என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து (வயது 57). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் ஆகும்.
இவரது மனைவி விஜயலட்சுமி (55). சவுமியா (31) மற்றும் வானதி (29) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது பெருந்துறையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக அங்கமுத்து வேலை பார்த்து வந்தார்.
மனைவி விஜயலட்சுமி பெருந்துறை அடுத்த தோப்பு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் விஜயலட்சுமி பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை பள்ளிக்கு சென்று திரும்பிய மனைவியும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்த ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்து விட்டார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தான் பணியாற்றிய போது பணிகள் நியமனம் செய்வதில் சில முறைகேடுகள் செய்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக அவரிடம் காணாமல் போனதாக கூறப்படும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தான் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் விசாரணை தொடர்பாக நடந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதை அவரது மனைவி விஜயலட்சுமி மறுத்து உள்ளார்.
கணவர் தற்கொலை பற்றி அவர் கூறியதாவது:-
எனது கணவர் (முன்னாள் பதிவாளர் அங்கமுத்து) சில ஆண்டுகளுக்கு முன் இதய சிகிச்சை (ஆண்டியோ) செய்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று நான் பள்ளிக்கூடம் சென்ற போது அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.
மேலும் இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீசாரிடமும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட அங்கமுத்து உடல் இன்று காலை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை கேட்பு நாள் முகாம் நடந்தது. ஈரோடு மாவட்ட முழுவதிலும் இருந்து வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் பலர் தங்கள் குறைகளை எடுத்து கூறினர்.
சத்தியமங்கலம் குமாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்ற வாலிபரும் மனு கொடுக்க வந்திருந்தார். அவர் தனது வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய பலமுறை மனு கொடுத்திருந்தாராம். ஆனால் மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் இன்றும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ரஞ்சித்குமார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். வழக்கம்போல் அவரது மனு பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் திருப்தி அடையாத ரஞ்சித்குமார் வெளியே வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்னே தான் கொண்டு வந்திருந்த கத்தரிக்கோலால் கையை வெட்டி அறுத்தார். கையில் இருந்து ரத்தம் கொட்டியது.
பிறகு ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் உள்ளே புகுந்து தனது வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய கோரினார். அவரது கையில் ரத்தம் வடிந்ததை கண்டு அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். பிறகு அந்த வாலிபரை சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அந்தியூர் தாலுகா வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள எண்ணமங்கலம், விராலிக்காட்டூரை சேர்ந்தவர் தவசி மணி. இவரது மகள் சங்கீதா (வயது 25). இவருக்கும், மேட்டூரை சேர்ந்த லட்சுமணனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரதாப் என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமணனும், சங்கீதாவும் பிரிந்தனர். சங்கீதா விராலிக்காட்டூரில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த திருமணமான ஒருவருடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென அந்த நபரும், சங்கீதாவும் மாயமானார்கள். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி சங்கீதாவை அவரது தாயுடன் போலீசார் அனுப்பினர். அந்த நபரை அவரது மனைவியுடன் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவி தனது அக்காள் மற்றும் அக்காள் கணவருடன் சங்கீதா வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த சங்கீதாவிடம் சென்று, தனது கணவருடன் மீண்டும் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டு திட்டியதாக தெரிகிறது.
இதில் மனம் உடைந்த சங்கீதா கடந்த 13-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். உடல் கருகிய நிலையில் அலறி துடித்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கீதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக வனத்துறையில் உயர் பதவியில் மட்டுமே பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழக வனத்துறையில் முதன்முறையாக 36 பெண் வனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 4 பெண் வனவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பிரதீபா (தலமலை), சூரியா (டி.என்.பாளையம்) சண்முகவடிவு (ஆசனூர்), கனிமொழி (சத்தியமங்கலம்) ஆகிய வனச்சரகங்களில் பணியில் சேர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தலமலை பெண் வனவர் பிரதீபா கூறியதாவது:-
தமிழக வனத்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வனவர்கள் களப்பணியிலும் சாதித்து காட்டுவோம். காவல்துறை மட்டுமின்றி வனத்துறையும் சவாலான பணியே. இருப்பினும் சிறுவயதில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. வனவருக்கு பாரஸ்டி படித்திருக்க வேண்டும் என்பதில்லை. விவசாயம், தாவரவியல் ஆகிய பட்டப்படிப்புகள் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினர்.
மற்ற வனபெண் காவலர்களும் ஆண்களுக்கு இணையாக செயல்பட்டு வனத்தை காப்போம் என்று கூறினர்.
புதியதாக பணியில் சேர்ந்த பெண்வனவர்களை ஈரோடு மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர்கள் அருண்லால், பத்மா ஆகியோர் பாராட்டினர்.

