search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Cuddalore court"

  • அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
  • படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

  இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

  இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

  இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

  திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

  இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  கடலூர்:

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.

  கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.

  அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

  மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.

  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

  இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
  வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை கையாடல் செய்த வழக்கில் துணை தபால் அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. #CuddaloreCourt
  கடலூர்:

  கடலூர் அஞ்சல் கோட்டம் வில்வராயநத்தம் துணை தபால் அலுவலகத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் கடந்த 27-4-2005 அன்று முதல் 13-4-2007 வரை துணை தபால் அதிகாரியாக பணியாற்றினார்.

  இவர் பணிபுரிந்த காலத்தில் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களான கிரிஜா என்பவரின் கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 100 ரூபாயையும், வஞ்சனவள்ளி என்பவரின் சேமிப்பு கணக்கில் இருந்து 5 ஆயிரத்து 400 ரூபாயையும், ஜெயலட்சுமி என்பவரின் தொடர் வைப்புநிதி கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாயையும் சம்பந்தப்பட்டவர்களின் கையெழுத்தைப்போல் போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்தார்.

  இது தொடர்பாக உதவி தபால் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜ் மீது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

  இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் விசாரித்தார். இதில் ஆரோக்கியராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 409-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 420-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 467-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 471-வது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு அன்வர்சதாத் தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகேசன் ஆஜராகி வாதாடினார். #CuddaloreCourt
  ரசீதை திருத்தம் செய்த வழக்கில் திட்டக்குடி வக்கீலுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் வக்கீலாக உள்ளார். கடந்த 2010- 2011-ம் ஆண்டுகளில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதற்காக ரூ.12 ஆயிரத்து 830 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

  இதைத்தொடர்ந்து வக்கீல் அருள்நிதி ரூ.30 மட்டும் செலுத்திவிட்டு ரூ.12 ஆயிரத்து 830 செலுத்தியதாக ரசீதை திருத்தம் செய்துள்ளார். இதனை சட்டசபை சார்பு செயலாளர் கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.

  அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

  இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரசீதை திருத்தம் செய்த வக்கீல் அருள் நிதிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

  கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
  கடலூர்:

  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

  23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

  இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

  இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

  உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

  தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

  பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த பிரபல ரவுடி இன்று கடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
  கடலூர்:

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்தர்(வயது 35). இவர் மீது சிதம்பரம், கோயம்புத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  கடந்த 2016-ம் ஆண்டு பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுரேந்தர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்தார். இதனால் சுரேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 

  இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சுரேந்தர் ஆஜராகினார். அதன் பின்னர் சுரேந்தரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
  ×