என் மலர்tooltip icon

    சென்னை

    • அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.
    • மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை :

    வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இணைந்து போட்டியிடுவது நேற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    அந்த வகையில், மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி! என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள், ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.

    ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பா.ஜ.க. -தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.

    தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.

    பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

    2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும். 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.

    தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர்.

    நாம் ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.

    மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

    தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.

    எனவே பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி!

    அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாகை சூடுவோம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார். 



    • காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
    • 'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.

    சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற துரை வைகோ கூட்டம் முடியும் முன்பாகவே திடீரென கோபித்துக்கொண்டு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.

    'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.

    'அவன வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்' என துரை வைகோவிடம் தொண்டர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.

    இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.

    நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்து விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 4 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    மாலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவிப்பார்.

    அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பார்.

    அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.

    இதை அடுத்து அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த நிகழ்வின் போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இவர்கள் தான் தேசிய அளவில் தேசிய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள்.

    எனவே இந்த பதவிக்கு பல மாவட்டங்களில் கடும் போட்டி நிலவியது. அங்கே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தி போட்டியில்லாமல் தலா ஒருவர் வீதம் தேர்வு செய்துள்ளார்கள். அவர்களின் பெயர் பட்டியலும் அறிவிக்கப்படும்.

    இந்த விழாவை கோலாகலமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளார்கள். மண்டப பகுதி முழுவதும் மலர்களாலும், கட்சிக் கொடி, தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டணி மற்றும் கட்சி தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    • கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர்.
    • செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர் ஒருவர் பகிர்ந்த வலைதள பதிலை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தி.மு.க. என்றால் வரலாறு.

    இந்திய அரசியல் சரித்திரத்திலேயே கவர்னர் கையொப்பம் இல்லாமலேயே மசோதாக்களை சட்டங்கள் ஆக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர். செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார்.
    • அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதற்கான முயற்சியில் பா.ஜ.க. கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது.

    இதனால் பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார். இதனை உணர்த்தும் வகையிலேயே பா.ஜ.க. நடத்திய இப்தார் நோன்பும் அமைந்திருந்தது.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய அதே நாளில்தான் அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் இப்தார் நோன்பில் பங்கேற்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பா.ஜ.க. கட்சி விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாகவே கூறப்பட்டது.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியை இறுதி செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதற்கு வலியுறுத்தக்கூடாது என்பதும் பிரதானமாக இருந்தது. இதனை ஏற்றுக்கொண்டே அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி வீசிய கூட்டணி பந்தில் ஓ.பன்னீர்செல்வம் கிளீன் போல்டாகி உள்ளார். இதனால் அடுத்த அரசியல் ஆட்டத்தை ஆடுவது எப்படி? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருக்கிறது.

    இதற்கிடையே பா.ஜ.க. கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சியை ஓ.பி.எஸ். தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுக்கும் என்பதும் தெரியவில்லை. அப்படி ஓ.பி.எஸ். கட்சி தொடங்கினாலும் பெரிய அளவில் பா.ஜ.க. கட்சி அவரை கண்டு கொள்ள வாய்ப்பு இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

    • இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
    • இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

    மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.

    ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பூத் கமிட்டி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த நேற்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக மேற்கு மண்டலமான கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.

    நேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் விரிவடைகிறது.

    பா.ம.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    நேற்றே கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியதாகவும், 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

    பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்ட பின் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    • மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
    • ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.

    சென்னை:

    எழும்பூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

    * மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    * ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.

    * இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை.

    * பா.ஜ.க.வுக்கு எடுபிடி போல்தான் இருந்தார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒருவர்கூட பேசவில்லை என்றார்.

    • தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.
    • பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, 'எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்' என்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    * 2 ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல் தான்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    * தோல்விக்கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

    * தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.

    * பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க. தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தனது சதித்திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறது.

    * பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

    * சுயமரியாதையின்றி டெல்லியில் மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே நேற்று, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, கருப்பு நிற புறாக்களை பறக்க விட்டும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும், அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 192 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
    • தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம். நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

    தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.

    அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 16-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

    ×