என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே கல்லூரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி கவுண்டன் பாளையம் பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியின் மெயின் பிளாக்கிற்கு பின் பகுதியில் 2-வது தளத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் இருந்து கரும் புகை வந்தது. அங்கு சென்று பார்த்த போது கம்ப்யூட்டர்கள் தீப் பிடித்து எரிவது தெரியவந்தது. இது தொடர்பாக பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சுமார் ஒரு அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 8 கம்ப்யூட்டர்கள், மேற்கூரையின் சீலிங், ஏசி மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    ஏசி மெஷினில் ஏற்பட்ட மின் கசிவே இந்த தீ விபத் திற்கு காரணமாக இருக்கக் கூடும் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    வருகிற பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளனர். இந்த அரசை பொறுத்த வரையில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்ட நூலகங்களில் தொடங்கப்படும்.

    மாணவ-மாணவிகளிடையே மன அழுத்தத்தை போக்குவதற்காக பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை பெறுவார்கள். வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும். 3 ஆண்டுகளுக்குள் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்பதற்கு பதிலாக 2 ஆண்டுகளிலேயே புதிய பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கோபி அருகே கொளப்பலூரில் புதிய டெக்டைல்ஸ் பார்க் அமைக்க அடுத்த மாதம் தொடக்க விழா நடைபெறுகிறது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 72 வகையான தொழிற்கல்வி பிளஸ்-1 வகுப்பில் இருந்தே கொண்டுவரப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலமாக மாதம் ஒரு முறை அரசு பள்ளிக்கூடங்கள் முழுவதுமாக சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துறையின் பேரில் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படும்.

    இவ்வாறு இவர் கூறினார்.
    பொங்கல் பண்டிகையையொட்டி 1.63 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படவுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கலெக்டர் பிரபாகர் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா எம்.எல்.ஏ.க் கள் தென்னரசு, ராஜா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு சுமார் 1.63 கோடி பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

    அதன்படி ஈரோட்டில் 45, திருச்செங்கோட்டில் 53, திருப்பூரில் 16, கோவையில் 12 என மொத்தம் 126 விசைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 27 ஆயிரத்து 600 சேலைகளும், 62 லட்சத்து 39 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருச்செங்கோட்டில் 43 லட்சத்து 11 ஆயிரத்து 650 சேலைகளும், 61 லட்சத்து 45 ஆயிரத்து 500 வேட்டிகளும், கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 200 சேலைகளும், 8 லட்சத்து 61 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் சேலைகளும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 500 வேட்டிகளும் என மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 450 சேலைகளும், 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 200 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

    தற்போது விசைத்தறி சங்கங்கள் மூலம் 81 சதவீத சேலைகளும், 100 சதவீதம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருப்பிலுள்ள வேட்டி சேலைகள் 11.1.2018-க்குள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 100 போட்டி தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் 312 தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கப்படும்’’ என்றார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியானதால் சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் தற்போது துடைக்கப்பட்டிருக்கிறது என்று புகழேந்தி கூறியுள்ளார்.
    ஈரோடு:

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் கர்நாட மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி ஈரோட்டில் மாலைமலைர் நிருபரிடம் கூறியதாவது:-

    அம்மா ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இது வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி. இதில் எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

    மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் என்றாவது ஒருநாள் அம்மா சிகிச்சை பெறும் வீடியோ வெளியே வரும் என்று தெரிவித்தேன். அண்ணன் டி.டி.வி.தினகரனிடம் இதுபற்றி நான் கூறி அம்மா சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். தினகரன் அவ்வாறு அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டு மலிவான அரசியலை நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

    ஆகவே அண்ணன் தினகரனுக்கு அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி இது.

    அம்மாவை கொன்று விட்டார்கள், காலை வெட்டி விட்டார்கள் என்றெல்லாம் சின்னம்மா சசிகலா மீது பழியை போட்டார்கள். இப்போது இந்த வீடியோ வெளியிட்ட தன் மூலம் அம்மாவை சின்னம்மா சசிகலா கண்ணும் கருத்துமாக எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார் என்பதற்கு சாட்சி ஆகும்.

