என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் சோதனை சாவடியில் வைர வியாபாரியின் டிரைவரிடம் ரூ.20 லட்சத்தை பறித்த போலீசார்
    X

    கடலூர் சோதனை சாவடியில் வைர வியாபாரியின் டிரைவரிடம் ரூ.20 லட்சத்தை பறித்த போலீசார்

    வைர வியாபாரியின் டிரைவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை பறித்த போலீசாரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    நாகப்பட்டினத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்னையில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜலால் என்பவர் டிரைவராக உள்ளார்.

    இந்த நிலையில் அந்த வைர வியாபாரி, தனது குடும்பத்தினருக்கு ரம்ஜான் நோன்பு செலவுக்காக ரூ.50 லட்சத்தை ஜலாலிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த பணத்துடன் ஜலால் சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு செல்லும் ஒரு ஆம்னி பஸ்சில் நேற்று புறப்பட்டு வந்தார்.

    அந்த பஸ் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடிக்கு இரவு வந்த போது, அதனை மதுவிலக்கு போலீசார் தடுத்து நிறுத்தி, உள்ளே யாராவது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்திருக்கிறார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.

    அப்போது ஜலால் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில் ரூ.50 லட்சம் பணம் இருந்ததை கண்ட போலீசார், இது ஹவாலா பணமா? என அவரிடம் கேட்டனர். பின்னர் ஜலாலை போலீசார் பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள்.

    பின்னர் அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்து விட்டு, மீதி பணத்தை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் வாங்கிக்கொண்ட போலீசார், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு ஜாலாலிடம் கூறினர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஜலால் தனது உரிமையாளருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

    வைர வியாபாரி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரிடம் விசாரித்தனர். அங்கிருந்த போலீசார் நாங்கள் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றவில்லை என்றனர்.

    இருப்பினும் அவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சோதனைச்சாவடியை சுற்றிலும் சோதனை நடத்தினர். அப்போது சோதனைச்சாவடிக்கு பின்னால் உள்ள முட்புதரில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த பணம் ஒரு பையில் வைத்து போடப்பட்டு இருந்தது.

    அந்த பணத்தை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மது விலக்கு போலீசார் 3 பேரிடம் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு அறையில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் பணத்தை கொண்டு வந்த வைர வியாபாரியின் கார் டிரைவர் ஜலால் திடீரென்று மாயமாகி விட்டார். மாயமான ஜலாலையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் டிரைவர் ஜாலாலிடம் இருந்து கைப்பற்றிய பணம் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×