என் மலர்tooltip icon

    கடலூர்

    மனைவி உடலை கொண்டு சென்றபோது ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதியதில் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வேப்பூர்:

    சென்னையை சேர்ந்தவர் பாபு (வயது 60). இவரது மனைவி ராகிணி (55). இவர்கள் சொந்த ஊரான நெல்லை தென்காசிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்திருந்தனர். உடல்நலக் குறைவால் ராகிணி திடீரென்று நேற்று இறந்தார்.

    அவரது உடலை சென்னைக்கு ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டனர். ஆம்புலன்சில் கணவர் பாபு, அவரது உறவினர் ஒருவர் இருந்தார்.

    ஆம்புலன்சு இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு திருச்சி- சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கார் மீது ஆம்புலன்சு மோதி நடுரோட்டில் நின்றது.

    இந்த நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்தது. அந்த பஸ் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சு மீது மோதியது. இதில் ஆம்புலன்சு அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த பாபு இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் சண்முகம் உள்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    மோரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கடலூர்:

    வங்க கடலில் கொல்கத்தாவுக்கு 950 கிலோ மீட்டருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு நிலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கொல்கத்தாவுக்கு 720 கிலோ மீட்டருக்கு தெற்கு, தென்கிழக்கில் நிலை கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கடும் புயலாக வலுவடைந்து நாளை வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.



    கடலூர் துறைமுகத்தில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கடலூர் துறைமுகத்தில் இன்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வங்க கடலில் கொல்கத்தாவுக்கு 950 கிலோ மீட்டருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் இன்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    பண்ருட்டி அருகே ஏரிக்கரையில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை காலணியை சேர்ந்தவர் சந்திரசாமி(48) தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த சந்திரசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட சந்திரசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    இது குறித்து இவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    கடலூரில் விபத்து இழப்பீட்டு தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வநாயகம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானார்.

    இதையடுத்து அவரது மனைவி ஞானாம்பாள் தமிழக அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு விபத்து இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கடந்த 3-8-2008 அன்று அப்போதைய மாளிகம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த சந்திரசேகரிடம் மனு கொடுத்தார்.

    அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், விபத்து இழப்பீட்டு தொகை பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார். இது குறித்து ஞானாம்பாள் தனது உறவினரான கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தார்.

    உடனே கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரை, கிருஷ்ணமூர்த்தி சந்தித்து பேசினார். அப்போதும், ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அதிகாரி கூறினார். இது தொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகரிடம் கிருஷ்ணமூர்த்தி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது சந்திரசேகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சந்திரசேகர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் வந்து மது அருந்திவிட்டு சென்றனர். அப்போது அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனால் அப்பகுதி பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியானது.

    இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடூர் அகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிடாது பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் குறிஞ்சிப்பாடி துணை தாசில்தார் ஆனந்த் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 15 நாட்களுக்குள் இந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ரஜினி காந்த் கட்சி தொடங்கினால் சாதி மற்றும் மதவாத கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும் என காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    டாக்டர் அம்பேத்காரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். இது ஜனநாயக நாடு. ஜனநாயக உரிமை அவருக்கு உள்ளது. அவர் கட்சி தொடங்கினால் சாதி மற்றும் மதவாத கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் நிபந்தனை.

    ரஜினிகாந்த் என்னை தலித் மக்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறியதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஒரு சாதிக்காக மட்டும் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன் என்பதை நண்பர் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும்.


    இந்த கோடை கால விடுமுறையில் அனைத்து கட்சி தலைவர்களும் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால் நான் மட்டும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மக்களை நேரடியாக சந்தித்து வருகிறேன்.

    எனது தாய் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தினமும் கண்ணீர் வடித்து வருகிறார். திருமணம் செய்து கொள் என்று கூறி வருகிறார். ஆனால், நான் என் வாழ்வை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து வருகிறேன். நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை. தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.

