதையொட்டி இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை பிடிக்கும் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் இந்த மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் ஊடுருவாமல் தடுக்கவும் இதேபோல் கர்நாடக மாநில எல்லையான சாம்ராஜ் நகர் வனப் பகுதியிலும் ஊடுருவாமல் இருக்கவும் இருமாநில போலீசார் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக இருமாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பூதி படுகையில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்ட டி.எஸ்.பி கங்காதரசாமி, சாம்ராஜ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையப்பா, தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் நீலகிரி மாவட்ட மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், கொள்ளேகால் இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து பிடிக்க வேண்டும். தீவிரவாதிகளின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் இரு மாநில (ஈரோடு, ஊட்டி-சாம்ராஜ் நகர் மாவட்ட) எல்லைகளில் குற்றச் செயல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் கடைசி ஒரு இடத்துக்கு தற்போது அங்கு நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரி(70), இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்(62) ஆகியோர் மோதினர்.
இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு சுற்று தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. இடையில், இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட் போட்டியில் இருந்து விலகி கொண்டார். இதையடுத்து, காலியாக இருந்த நீதிபதி பதவியில் டல்வீர் பண்டாரி கடந்த நவம்பர் 21-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரன் என்ற சிவன் கோவிலின் மகிமையப் பற்றி அறியவந்த சர்வதேச கோர்ட் நீதிபதி டல்வீர் பண்டாரி இந்த கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினார்.
இதையடுத்து, இன்று நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு வந்த அவருக்கு அம்மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட நீதிபதி மற்றும் கோவில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் இருந்த டல்வீர் பண்டாரி அங்கிருந்து காரில் கோயமுத்தூர் புறப்பட்டு சென்றார்.
கோபி அருகே உள்ள மணியக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் வயது (47). இவர் நேற்று காசிபாளையம் வந்தார்.
அப்போது அவர் சத்தியமங்கலம் ரோட்டை கடந்து சென்றார். அதே சமயம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று பண்ணாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் எதிர்பாராத வகையில் ரோட்டை கடந்த பழனியம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிரைவர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.






