என் மலர்
செய்திகள்

ரசீதை திருத்தம் செய்த வழக்கில் திட்டக்குடி வக்கீலுக்கு 3 ஆண்டு ஜெயில்- கடலூர் கோர்ட்டில் தீர்ப்பு

கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் வக்கீலாக உள்ளார். கடந்த 2010- 2011-ம் ஆண்டுகளில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதற்காக ரூ.12 ஆயிரத்து 830 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வக்கீல் அருள்நிதி ரூ.30 மட்டும் செலுத்திவிட்டு ரூ.12 ஆயிரத்து 830 செலுத்தியதாக ரசீதை திருத்தம் செய்துள்ளார். இதனை சட்டசபை சார்பு செயலாளர் கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரசீதை திருத்தம் செய்த வக்கீல் அருள் நிதிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.