என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறையில் நள்ளிரவில் பேக்கரி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அண்ணா சிலை அருகே ஒரு தனியார் பேக்கரி உள்ளது. கடை மேலாளராக மனோஜ் உள்ளார்.

    நேற்று இரவு 10 மணியளவில் மேலாளர் மனோஜ் பேக்கரியை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். தொழிலாளர்கள் யாரும் கடையில் தங்காமல் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் 12 மணிக்கு பேக்கரியில் உள்ள பிரிட்ஜ் சூடாகி மின் கசிவு ஏற்பட்டு தீபிடித்து எரிந்தது.

    இதில் பிரிட்ஜ் மற்றும் வெளியேவைக்கப்பட்டி ருந்த பன், கேக் போன்ற பொருட்கள் எரிந்து குபு... குபு...வென புகை வெளியேறியது.

    இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய வீரர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பி.எஸ்.என்.எல். உழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    பி.எஸ்.என்.எல் பணியாளர்களுக்கு 1.1.207 முதல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2-வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். துணை டவர் நிறுவனம் உருவாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு நேற்று முதல் வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனால் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படவில்லை. தொலை தொடர்பு ஊழியர்களின் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொலை தொடர்பு குறித்த பராபரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

    இன்று இரண்டாவது நாளாக பி.எஸ்.என்.எல்.ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள அலுவலகம் உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:-

    மூன்று முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்.உழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பிரப் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று 2-வது நாளாக காந்திஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    வினாடிக்கு 560 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 7 மணியில் இருந்து வினாடிக்கு 2204 கனஅடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.

    பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1500 கனஅடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் பாசனத்துக்காக வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 73.50 அடியாக இருந்தது. அணைக்கு இதே போல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அதை அப்படியே பாசனத்துக்கு திறந்து விட வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
    திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி ரோட்டில் நின்று விட்டதால் கர்நாடக மாநிலம் மைசூர்-பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர்-பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹசனிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று இரவு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 4 மணியளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கிய போது திடீரென அந்த லாரி பழுதாகி நின்றுவிட்டது. அதன் டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

    ரோட்டில் லாரி நின்று விட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலே இருந்து வரும் ஒன்றிரண்டு சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல முயன்றது.

    இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களும் முந்திக் கொண்டு செல்வதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.

    அதிகாலை 4 மணிக்கு பழுதாகிய நின்ற லாரியை 9 மணி வரை மீட்க முடியவில்லை.

    சத்தியமங்கலத்தில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் சென்று லாரியை பழுது பார்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.


    பவானிசாகர் அருகே வேலைபார்த்த இடத்திலேயே ரூ.2 லட்சம் மதிப்புள்ள சேலையை திருடி சென்ற ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பவானிசாகர்:

    பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி (42). கைத்தறி சேலை தயாரிப்பாளரான இவர் வீட்டிலேயே வியாபாரம் செய்து வந்தார்.

    இவரிடம் எரங்காட்டுர் கிராமத்தை சேர்ந்தரவிக் குமார் (22) என்பவர் குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்ந சேலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.

    இதையடுத்து கடையில் பணிபுரிபவர்களை வேலுமணி கவனித்தபோது ரவிக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வேலுமணி ரவிக்குமார் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமாரை விசாரித்த போது ரு.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 80 சேலைகளை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு அருகே கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன் - மனைவி பலியாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவரது மனைவி ராஜம்மாள் (58).

    ஈரோடு பி.பி. அக்ரகாரத்தில் இருந்து கனி ராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கணவன்- மனைவி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜம்மாள் இறந்து விட்டதாக கூறினார். முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். ராஜம்மாள்-முனுசாமி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் என்ஜினீயரிங் மாணவர் கையை அறுத்து, வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கடலூர் மாவட்டம், நெய்வேலி, பிளாக் 2, என்.கே.கே.பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவரது மகன் அய்யப்பன் (19).

    அய்யப்பன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    இதற்காக அய்யப்பன் சத்தியமங்கலம், கொங்கு நகரில் உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

    கண்ணன் தன் மகன் அய்யப்பனுடன் தினமும் போனில் பேசுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக கண்ணன் தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் பக்கத்து வீட்டில் வசிக்கும் அபிராமி என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டு அய்யப்பன் வீட்டை பார்க்க சொன்னார். அதன்பேரில் அவர் சென்று பார்த்தார்.

    வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அபிராமி வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்போது அய்யப்பன் குளியல் அறை அருகில் இறந்த நிலையில் கிடப்பதாக கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் சத்தியங்கலத்துக்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அய்யப்பன் வி‌ஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. மேலும் இடது கை மணிக்கட்டில் கத்தியால் அறுத்துக் கொண்ட காயங்களும் இருந்தது. அவர் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்ததால் அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. நடந்த முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால்தான் தற்கொலை கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் தெரியவில்லை.

    இது குறித்து சத்தியங்கலம் போலீசாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக சத்தியங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒக்கி புயல் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிலாது நபி விழா நடந்தது. தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    அப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று சென்னையில் வெள்ளம், கன்னியாகுமரியில் புயல், நெல்லை, தூத்துக்குடியில் மழை வெள்ளம் மக்கள் தத்தளிப்பு, மீனவர்கள் மாயம் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்.

    வெள்ளம், புயலால் அவதிப்பட்டு வரும் பாவப்பட்ட மக்களுக்கு அவர் இதுவரை ஒரு உதவி கூட செய்யவில்லை. நேரில் சென்றும் ஆறுதல் கூறவில்லை. ஒரு முதல் அமைச்சருக்கு இதுதான் அழகா? மக்கள் மீது சிறிதாவது கவலைப்படக் கூடாதா?


    புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். எங்களுக்கு நஷ்டஈட வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கேட்டுள்ளார். ஆனால் நமது முதல்வர் அதுபற்றி கேட்டாரா? ஏனெனில் அவருக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் கடந்த முறை டி.டி.வி.தினகரன் பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.

    எனவே தினகரனையும், அ.தி.முக. வேட்பாளர் மதுசூதனையும் போட்டியிட அனுமதிக்காமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
    சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அரச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 61). இவரது மகன் பாலசுப்பிரமணி(40). விவசாயி.

    தாய்-மகன் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. தன் பெயருக்கு உடனே சொத்தை எழுதி வைக்க வேண்டும் என மகன் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

    பாலசுப்பிரமணி தன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருந்தார். அதை எடுக்க வீட்டையும், சொத்தையும் தன்பெயருக்கு எழுதி கேட்டார். நகையை திருப்பியதும் பிறகு வீட்டை மீட்டு விடலாம் என கூறி வந்தரராம். இதற்கு தாயார் மறுத்து உள்ளார்.

    தாயும், மகனும் ஓரே வீட்டில் அடுத்தடுத்த அறைகளில் வசித்து வந்தனர். மகன் அடிக்கடி சொத்து கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரத்தினாம்மாள் அரச்சலூர் போலீசில் புகார் செய்து வந்தார்.

    நேற்று கூட அவர் அரச்சலூர் போலீசில் தஞ்சம் அடைந்தார். என் மகனால் என் உயிருக்கு ஆபத்து என்று புகார் கூறினார்.

    பிறகு வீட்டுக்கு வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரத்தினாம்மாளும் அவரது கணவர் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 11 மணியளவில் மகன் பாலசுப்பிரமணி அங்கு ஆவேசமாக வந்தார். என் பெயருக்கு சொத்தை எழுதி வைக்க முடியுமா? முடியாதா? என்று கேட்டார். இது தொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி தாயை அடித்து உதைத்தார். அப்போது அவரை தள்ளிவிட்டதில் ரத்தினம்மாள் சுவற்றில் மோதினார். இதில் தலையில் பலத்த அடிபட்டது.

    இதில் ரத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குபதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கருங்கல்பாளையம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    கருங்கல்பாளையம் அருகே கிருஷ்ணன்வீதியில் காலிங்கராயன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றினர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. பனியன், ஜட்டி மட்டுமே அணிந்திருந்தார். வாய்க்காலில் விழுந்து அவர் இறந்தாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வாய்க்கால் பகுதியில் மது குடிப்பது உள்பட பல சமூக விரோத செயல்கள் நடப்பதாக அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதியில் பகல் மற்றும் இரவில் குடிமகன்கள் மது பாட்டில்களுடன் ஆஜராகி விடுகிறார்கள். அவர்கள் அங்கு போதை ஏற்றும் போது ஒருவருக்கொருவர் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த வகையில் தகராறு ஏற்பட்டு இந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த பகுதியில் குடிமகன்கள் கூடி மது குடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    ×