என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே டி.வி. பார்த்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்த பெண் கைது
    X

    கோபி அருகே டி.வி. பார்த்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்த பெண் கைது

    கோபி அருகே டி.வி. பார்த்து கொண்டிருந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் வள்ளிம்மாள் (வயது 67). நேற்று இரவு 7.30 மணியளவில் இவர் வீட்டில் உட்கார்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் வழியாக ஒரு பெண் நைசாக வீட்டுக்குள் புகுந்தாள். பிறகு அந்த பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மாள் மீது தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை தூவினாள்.

    இதனால் கண் எரிச்சல் அடைந்த வள்ளியம்மாள் தடுமாறியபோது அந்த பலே பெண் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தாள்.

    அந்த சமயத்திலும் வள்ளியம்மாள் அந்த பெண்ணிடம் போராடி நகையை பறிக்க விடாமல் தடுத்தார். பிறகு அந்த நகை அறுந்தது. இதில் மர்ம பெண்ணின் கையில் 1½ பவுன் நகை சிக்கியது. கிடைத்த வரை லாபம் என சிக்கிய நகையுடன் அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

    இது துணிகர சம்பவம் குறித்து வள்ளியம்மாள் கோபி போலீசில் புகார் செய்தார். புகாரில் என்னிடம் நகை பறித்த பெண் பார்த்த முகம் போல் தெரிகிறது என்று கூறினார். மேலும் அவளது அடையாளம் பற்றியும் கூறினார்.

    அதன் பேரில் கோபி போலீசார் விசாரணையை முடுக்கினர். இரவு 10.30 மணியளவில் போலீசார் பஸ் நிலையத்தில் கண்காணித்தபோது அந்த பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. வள்ளியம்மாள் புகாரில் சொன்ன அங்க அடையாளம் இருந்ததை கண்ட போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவள்தான் வள்ளியம்மாள் வீட்டில் புகுந்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. அவளிடமிருந்து நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்தப் பெண்ணின் பெயர் புஷ்பவல்லி (52) என்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி என தெரிய வந்தது.

    புஷ்பவல்லியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×