என் மலர்
கடலூர்
கடலூர்:
நாகப்பட்டினத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்னையில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜலால் என்பவர் டிரைவராக உள்ளார்.
இந்த நிலையில் அந்த வைர வியாபாரி, தனது குடும்பத்தினருக்கு ரம்ஜான் நோன்பு செலவுக்காக ரூ.50 லட்சத்தை ஜலாலிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த பணத்துடன் ஜலால் சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு செல்லும் ஒரு ஆம்னி பஸ்சில் நேற்று புறப்பட்டு வந்தார்.
அந்த பஸ் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடிக்கு இரவு வந்த போது, அதனை மதுவிலக்கு போலீசார் தடுத்து நிறுத்தி, உள்ளே யாராவது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்திருக்கிறார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.
அப்போது ஜலால் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில் ரூ.50 லட்சம் பணம் இருந்ததை கண்ட போலீசார், இது ஹவாலா பணமா? என அவரிடம் கேட்டனர். பின்னர் ஜலாலை போலீசார் பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள்.
பின்னர் அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்து விட்டு, மீதி பணத்தை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் வாங்கிக்கொண்ட போலீசார், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு ஜாலாலிடம் கூறினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஜலால் தனது உரிமையாளருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.
வைர வியாபாரி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரிடம் விசாரித்தனர். அங்கிருந்த போலீசார் நாங்கள் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றவில்லை என்றனர்.
இருப்பினும் அவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சோதனைச்சாவடியை சுற்றிலும் சோதனை நடத்தினர். அப்போது சோதனைச்சாவடிக்கு பின்னால் உள்ள முட்புதரில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த பணம் ஒரு பையில் வைத்து போடப்பட்டு இருந்தது.
அந்த பணத்தை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மது விலக்கு போலீசார் 3 பேரிடம் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு அறையில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் பணத்தை கொண்டு வந்த வைர வியாபாரியின் கார் டிரைவர் ஜலால் திடீரென்று மாயமாகி விட்டார். மாயமான ஜலாலையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் டிரைவர் ஜாலாலிடம் இருந்து கைப்பற்றிய பணம் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ(வயது 48). இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்திருந்தார். அங்கு கட்டில், பீரோ போன்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜான்போஸ்கோ வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிச்சென்றார். நள்ளிரவில் அவரது மரக்கடை தீ பிடித்து எரிவதாக ஜான்போஸ் கோவுக்கு செல்போனில் தகவல் வந்தது.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஜான்போஸ்கோ விரைந்து சென்று பார்த்தபோது கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து அவர் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் கடையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு மரப் பொருட்களும், அவற்றை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் நவீன எந்திரங்களும் தீயில் கருகி நாசமாகின.
தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜான் போஸ்கோ காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரும் தீ வைத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகிலா(31). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகிலா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (வயது 40). விவசாயி. இவர் சொத்து பிரச்சினை தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்துக்கான சிட்டா, அடங்கல் கோரி கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மனு கொடுத்தார்.
அப்போது பதிவறை எழுத்தராக இருந்த மஞ்சமுத்து என்பவர் சிட்டா, அடங்கல் வழங்குவதற்கு ரூ.1,500 லஞ்சம் கேட்டார்.
இது குறித்து விவசாயி செந்தாமரை கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் செந்தாமரை ரூ.1,500 லஞ்ச பணத்தை மஞ்சமுத்துவிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை தனது உதவியாளர் கொளஞ்சிநாதனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவறை எழுத்தர் மஞ்சமுத்து மற்றும் உதவியாளர் கொளஞ்சிநாதன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிகட்ட விசாரணை நடந்தது. மஞ்சுமுத்துக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார்.
அபராத தொகையை செலுத்தாவிட்டால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உதவியாளர் கொஞ்சிநாதன் இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 26). கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த கவியரசன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.
காலையில் நீண்ட நேரமாகியும் கவியரசன் அறை கதவு திறக்கப்படவில்லை. வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது கவியரசன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். கவியரசன் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுக்குறித்து கவியரசனின் தந்தை சண்முகம் குமராட்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கவியரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கவியரசன் தீராத வயிற்று வலியினால் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மண்டபமேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரது மகன் சசிதரன் (வயது 20). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.
அதே தெருவைச் சேர்ந்த உறவினர் செல்வி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். இந்த நிலையில் சசிதரன் செல்வியை ஒருதலையாக காதலித்தார். தனது காதலை பலமுறை அவரிடம் கூறினார். ஆனால், செல்வி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது குறித்து சசிதரன் தனது நண்பர் கோகுலிடம் கூறினார். செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஏரி கரைக்கு அழைத்து வரும்படி கூறினார். அதன்படி அவரும் செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் ஏரி கரைக்கு அழைத்து வந்தார். பின்னர் செல்வியை அங்கு விட்டு விட்டு அவர் சென்று விட்டார்.
