என் மலர்tooltip icon

    ஈரோடு

    சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கிழங்கு குழி ஏரிப்பகுதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அவர்களில் அந்தியூரை சேர்ந்த சிவா என்கிற நல்ல சிவம் (வயது 38), அருள் மணிகண்டன் (29), முட்டை நிலையம் யுவச்சந்திரன் (29), கார்த்திக்ஷோபன்(28), ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28), சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    ரவி, கறிக்கடை ராசு, தவிட்டுப்பாளையம் பழனிச்சாமி, கிழங்கு குழி முனுசாமி, கரட்டூர் மணிகண்டன் ஆகிய 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து 2 சேவல் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதம் ஆகியும் சரி செய்யாததை கண்டித்து நொச்சிக்குட்டை, எண்ணாளப்பாளையம், பொன்மேடு ஆகிய 3 இடங்களில் பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த நொச்சிகுட்டை ஊராட்சி பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.

    புளியம்பட்டி-பவானி சாகர் ரோடு விஸ்தரிப்பு பணியையொட்டி குழி தோண்டினர். அப்போது நொச்சிக்குட்டை ஊராட்சிக்கு வரும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விட்டது.

    இதனால் கடந்த ஒரு மாத காலமாக நொச்சிக்குட்டை எண்ணாளப்பாளையம், பொன்மேடு ஆகிய 3 பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. நல்ல தண்ணீருக்கு பதிலாக போர் தண்ணீரை தான் ஒரு மாதமாக பயன்படுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக பொது மக்கள் பல தடவை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இதனால் கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வந்தார்கள்.

    இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நொச்சிக்குட்டை, எண்ணாளப்பாளையம், பொன்மேடு ஆகிய 3 இடங்களில் பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோட்டில் காலி குடங்களுடன் அமர்ந்து ஏராளமான பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு பு.புளியம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த குமார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் 1½ மணி நேர மாக அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பு.புளியம் பட்டி- திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டிய போதும் தாளவாடி பகுதியில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பிய நிலையில், பெலிரங்கா குளம் மட்டும் வறண்டு நிலையில் உள்ளன.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகனாரை ஊராட்சிக்குட்பட்ட எரகனள்ளி கிராமம். இந்த ஊரின் அருகில் பெலிரங்கா குளம் உள்ளது. 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் கடந்த காலங்களில் மழை காலங்களில் நீர் நிரம்பி காணப்படும்

    இதன் காரணமாக இந்த பகுதியையெட்டி 10 கீ.மீ சுற்றளவுக்கு கிராம புறங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இந்த குளம் மூலம் எரகனள்ளி சுற்றுபுற பகுதியையொட்டி உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பசனவசதி பெற்று வந்தன. கடந்த 4 ஆண்டுகளாக மழை இல்லாததால் குளம் வரண்டு காணப்பட்டது. தற்போது கடந்த மாதம் கனமழை பெய்தது. தாளவாடி பகுதியில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பியது. ஆனால் இந்த எரகனள்ளி பெளிரங்கா குளத்திக்கு தண்ணீர் வரவில்லை. குளம் வறண்டுதான் கிடக்கிறது.

    இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது தாளவாடி பகுதியில் உள்ள பெலிரங்கா குளம் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது இந்த குளம் நிரம்பியிருக்கும்போது கடல்போல் தோற்றம் அளிக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு கனமழை பெய்தும் குளத்திற்கு மழை நீர்வரவில்லை மழைநீர் வரும் பாதைகள் அடைக்கபட்டு விட்டதாலும் மழைநீர் குளத்திக்கு வராமல் வேறுபாதையில் சென்று விடுகிறது என்றனர்.

