என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டரிடம் கந்து வட்டி புகார் மனு கொடுக்க வந்த மனோன்மணி
    X
    ஈரோடு கலெக்டரிடம் கந்து வட்டி புகார் மனு கொடுக்க வந்த மனோன்மணி

    கந்துவட்டி கொடுமை: ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு மண் எண்ணை கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

    கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண் எண்ணை கேனுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி நால்ரோட்டை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டார்.

    இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார்.

    மனோன்மணி துணிகளுக்கு இஸ்திரிபோட்டு சம்பாதித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 6 பேரிடம் ரூ. 1½ லட்சம் கடன் வாங்கினார்.

    அந்த பணத்துக்கு வட்டி சேர்த்து இதுவரை ரூ. 3 லட்சத்தை அவர் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் கொடுத்தவர்களில் 3 பேர் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

    இந்த கந்து வட்டி கொடுமையால் மனம் உடைந்த மனோன்மணி கடந்த தீபாவளி அன்று தற்கொலைக்கு முயன்றார். அவரது மகள் கோவையை சேர்ந்த தனது கல்லூரி நண்பருடன் சேர்ந்து தாயை காப்பாற்றினார்.

    பின்னர் மனோன்மணியும், அவரது மகளும் கோவைக்கு சென்று நண்பர் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கடன் கொடுத்த அந்த 3 பேரும் கோவைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டினர்.

    இதனால் இன்று மனோன்மணி கந்து வட்டி புகார் கொடுக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தனது கையில் மண் எண்ணை கேன் வைத்திருந்தார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்தனர். துரிதமாக செயல்பட்ட அவர்கள் மனோன்மணியிடம் இருந்து மண் எண்ணை கேனை பறித்தனர்.

    அவர்களிடம் கந்துவட்டி கொடுமையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக மனோன்மணி கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் இன்று கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண் எண்ணை கேனுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×