என் மலர்
செய்திகள்

ஈரோடு மாநகர பகுதியில் தொடர் வழிப்பறியால் பொதுமக்கள் பீதி
ஈரோடு:
ஈரோடு பழையபாளையம் சண்முகவள்ளி நகரை சேர்ந்த விசாலாட்சி என்பவர் கடந்த 17-ந் தேதி காலை ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
செங்குந்தர் பள்ளி அருகே சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் விசாலாட்சி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினான்.
இதே போல் ஈரோடு கைத்தறித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கீதா என்பவர் பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 3½ பவுன் செயினை பறித்து சென்றான்.
நேற்று முன்தினம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அமிர்தகவுரி என்பவர் தனது மருமகளுடன் சம்பத் நகரில் வாக்கிங் சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமிர்தகவரி அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயினை பறித்து சென்றான்.
இவ்வாறு தனியாக செல்லும் பெண்களை குறித்து வைத்து நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெண்கள் பீதியில் உள்ளனர். இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுப்பட்டவன் ஒரே நபராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.நகை பறிப்பு சம்பவங்கள் எதிரொலியாக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் உடன் செல்கின்றனர்.
ஈரோடு சம்பத் நகர், பெருந்துறை ரோடு, வ.உ.சி.பூங்கா, பெரியார் நகர் பகுதி போன்ற பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.