    அதே போல் கொங்கள்ளி மலை பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாறுவெள்ளம் மூலம் இந்த குளம் இருந்து 5 கீ.மீ தொலைவில் தான் செல்லும் இந்த காட்டாறு வெள்ளம் வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு தான் செல்கிறது. இந்த காட்டாறு வெள்ள நீரை இந்த குளத்துக்கு வரும்படி வழிவகை செய்தால் குளம் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் நலன்கருதி குளத்திற்கு மழை நீர் வர வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் டெபாசிட் இழப்பதன் மூலம் இனி நடிகர்கள் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என ஈஸ்வரன் கூறினார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இதற்கு பின்னால் ஆளும் கட்சியினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

    அ.தி.மு.க.வினர் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் ஆளும் கட்சியினருக்கு எதிரான ஓட்டுகள் தி.மு.க.வுக்குதான் விழும். இதை தடுப்பதற்காகவே நடிகர் விஷாலை தேர்தலில் நிற்க வைத்துள்ளனர். நடிகர் விஷாலுக்கே தெரியும் டெபாசீட் கூட வாங்க மாட்டோம் என்று. இருந்தாலும் இது ஒரு வகையில் நல்லதுக்கு தான்.

    சமீப காலமாக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பேச்சு அடிப்படுகிறது. தற்போது விஷால் தேர்தலில் தோற்பதன் மூலம் நடிகர்களை இனி தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது தெரிய வரும்.


    விஷால் டெபாசிட் இழப்பதன் மூலம் இனி நடிகர்கள் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள்.

    ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்த வரை தி.மு.க.வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை.

    ஒக்கி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும் கட்சியினர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதிலேயே குறியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இருக்காது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட களம் இறங்கி இருப்பது அவரது விருப்பம்.

    நடிகர் விஷால் மட்டுமல்ல.. எந்த நடிகர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இது அவரவர்கள் விருப்பம். ஆனால் விஷாலால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.

    தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் மிகவும் சுறுசுறுப்பானவர். மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்திருப்பவர். ஆகவே ஆர்.கே.நகர் இடை தேர்தலில் நடிகர் விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு வெற்றி பாதிப்பு இருக்காது. அங்கு மருது கணேஷ் வெற்றி உறுதியான ஒன்று. ஏற்கெனவே தினகரன் போட்டியிடும்போது அவருக்காக அப்போது பணத்தை வாரி இரைத்து செலவு செய்தது இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ்.சும் தான். ஆகவே இப்போது மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தினகரனின் வேட்பு மனுவையும் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனுவையும் உடனடியாக தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடியின் செயல்பாட்டால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய அடியை பெறப்போகிறது. அதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில் 97 மி. மீட்டர் மழை பெய்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று மாலை முதலே அவ்வப்போது மேக மூட்டம் சூழ்ந்து மழை கொட்டியது.

    இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை இரவும் நீடித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    ரோடுகளில் தண்ணீர் தேங்கி ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகளும், பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

    ரோட்டோர வியாபாரிகள் குடை பிடித்தபடி அமர்ந்து வியாபாரத்தை கவனித்ததை பார்க்க முடிந்தது. இந்த மழை விடிய விடிய நீடித்தது. இன்று காலை வரை ஈரோட்டில் 47 மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதேபோல மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில் 97 மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதேபோல மொடக்குறிச்சியில் 80 மி.மீட்டரும், பெருந்துறையில் 64.2 மி. மீட்டரும், கவுந்தபாடியில் 63.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

    கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக புதிய அருவிகள் தோன்றின. மலைப்பகுதியில் பெய்த மழை தண்ணீர் காட்டாறுகளில் வெள்ளமாக ஓடி பள்ளத்தாக்கை நோக்கி ஓடி வந்தன. இது அந்த பகுதியில் சிறு சிறு அருவிகளாக தோன்றின.

    கடம்பூர் ரோட்டில் மல்லியம்மன் கோவில் அருகே பாறை வழியாக அருவியாக கொட்டிய தண்ணீரை பார்த்து மக்கள் ரசித்தனர்.

    ஆப்பக்கூடல் பகுதியில் பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக ஓடியது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று அணைக்கு விநாடிக்கு 559 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இது நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5194 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சுமார் 1 அடி உயர்ந்தது.

    நேற்று அணையின் நீர் மட்டம் 70.66 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.62 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு மட்டும் விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    மழை காரணமாக குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரை பெய்த மழை காரணமாக 810 கன அடி தண்ணீர் அணைக்கு வந்தது. ஆனால் இன்று காலை அந்த தண்ணீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை 6 மணி அளவில் அணைக்கு விநாடிக்கு 622 கன அடி தண்ணீரும், காலை 8 மணி அளவில் 368 கன அடி தண்ணீரும் வந்தது.
    ×