என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, கனிராவுத்தர் குளம், காந்தி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 27). இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
கவுந்தரராஜன் ஈரோட்டில் உள்ள பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை பார்த்து கொண்டிருந்த போது சுவிட்சை ஆன் செய்தார்.
அப்போது சவுந்தரராஜனை மின்சாரம் தாக்கியது. இதனால் வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சவுந்தரராஜனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சவுந்தரராஜன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சவுந்தரராஜன் உடலை பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொடுமுடி அருகில் சோளங்காபானளயம் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் வத்சலா (வயது 50). கேரளா திருச்சூர் மாவட்டம் காணிப்பையூரை சேர்ந்தவர்.
இவர் கடந்த 21-11-17 அன்று மதியம் உணவுக்காக வங்கியில் இருந்து கணபதி பாளையம் ரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். உணவு அருந்திவிட்டு தனது மகன் விஷ்ணுகுமாருடன் (20) மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்து கொண்டு இருந்தார்.
ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் உத்தண்டிபாளையம் பிரிவு அருகில் வரும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், விஷ்ணுகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதின.
இதில் பின்னார் அமர்ந் திருந்த வத்சலா கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்தார். வத்சலா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அரியலூரை சேர்ந்த கிஷோர் நந்தவர்மன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடிக்கிறது.
இந்த பனிப்பொழிவு இடையே மாவட்டத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஒரு சில பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது. நம்பியூர் கவுந்தப்பாடி ஆப்பக்கூடல் பகுதியிலும் மிதமான மழை பெய்தது.
அதே சமயம் கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், கரட்டடிபாளையம், கொளப்பலூர், மொடச்சூர் உள்பட பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டியது.
கோபி பகுதியில் 76 மி. மீட்டர் மழை பெய்தது. இந்த மழையால் பாதிப்பு இல்லை. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
இந்த கனமழையால் கோபி பகுதியில் கடும் குளிரும் வாட்டியது.
கவுந்தப்பாடியில் 11மி.மீ, நம்பியூரில் 5மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). இன்று காலை அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் பிடிப்பதற்கு அப்பகுதி ஆண்களும், பெண்களும் குடங்களுடன் போட்டி போட்டு முண்டியடித்தனர். இதில் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,
அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த செல்வத்துக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தட்டிகேட்டார். பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கும் போது ஏன் அங்கு செல்கிறாய்? என்று அவர் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த செல்வம் கத்தியால் அவரை குத்தியதாக தெரிகிறது.
இதை கண்டு கத்திகுத்தில் காயமடைந்த நபரின் உறவினர்கள் அங்கு வந்து செல்வத்தை தாக்கினார்கள். இதில் அவர் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதில் அவர் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வம் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு,காசிபாளையம், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 24).
மாதேஸ்வரனுக்கு நேற்று பிறந்த நாள். இதனால் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். இதற்காக மாதேஸ்வரன் தொட்டிபாளையம் ரெயில்நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நின்று போன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று எதிர்பாராத வகையில் மாதேஸ்வரன் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாதேஸ்வரனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் மாதேஸ்வரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் இருந்து “போர்” போடும் லாரிஒன்று அந்தியூர் மலைப் பகுதிக்கு சென்றது. வனப்பகுதியில் உள்ள மலைகிராமத்தில் போர் போடுவதற்காக சென்ற இந்த லாரியில் டிரைவர் உள்பட 6 பேர் இருந்தனர்.
தாமரைகரை வன கிராமத்தில் இருந்து மலையடிவாரம் உள்ள மணியாச்சிபள்ளம் செல்ல அந்த லாரி இன்று இறங்கியது. மணியாச்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து கீழே முதல் வளைவில் இறங்கி கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து லாரி 200அடி கிடு கிடு பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் நசுங்கி பலியானார். மேலும் லாரியில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் இறந்தவர் பெயரும் பாடுகாயம் அடைந்தவர்களின் விவரமும் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர்.
பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 145 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் நடிகர் விஷால், தீபா உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு 72 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதற்கு மேலாக ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தமிழகத்தின் ஒரே தொகுதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஆகும்.
1996-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தலில் 1350 பேர் போட்டியிட்டனர். அப்போது தேர்தல் சீர்திருத்தம் உள்பட கோரிக்கைகளை முன்நிறுத்தி 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போட்டியிட வைத்தது. இதையொட்டி தேர்தல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு இதில் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு 1030 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
250 பக்க புத்தக வடிவில் வாக்கச்சீட்டு தயாரித்து பெரிய பேரல்களை வாக்குப் பெட்டிகளாக்கி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.என்.கிட்டுசாமியும், தி.மு.க. சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் போட்டியிட்டார்கள். இதில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார்.
1030 பேர் போட்டியிட்டு தேர்தலை சந்தித்த மொடக்குறிச்சி தொகுதி அப்போது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பிறகு இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் அதிகபட்சமாக 145 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அப்போது மொடக்குறிச்சி தொகுதி தேர்தலில் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்திய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியதாவது:-
1996-ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி தொகுதி தேர்தலில் நாங்கள் நதிகளை இணைக்க வேண்டும், தேர்தலில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் போன்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-க்கும் மேற்பட்டவர்களை போட்டியிட வைத்துள்ளோம். இதையொட்டி தேர்தல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் நடந்தது.
அந்த காலகட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேசன் எங்கள் விவசாய கூட்டமைப்பு வைத்த ஒருசில கோரிக்கைகளை ஏற்று சீர்திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி வைப்புத்தொகை (டெபாசிட்) உயர்த்தப்பட்டது. ஒருவர் முன்மொழிந்த நிலைமாறி 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
இதனால் அடுத்து நடந்த பொது தேர்தலில் தேர்தல் செலவு ரூ.200 கோடி குறைந்தது. ஈரோடு வந்திருந்த டி.என்.சேசன் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்களை அழைத்து பாராட்டி விட்டு சென்றார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றால் அவர் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் தேர்தல் செலவை அந்த வேட்பாளர் செலுத்த வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கிலேயே இருந்திருக்கும்.
1996-ல் கூட்டமைப்ப வைத்த கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து திருத்தங்கள் கொண்டு வந்திருந்தால் சுயேட்சைகள் மட்டும் அல்லாமல் சொற்ப அளவில் வாக்குகளைப் பெறும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களையும் கட்டுப்படுத்தி இருக்க முடியும். தேர்தல் ஆணையம் பெருமை பெறுவதும் சிறுமை அடைவதும் தேர்தல் ஆணையத்தின் செயல் பாட்டைப் பொறுத்தே அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






