என் மலர்
சென்னை
- மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
- உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.
- மதுரையில் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
இந்நிலையில், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 5.10 மணி முதல் ரத்து செய்யப்பட்ட மின்சார ரெயில் மீண்டும் தொடங்கியது.
மாலை 4.10 மணிக்கு மேல் சேவை தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
- அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில், 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
அப்போது அவர், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
- ரசிகர்கள் குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
- சென்னையில் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
- சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
- சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
கோடை காலம் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
பொதுவாக கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்ற வற்றை பருகி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகத்தை தணித்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெயில் அதிகமாக இருக்கக் கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளன.
சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
அதில் உயரம் அதிகமாக இருந்த காரணத்தால் கிழிய கூடிய சூழல் உருவான காரணத்தால் இந்த ஆண்டு அதன் உயரம் குறைக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மக்கள்தொகையில் பாதியாக விளங்கும் பெண்களின் திறனை நாம் வெளிக்கொணர முடியும்.
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, தேசத்திற்கு அதிகாரம் அளிப்பதாகும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே ஒரு சிறந்த தேசத்தைக் கட்ட மைக்க முடியும். இந்தக் கருத்தைச் 'செயலாக்க நாம் இன்னும் வலுவாக உறுதியேற்க வேண்டும்'. நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதில் பெண்களின் தலைமைப்பண்பும், வலிமையும், தொலைநோக்குப் பார்வையும் முக்கியப் பங்காற்றும். ஆட்சி நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிப்பதன் மூலமே, மக்கள்தொகையில் பாதியாக விளங்கும் பெண்களின் திறனை நாம் வெளிக்கொணர முடியும்.
தொகுதி மறுவரையறை என்பது தேசிய அளவில் நீண்ட விவாதத்திற்கு உட் படுத்த வேண்டிய விவகாரம் என்பதாலும், முறையாகச் செய்யாவிட்டால் அது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்பதாலும், பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை தொகுதி மறுவரையோடு இணைக்காமல் தனியாகவே, செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் ஒட்டுமொத்தப் பெண்கள் சார்பாக வலியுறுத்துகிறேன். இதனைச் செயல்படுத்திடும் வகையில் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது முதலே நான் கோரி வருவது போல், அரசியலமைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட் டத்தை திருத்துமாறு ஒன்றிய அரசை மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, தேசத்திற்கு அதிகாரம் அளிப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கத்தில் படகு போட்டி நடைபெற்றது. உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை இந்த போட்டி நடைபெற்றது. இதில் 13 மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.
படகு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலுக்குள் தனிப்படகில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த போட்டியில் முதல் பரிசை கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த மோகன், கண்ணன் ஆகியோர் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மார்ச் 8-ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. இந்த ஆட்சி அமைந்த பின்னர் ஒவ் வொரு நாளும் மகளிர் தினம் தான். ஒவ்வொரு திட்டத்தையும் முதல்-அமைச்சர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.
மீனவர்கள் நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர் களுக்கான நிவாரண தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக் கொடுத்தார். மீன் பிடி படகு உரிமம் புதுப்பித்தலை 3 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தார். மீன் வள பல்கலைக்கழகத்தில் மீனவ மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழை வளர்க்கும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது.
- திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது.
சென்னை:
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் பா.ஜ.க. ஒன்றிய அலுவலக கட்டிடத்தை மத்திய மந்திரி எல்.முருகன் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவரிடம் இந்தி தெரியாததால் டெல்லியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குறிப்பிட்டு உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டபோது, கனிமொழிக்கு நன்றாக இந்தி பேச தெரியும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, பா.ஜ.க. கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சி. 14 கோடிக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கட்சி.
இந்த கட்சி நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது. கட்சியின் நிறுவனரான ஷியாம் பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கான தனி சட்டத்தை ரத்து செய்வதற்கு போராடி உயிர் துறந்தார். அதை பா.ஜ.க. இப்போது நிறைவேற்றி உள்ளது. அதைப் போல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தோம். அதை நிறைவேற்றி உள்ளோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றோம், அதுவும் இப்போது நிறைவேறி உள்ளது. தமிழை வளர்க்கும் கட்சியாகவும் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ரெயில்வே, வங்கி தேர்வுகளை தமிழில் எழுதும் உரிமையை கொண்டு வந்தோம்.
பிரதமர் மோடி தமிழுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஐ.நா.சபையில் பிரதமர் மோடி தமிழின் பெருமையை எடுத்து வைத்தார். திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது.
தி.மு.க. இடம் பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்கள் தமிழுக்காக செய்தது என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 14, 15-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 11-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
- அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வருவாயிலும், நிலப்பரப்பிலும் பெரிய 6 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம் மாநகராட்சியின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அல்லாத அதிகாரியான இளங்கோவன் நியமிக்கப்பட்டிருப்பதில் அப்பட்டமான விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சியாளர்களின் விருப்பங்களை எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால் தான் அவர் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