    இந்த வீடியோ மூலம் பழி போட்டவர்கள் எல்லாம் இப்போது வெட்கி தலைகுனிய வேண்டும். இப்போது தெளிவாகி உள்ளது. சின்னம்மா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. சின்னம்மா சசிகலா மீது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது.

    இப்பவும் சொல்கிறேன் அம்மா சிகிச்சை பெற்ற வீடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்.
    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு இன்று முதல் தண்ணீர் வரத்து மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் தண்ணீர் வரத்து மிதமான அளவில் அதிகரித்துள்ளது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1764 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையின் நீர்மட்டம் 71.89 அடியாக உள்ளது.அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களுக்கு 3 கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    வரும் டிசம்பர் 30-ந் தேதி முதல் மீண்டும் 4-வது கட்டமாக வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டதன் மூலம் சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது என்று புகழேந்தி கூறினார்.

    ஈரோடு:

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் கர்நாட மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி ஈரோட்டில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    அம்மா ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இது வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி. இதில் எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

    மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் என்றாவது ஒருநாள் அம்மா சிகிச்சை பெறும் வீடியோ வெளியே வரும் என்று தெரிவித்தேன். அண்ணன் டி.டி.வி.தினகரனிடம் இதுபற்றி நான் கூறி அம்மா சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். தினகரன் அவ்வாறு அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டு மலிவான அரசியலை நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார். ஆகவே அண்ணன் தினகரனுக்கு அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி இது.


    அம்மாவை கொன்று விட்டார்கள், காலை வெட்டி விட்டார்கள் என்றெல்லாம் சின்னம்மா சசிகலா மீது பழியை போட்டார்கள். இப்போது இந்த வீடியோ வெளியிட்ட தன் மூலம் அம்மாவை சின்னம்மா சசிகலா கண்ணும் கருத்துமாக எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார் என்பதற்கு சாட்சி ஆகும். இந்த வீடியோ மூலம் பழி போட்டவர்கள் எல்லாம் இப்போது வெட்கி தலைகுனிய வேண்டும். இப்போது தெளிவாகி உள்ளது. சின்னம்மா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. சின்னம்மா சசிகலா மீது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது. இப்பவும் சொல்கிறேன் அம்மா சிகிச்சை பெற்ற வீடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 2 திருட்டு செல்போனுடன் சிக்கிய வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் பழவஞ்சி பாளையம், குமரன் காலனியை சேர்ந்த சிங்கராஜி(வயது38) என தெரிய வந்தது.

    சிங்கராஜி ரெயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போனை திருடுவதை தொழிலாக வைத்துள்ளான். அவனிடம் இருந்து 2 திருட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சிந்தானந்த நகரை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 25). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் ஈரோடு சங்குநகரை சேர்ந்த சுமிதா என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை முகமதுரசூல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண் டிருந்தார்.

    அவருடன் சுமிதாவும் வந்தார். வண்டியை முகமது ரசூல் ஓட்ட பின்னால் சுமிதா உட்கார்ந்து வந்தார்.

    குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது முகமதுரசூல் பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி முகமது ரசூல், சுமிதா இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே டி.வி. பார்த்து கொண்டிருந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் வள்ளிம்மாள் (வயது 67). நேற்று இரவு 7.30 மணியளவில் இவர் வீட்டில் உட்கார்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் வழியாக ஒரு பெண் நைசாக வீட்டுக்குள் புகுந்தாள். பிறகு அந்த பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மாள் மீது தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை தூவினாள்.

    இதனால் கண் எரிச்சல் அடைந்த வள்ளியம்மாள் தடுமாறியபோது அந்த பலே பெண் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தாள்.