அப்போது மாணவி செல்வியிடம் சசிதரன் நான் உன்னை காதலித்து வருகிறேன். நீ என்னை காதலிக்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தினார். ஆனால், மாணவியோ அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மேலும் நாம் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை என்று கூறி கண்டித்தார். ஆனால், இதை சசிதரன் ஏற்க மறுத்தார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த விஷப்பாட்டிலை எடுத்து திறந்து செல்வியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். அவரது காதிலும் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றார். சிறிது நேரத்தில் செல்வி அங்கேயே மயங்கி விழுந்தார்.
பின்னர் சசிதரனும் விஷத்தை குடித்தார். அவரும் மயங்கி விழுந்தார். 2 பேர் மயங்கி கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். சசிதரன், செல்வி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்வி புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சசிதரன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சசிதரன் மேலும் செல்வியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த கோகுல் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலை காதலால் மாணவிக்கு விஷத்தை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அவர்களிடம் விரைவில் டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடையை மூடவில்லை.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நல்லூர் வட்டார செயலாளர் அசோகன், இந்திய மாணவர் சங்க வட்ட செயலாளர் ராயர் ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். டாஸ்மாக் கடை அருகே வந்த அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கலால் தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், 2 நாளில் நல்லூரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் மாலை 4 மணி அளவில் திடீரென அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழி காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
சேகரின் தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த 15 வயது சிறுமி அவருக்கு உதவிகள் செய்து வந்தார்.
அப்போது சேகர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
சில மாதம் கழித்து அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறினார். அவர் உடனே சேகர் வீட்டுக்கு சென்று அவரிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனால், சேகர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் 9.7.2015 அன்று புகார் செய்தார். இதையொட்டி சேகரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு சார்பில் வக்கீல் பவானி வாதாடினார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கூலி தொழிலாளி சேகருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கராதேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய 6 சாமி கற்சிலைகளை 2002-ம் ஆண்டு மர்மமனிதர்கள் திருடி ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி சென்றனர். சுமார் 1,400 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 6 சிலைகளும் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை மட்டும் மீட்கப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்த பிரத்யங்கராதேவி சிலையும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து தனி வாகனத்தில் விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
இந்த சிலையை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் பார்வையிட்டார்.
பின்னர் பிரத்யங்கராதேவி சிலையை, கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த சிலையை போலீசார் கும்பகோணத்துக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு குடிபிரியர்கள் அதிகமான பேர் வந்தனர். இதனால் அப்பகுதி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் கடையை மூடுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இதையடுத்து கடையை மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், கலைவாணன் மற்றும் கிராம மக்கள் பெரியநற்குணம் டாஸ்மாக் கடை அருகே திரண்டு வந்தனர். அங்கு சாமியானா பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர்கள் விஜயா, சோமசுந்தரம், புவனகிரி துணை தாசில்தார் சிவகார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் உடனடியாக கடையை மூடாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கடையை உடனே மூடுவதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 32). டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்து வந்தார்.
இவருக்கும், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வானதிபுரத்தைச் சேர்ந்த கவுசல்யா (22) என்பவருக்கும் கடந்த 8-ந் தேதி திருமணம் நடந்தது. கவுசல்யா பி.ஏ. பட்டதாரி ஆவார்.
கணவன்-மனைவி இருவரும் சேத்தியாத்தோப்பில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் பாண்டியராஜன் விவசாய வேலைக்கு சென்று வந்தார். தனது கணவர் டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்வது கவுசல்யாவுக்கு பிடிக்கவில்லை.
கணவரிடம் டிப்ளமோ படித்த நீங்கள் ஏன் விவசாயம் செய்கிறீர்கள்? வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் அல்லவா? என்று கவுசல்யா கேட்டார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்றும் மீண்டும் இருவருக்குள் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா மனமுடைந்து காணப்பட்டார்.
விரக்தி அடைந்த கவுசல்யா திடீரென்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். உடனே அவரும் மனைவி குடித்து மீதி வைத்திருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கவுசல்யா பரிதாபமாக இறந்தார். பாண்டியராஜன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியராஜனும் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 21 நாட்களிலேயே புதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயாவும் விசாரணை நடத்தி வருகிறார்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பாண்டியராஜன்-கவுசல்யாவின் உடல் இன்று மாலை சேத்தியாத்தோப்பில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த சம்பவத்தால் சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெரு கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையொட்டி சிறையில் இரவு காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆயுள் தண்டனை கைதியான திருப்பூர் மடத்துக்குளம் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 41) என்பவர் தன்னுடைய அறையில் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சிறைக்காவலர்கள் அவரிடம் இருந்த செல்போன், 2 சிம்கார்டுகள், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை அலுவலர் பரமேஸ்வரன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






