என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு சுகாதார அதிகாரிகள் போல் நடித்து பணம் வசூல் செய்த ஆசாமிகள் ஜெயிலில் அடைப்பு
    X

    டெங்கு சுகாதார அதிகாரிகள் போல் நடித்து பணம் வசூல் செய்த ஆசாமிகள் ஜெயிலில் அடைப்பு

    டெங்கு சுகாதார அதிகாரிகள் போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்த ஆசாமிகள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று மாலை ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    ஈரோடு:

    டெங்கு சுகாதார அதிகாரிகள் போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்த ஆசாமிகள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று மாலை ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் இது வரை 38 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் டெங்கு நோயை பரப்பும் வகையில் இருந்த தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் பள்ளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்க நோட்டீசும் கொடுத்தும் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் டெங்கு சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தலைமையில் சுகாதார பணியாளர்கள் ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் களத்தில் இறங்கி டெங்கு நோய் பரவும் பகுதிகளை கண்டறிந்து அறிவுரை கூறியும் அபராதம் விதித்தும் வருகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் ஈரோடு நகரில் சிலர் நாங்கள் டெங்கு சுகாதார அதிகாரிகள் என கூறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணம் வசூல் செய்து வருவதாகவும் மாவட்ட கலெக்டர் பிரபாகர் மற்றும் மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல்கானுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அதிரடி உத்தரவுப்படி போலி டெங்கு சுகாதார அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

    ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் சிமெண்ட்டு கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. சுதாகர் என்பவர் இதை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு ‘‘2 டிப்-டாப்’’ வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் ‘‘நாங்கள் டெங்கு சுகாதார அதிகாரிகள் உங்கள் நிறுவனத்தில் ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்’’ என்று கூறினர். பிறகு மிகவும் சாமர்த்தியமாக நம்பும் படி நிறுவனத்தை சுற்றி சோதனை செய்தனர். அந்த டிப்-டாப் ஆசாமிகள் உங்கள் நிறுவனத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது. இதனால் ரூ.50 அயிரம் அபராதம் விதிக்கிறோம்’’ என்று கூறினர்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதாகரிடம் மேலும் அவர்கள், ‘‘இது பற்றி மேலிடம் கூறி உங்களுக்கு அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு ரூ.200 கொடுங்கள்’’ என்று கூறினர்.

    மேலும் அந்த ஆசாமிகள் எழுதி கொடுத்த தாளில் மாநகராட்சி சீலோ வேறு எந்த அலுவலக சம்பந்தமான அறிகுறியோ இல்லை. வெற்று பேப்பரில் எழுதி கொடுத்தனர்.

    இது சுதாகாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்படவே சுதாகர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று திரும்பி கேட்ட போது உஷாரான அந்த ஆசாமிகள் அங்கிருந்து நழுவி சென்றனர். தப்பி ஓட முயன்ற அவர்களை அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து பிடித்தார். அவர்கள் போலி அதிகாரிகள் என்று தெரிந்ததும் சிலர் தர்ம அடி கொடுத்து சூரம்பட்டி போலீசிடம் ஒப்படைத்தனர்.

    இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு அடுத்த வெள்ளோட்டை சேர்ந்த ஜவகர் ராஜா (வயது 24), கவுண்டிச்சி பாளையத்தை சேர்ந்த முருகன் (24) என்றும் தெரிய வந்தது.

    அந்த ஆசாமிகள் இதே போல் மேலும் பலரிடமும் நாங்கள் டெங்கு சுகாதார மேற்பார்வையாளர்கள் என கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்திருப்பது தெரிய வந்தது.

    பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று மாலை ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வந்து பணம் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவாது:-

    தற்போது மாநகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிறுவனங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருந்தால் அந்தந்த பகுதி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களே அபராதம் விதிக்க முடியும்.

    சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் தவிர வேறு யாராவது டெங்கு ஒழிப்பு பணிக்கு வந்துள்ளோம், ஆய்வு செய்ய வேண்டும் என்று வந்தால் யாரும் நம்ப வேண்டும். அந்த நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் இதே போன்ற நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×