    அந்த சமயத்திலும் வள்ளியம்மாள் அந்த பெண்ணிடம் போராடி நகையை பறிக்க விடாமல் தடுத்தார். பிறகு அந்த நகை அறுந்தது. இதில் மர்ம பெண்ணின் கையில் 1½ பவுன் நகை சிக்கியது. கிடைத்த வரை லாபம் என சிக்கிய நகையுடன் அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

    இது துணிகர சம்பவம் குறித்து வள்ளியம்மாள் கோபி போலீசில் புகார் செய்தார். புகாரில் என்னிடம் நகை பறித்த பெண் பார்த்த முகம் போல் தெரிகிறது என்று கூறினார். மேலும் அவளது அடையாளம் பற்றியும் கூறினார்.

    அதன் பேரில் கோபி போலீசார் விசாரணையை முடுக்கினர். இரவு 10.30 மணியளவில் போலீசார் பஸ் நிலையத்தில் கண்காணித்தபோது அந்த பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. வள்ளியம்மாள் புகாரில் சொன்ன அங்க அடையாளம் இருந்ததை கண்ட போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவள்தான் வள்ளியம்மாள் வீட்டில் புகுந்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. அவளிடமிருந்து நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்தப் பெண்ணின் பெயர் புஷ்பவல்லி (52) என்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி என தெரிய வந்தது.

    புஷ்பவல்லியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே தனியார் பஸ் - வேன் திடீரென்று மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
    பெருந்துறை:

    கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் இருந்து திங்களூருக்கு பனியன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். இதேபோல் நம்பியூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

    திங்களூர் நல்லாம்பட்டி ரோடு அம்மன்கோவில் அருகே இன்று காலை 8 மணியளவில் இரு வாகனங்களும் எதிர் எதிரே வந்தபோது சைடில் எதிர் பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

    பஸ்சின் முன்பகுதி வேனின் பின்புறத்தில் மோதியது. இதனால் வேனில் வந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் வேனின் பின்புறத்தில் அமர்ந்துவந்த வெள்ளாங்கோவில் மணியன் தோட்டத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி அருண்குமார் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குஜராத் தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான்.பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    குஜராத் தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான்.பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

    குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் 20 தொகுதிகளில் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் இளைஞர்களையும், கிராமபுற மக்களையும் கவர்ந்துள்ளார் அனைத்து தரப்பு மக்களையும் அவர் அரவணைத்து செல்லும் வீதம் அனைவரையும் ஈர்த்து உள்ளது.

    மேலும் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் கிராமபுற மக்கள் அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஓட்டு போட்டுள்ளனர்.


    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மோடி வருகை தந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது காலம் கடந்த முடிவு. அவர் வருகை வெறும் கண்துடைப்பு.

    மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி பா.ஜ.க. அளித்தது. ஆனால் இன்று வரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

    மீனவர்களுக்கு அவர் ஒன்றும் செய்ய போவதில்லை. தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் தான் அவர் ஈடுபட்டு உள்ளார். அவர் என்னதான் ஸ்டண்ட் அடித்தாலும், நாடகம் நடத்தினாலும் தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற முடியாது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.டெபாசிட் இழப்பது உறுதி. தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வருபவர்கள் திடீரென தற்கொலைக்கு முயன்று வருகிறார்கள். உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயல்வது, வி‌ஷம் குடிக்க முயல்வது, மேலும் கையை அறுப்பது போன்ற விபரீத சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது போன்ற சம்பவங்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தொடர்ந்து நடந்து வருவது வாடிக்கையாகியும் விட்டது.

    இதனால் மக்கள் குறை கேட்பு முகாமில் இப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. இதையும் மீறி தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது. இப்படி தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும் எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடந்த போது 4 பேர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

    ஈரோடு மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் மற்றும் அகில இந்திய மக்கள நலக்கழக தலை வர் டி.கே.பழனிசாமி ஆகியோர் அரசு பள்ளிகளில் கட்டணத்தை குறைக்க கோரி மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது அவர்கள் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) என்ற வாலிபர் தனது வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி தனது கையை கத்திரிகோலால் வெட்டிஅறுத்து கொண்டு வந்தார்.

    தற்கொலை மிரட்டல் விடுத்த இவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டையை சேர்ந்த சங்கர் (35) என்பவர் வீட்டு மனை பட்டா கேட்டு உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இப்படி ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×