பெண்வனவர்களுக்கு களப்பயிற்சி, வாகனத் தணிக்கை, குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது மற்றும் நீர்நிலைகள் ஆராய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் மாலைமலர் நிருபருக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி படுகொலைக்கு முக்கிய காரணம் தமிழக அரசு காவல்த்துறை நிலைபாடு தான். வெளி மாநிலங்களுக்கு கொள்ளையர்களை பிடிக்க செல்லும் போலீசார் ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகள் தலைமையில் தான் செல்ல வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சென்றிருக்க கூடாது. சொந்த மாநில இன்ஸ்பெக்டர்களையே மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது வெளி மாநில இன்ஸ்பெக்டர்களை எப்படி மதிப்பார்கள்?
எனவே உயர் அதிகாரிகள் தலைமையில் செல்லும் போது எந்த மாநிலத்துக்கு செல்கிறோமோ அந்த மாநில உயர் அதிகாரிகள் சகஜமாக பேசுவார்கள். அதன் மூலம் வேண்டிய உதவிகள் கிடைக்கும். முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா என்றால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகிறார்கள். அப்படி இருக்க பெரிய கொள்ளையர்களை பிடிக்க 5 பேர் கொண்ட போலீசார் செல்வது எப்படி சரியாகும்?.
வெளி மாநில கொள்ளையர்களை பிடிக்க செல்லும் போது 200 பேர் கொண்ட சிறப்பு படையுடன் செல்ல வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக எந்த மாநிலத்துக்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இது போன்று சம்பவம் இனி மேல் நடக்காது.
ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்த வரை மீண்டும் பணப்பட்டுவாடா ஆரம்பித்து விட்டது. கடந்த முறை எந்த காரணத்திற்காக தேர்தலை நிறுத்தினார்களோ? இந்த முறையும் அதே தவறு தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்தல் ஆணையர் பணபட்டுவாடாவை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
நேற்று கூட பணபட்டு வாடா செய்ததாக தி.மு.க.வினர் சிலரை போலீசிடம் பிடித்து கொடுத்தனர். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று விடக் கூடாது என்பதால் ஆளும் அ.தி.மு.க.அரசு தேர்தலை நிறுத்த இது போன்ற சதி வேளையில் ஈடுப்பட்டுள்ளது. இந்த முறையும் தேர்தல் ரத்தானால் மக்களுக்கு தேர்தல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். எனவே தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வவாறு அவர் கூறினார்.
ஈரோடு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று ராகுல்காந்தி பொறுப்பேற்று கொண்டார். இதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பன்னீர் செல்வம் பார்க்கில் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் திருச் செல்வம், ஆயுப் அலி, ஜாபர் சாதிக், விவேகானந்தன், பொதுச்செயலாளர் கண்ணப்பன், சிவாஜி கணேசன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்ஷத், கே.என்.பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஈரோடு ரங்கம்பாளையம் கலைக் கல்லூரி அருகே இருந்து காங்கிரசார் பைக் பேரணி புறப்பட்டனர். பேரணி சென்னிமலை ரோடு வழியாக காளை மாட்டு சிலை வந்தது.
அங்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை மக்கள் ராஜன் ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பு.புளியம் பஸ் நிலையம் முன்பு மாநில காங்கிரஸ் செயற் குழு உறுப்பினர் எல்.முத்துகுமார் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இல்லியாஸ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை காமராஜ் நகரில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருபவர் சந்திரன் (வயது 39). இவரது கடைக்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் ஜன்னல் கதவுகள் புதிதாக செய்ய வேண்டும் என விசாரித்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் சந்திரன் உணவு இடைவேளைக்கு சென்றார். அப்போது சாத்தியிருந்த கடையின் ஷட்டரை நீக்கும் சத்தம் கேட்டது. எனவே சந்திரன் அங்கு வந்து பார்த்தார்.
அப்போது உள்ளே இருந்த பொருட்களை ஒருவர் திருடிக்கொண்டு இருந்தார். சந்திரனும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்த அந்த நபரை பிடித்தனர். அப்போது அவர் ஏற்கனவே அந்த கடைக்கு வந்து ஜன்னல், கதவுகள் பற்றி கேட்ட வாலிபர் என்பது தெரிய வந்தது.
எனவே அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சந்தோஷ் என்பதும், சேலம் மேச்சேரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த ஆயுத பூஜை தினத்தன்று இதே கடையில் வெல்டிங் மிசின், கட்டிங் மிசின், சானை பிடிக்கும் மிசின் ஆகியவற்றை சந்தோஷ் திருடி சென்றுள்ளார். தற்போது மீண்டும் இதே கடைக்கு திருட வந்து மாட்டிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இவரும் இவரது கூட்டாளியுமான ஆட்டோ குமாரும் மதிய நேரத்தில் எந்த கடை உணவு இடை வேளைக்கு பூட்டாமல் சாத்தப்படுகிறதோ அந்த கடையை பார்த்து கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
அதே பகுதியில் திருட்டு நடந்த 10-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் வந்து புகார் கூறியபோது தான் இவர்களது இந்த கைவரிசை தெரியவந்தது. பிடிபட்ட சந்தோஷ் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு இந்த திருட்டு தொழிலில் இறங்கியுள்ளார்.
