என் மலர்
சென்னை
- 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 23° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டவேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
- நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்!
சென்னை:
மக்களவையில் "தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்" என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பேசியதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
- முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
சென்னை:
தேசிய கல்வி கொள்கை வலியுறுத்தும் மும்மொழி திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்துகிறது. ஆனால் இருமொழி கொள்கையே தங்கள் லட்சியம் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
இதையடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை பா.ஜ.க. தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளார்கள். மே மாதம் தான் இந்த திட்டம் முடிகிறது.
இதற்கிடையே மும்மொழி திட்டம் என்ன சொல்கிறது? இந்தியை மட்டும் திணிக்கவில்லை. தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு மொழியைத்தான் கற்றுக்கொள்ள சொல்கிறது.
இதுபற்றி பொதுமக்களிடம் மேலும் விவரிக்க விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசுவதற்கு அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
இதற்காக தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
அதன்படி முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தேதி வாரியாக வருமாறு:-
மார்ச் 25-ந்தேதி- திருநெல்வேலி, ஏப்ரல் 5-ந்தேதி- வேலூர், ஏப்ரல் 12-ந்தேதி-காஞ்சிபுரம், ஏப்ரல் 19-ந்தேதி- சேலம், ஏப்ரல் 26-ந்தேதி சென்னை, மே 3-ந்தேதி- மதுரை, மே 11-ந்தேதி- கோவை.
இந்த கூட்டங்கள் நடைபெறும் ஒவ்வொரு கோட்டத்திலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கூட்டத்தில் பங்கேற்க செய்யும் வேலையில் கட்சியினர் இப்போதே தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.
- நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.
- வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரம், நெல்லை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாமல்லபுரம் செல்லும் வழியில் வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் முதலில் கட்சி சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் இருந்தால் எழுதிக் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இருந்தாலும் எழுதி சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை மனுவாக எழுதி கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் கொடுத்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
இதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். கழக ஆட்சியில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இது போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் நீங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். திண்னைப் பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் மூலமும் கழக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். உங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். தலைமை என்ன கட்டளையிடுகிறேதா அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
எனவே தேர்தலுக்காக இப்போதே தயாராகி உங்கள் பணிகளை வேகப்படுத்துங்கள். நமது இலக்கு 200 தொகுதிகள். அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே தீவிரமாக பணியற்றுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் என்று அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டக் கழக துணைச் செயலாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,320-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.
கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
- திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை.
- முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க.
சென்னை :
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக முதலமைச்சர் அண்ண ஸ்டாலின் அவர்கள் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை.
திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள். முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம்.
முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க. பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்... தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க... இல்லாத ஒரு பிரச்சனையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார்.
- இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது.
- இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார்.
சென்னை:
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள்! என்று கூறியுள்ளார்.
- லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்.
- லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர்.
ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
- மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது.
- இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
சென்னை:
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ள திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், மீனவர்கள் பிரச்சனையை விஜய் கையிலெடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருமாவளவன், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது என்று கூறினார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திருமாவளவன் பேசுகையில், தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
- வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதியான வெற்றியைப் பெற்றனர்.
- இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்.
சென்னை:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் மோதின. இதில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்து. இதன்மூலம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா அணி 3-வது முறையாக வென்றுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!
இது ஒரு அற்புதமான போட்டி, எங்கள் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதியான வெற்றியைப் பெற்றனர். சபாஷ், இந்திய அணி என்று கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துபாயில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் சாதனை அதிர்ஷ்டத்தால் விளைந்ததல்ல... திறமையால் கிடைத்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வியக்கத்தக்க சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்; இனிவரும் பன்னாட்டுத் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனைகளைத் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக இந்தியா கைப்பற்றியது.
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள். சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.
- மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
- உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.