    ஒரு இயக்கம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அப்படி விடுதலை சிறுத்தை கட்சி கட்டுப்பாடுடன் இருக்கிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த போது தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். நான் மட்டும் உண்ணாவிரதம் இருந்தேன். இதை விடுதலை சிறுத்தை கட்சியினரும் பின்பற்றினார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சாதி, மத வேலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தனி கட்சியை ரஜினிகாந்த் தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கடலூரில் திருமாவளவன் பேசினார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிட்ட சாதிய கட்சி அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்காக போராடும் கட்சி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

    கடலூர் மாவட்டத்தில் சாதிய மோதல், கொலை, வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இதை மதவாதம், சாதி அரசியல் செய்பவர்கள் தான் எதிர்க்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார்கள். அவர்கள் தமிழகத்தை ஆளவில்லையா?

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். சாதி, மத வேலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தனி கட்சியை ரஜினிகாந்த் தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மற்ற கட்சியில் இணையாமல் ரஜினிகாந்த் தனித்து செயல்பட வேண்டும் என்பதே இளைஞர்கனிள் விருப்பம். விடுதலை சிறுத்தைகளின் விருப்பமும் அதுதான் என திருமாவளவன் கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நெய்வேலி வந்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விசயம். தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகள் அனைவருடன் அவர் தொடர்புள்ளவர். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

    அவர் பாரதிய ஜனதாவில் சேரப்போகிறார், காங்கிரசில் சேரப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் தனித்து செயல்பட வேண்டும் என்பதே இளைஞர்கனிள் விருப்பம். விடுதலை சிறுத்தைகளின் விருப்பமும் அதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. இதனை கண்டித்து பண்ருட்டியில் ஆர்பாட்டம் இன்று நடைப்பெறுகிறது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    வேப்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    காட்பாடி அருகே உள்ள சென்னாங்குப்பத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). தொழிலதிபர். இவர் திருநெல்வேலியில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அருள், செல்வராஜ், பார்த்திபன் ஆகியோர் உள்பட 7 பேருடன் காரில் சென்றார்.

    இன்று காலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பரந்தாமன் உள்பட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே தொழிலதிபர் பரந்தாமன் பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேருக்கும் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வடலூரில் தி.மு.க. பிரமுகர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 44). தி.மு.க. பிரமுகரான இவர் வடலூர் பேரூராட்சி 17-வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்தார். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    நேற்று இரவு ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்று மாத்திரை வாங்கினார். அந்த கடையின் முன்பு நின்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது 6 பேர் அங்கு வந்தனர். ரவிச்சந்திரனை சுற்றிவளைத்தனர் அந்த கும்பலிடமிருந்து ரவிச்சந்திரன் தப்பிசெல்ல முயற்சி செய்தார். அவர்கள் விடவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் பட்டது அவர் மயங்கி விழுந்தார். ரவிச்சந்திரன் இறந்த விட்டதாக நினைத்த அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக வடலூர் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரன் முன்பு வடலூரில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். பார் நடத்தும்போது அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    அதில் மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்டம் மேலத்திருக்களிப்பாலை நாகை மாவட்டம் அளக்குடி இடையே கடல் நீர் ஆற்றின் உள்ளே வராமல் தடுக்க தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடலூர் & நாகை மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனூர் & குமாரமங்கலம் இடையே கதவணை கட்ட வேண்டும். கொள்ளிடத்தில் கடலூர் மாவட்டம் மேலத்திருக்களிப்பாலை(கவரப்பட்டு)& நாகை மாவட்டம் அளக்குடி இடையே கடல் நீர் ஆற்றின் உள்ளே வராமல் தடுக்க தடுப்பணை  கட்ட வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கடலூர், நாகை ஆகிய 2 மாவட்ட மக்களின் குடிநீர் பாசன ஆதாரங்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அனைத்து விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேறாததால் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
    நாகை&கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் கடலூர் மண்டல தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மதிவாணன், உழவர் முன்னணி தலைவர் கென்னடி, பா.ம.க. மாநில துணைதலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், நாகை மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வடக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன், கொள்ளிடம் கீழணை பாசன சங்க செயலாளர் அன்பழகன், துணைதலைவர் லட்சுமிகாந்தன், பொருளாளர் கவிசந்திரன் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர். தொடந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காய்கறிகளை வெட்டி, அவர்களே அங்கே சமையல் செய்து சாப்பிட்டனர். தகவல் அறிந்து மாலை 3.30 மணிக்கு கோட்டாட்சியர் விஜயலட்சுமி அங்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இந்த மாத இறுதிக்குள் கதவணை, தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று தற்காலிகமாக போராட்டத்தை விலக்கி கொள்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    ×