இவரது கூட்டாளியான ஆட்டோ குமார் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுக் கடை பகுதியில் அவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஆட்டோ குமாரை கைது செய்தனர்.
கோபி பாஸ்கரன் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கோபியில் உள்ள முதியோர் இல்லத்தின் ஆலோசகராக இருந்தார்.
இவர் கோபி சார் பதிவாளர் அலுவலகத்தில் முதியோர் இல்லத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க கொண்டு சென்றார். அப்போது அங்கு சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார் பதிவாளராக தங்கவேலு பணிபுரிந்தார்.
அவர் ஆண்டறிக்கையில் உள்ள குறைகளை மறைத்து பதிவு செய்து கொடுக்க புஷ்பராஜிடம் ரூ.500 லஞ்சம் கேட்டார். இதை கொடுக்க மனம் இல்லாத புஷ்பராஜ் இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து தங்கவேலுவை லஞ்ச பணம் பெற்ற போது 31.1.2004 அன்று கையும் களவுமாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இவர் வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. மாஜிஸ்திரேட்டு மலர்வாலண்டினா தீர்ப்பை வழங்கினார்.
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தங்கவேலுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சம்பத் வாதாடினார். முன்னாள் சார்பதிவாளர் ஒருவர் அதிகபட்ச தண்டனை பெற்றது இந்த வழக்கில் தான் என்று வக்கீல் கூறினார்.
இப்போது தண்டனை பெற்றுள்ள தங்கவேலு இதற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்று கைதாகி 3 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு வயது 62, அவர் பணியில் இல்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தில் சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குற்றவாளிகளை பிடிப்பதில், தண்டனை பெற்று கொடுப்பதில், அறிவுரை கூறி அவர்களை திருத்துவதில் திறமையானவர். அவருக்கு பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
வேளாண்மை தொழில் நலிந்து வருகிறது. உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நீடித்த நிலையான திட்டங்களை சட்டமாக்க வேண்டும். உற்பத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
உற்பத்தி பொருளை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளும், விற்பனை செய்ய அங்கன்வாடிகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்திக்கு பெயர் போனது. ஆனால் இன்றே மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. அதே போன்று கரும்பு விவசாயிகளுக்கு நிலவை தொகையான ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்.
தமிழர்களுக்கு தொடர்ந்து காவிரி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கேட்டு கொள்கிறேன்.

ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். அவர் தொடர்ந்து ஆய்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா(வயது21). திருநங்கையான இவர் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமான திருநங்கைகள் வந்தனர். நடந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது.-
சுஷ்மிதாவை கடந்த சில நாட்களாகவே மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள் போனில் தொடர்பு கொண்டு தங்கள் குழுவில் இணைய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். ஆனால் சுஷ்மிதா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சுஷ்மிதா ஜாலியாக அவரது தோழிகளுடன் பேசிய உரையாடல், வீடியோவை எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சமூகவலை தளங்களான பேஸ்மூக், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் சுஷ்மிதா மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் சுஷ்மிதா திருநங்கை என்பதால் அவரது தந்தை இவரை ஏற்கவில்லை. அதனால் நாடார்மேட்டில் ஒரு வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து வந்தார். அவரது தாய் அவ்வபோது வந்து சுஷ்மிதாவை பார்த்து செல்வார். இந்நிலையில் சுஷ்மிதா சம்பந்தப்பட்ட வீடியோ வெளியானதால் அவர் மனம் உடைந்து விஷம் குடித்து உள்ளார்.
இது சமந்தமாக போலீசார் புகார் வாங்க மறுக்கிறார்கள். இதனால் திருநங்கைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து எஸ்.பி.அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையே ஈரோடு ஆஸ்பத்திரியில் சுஷ்மிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
அந்தியூர் அருகே எண்ணமங்கலம், விராலிகாட்டூரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 24). இவருக்கும் மேட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி லட்சுமணனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரதாப் (5) என்ற மகன் உள்ளார். லட்சுமணனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதனால் லட்சுமணனும், சங்கீதாவும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். சங்கீதா தனது மகனுடன் விராலிகாட்டூரில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.
லட்சுமணன் மேட்டூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். அவ்வப் போது விராலிகாட்டூருக்கு வந்து மகன் பிரதாப்பை பார்த்து செல்வாராம்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சங்கீதா தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிய நிலையில் சங்கீதா அலறி துடித்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சங்கீதா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சங்கீதா எதற்காக தீக்குளித்தார்? என்பது தெரியவில்லை. ஒருவேளை கணவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு அந்த விரக்தியில் தீக்குளித்தாரா? அல்லது வேறு காரணமா? என்று அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






